நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்: விஷால் டீம் அதிரடி நடவடிக்கை

நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ்  நீக்கம்: விஷால் டீம் அதிரடி நடவடிக்கை

நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பி வருவதாக கூறி நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ், உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் இரண்டரை ஆண்டுகளாக நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. இதனையடுத்து கடந்த மார்ச் 20-ம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்று நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜூக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பட்டது. அதில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி வருவதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஏன் உங்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்தின் சார்பில் பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவே அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக்கூடாது என உள்ளதால் நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜும் உதயாவும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in