வெளியானது `பீஸ்ட்': அதிகாலையில் குத்தாட்டம் போட்ட ரசிகைகள்

வெளியானது `பீஸ்ட்': அதிகாலையில் குத்தாட்டம் போட்ட ரசிகைகள்

நடிகர் விஜய்யின் `பீஸ்ட்' திரைப்படம் அதிகாலையில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியானது. ரசிகைகள் குத்தாட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரைப்படத்தை பார்க்க குவிந்ததோடு அங்கு ஒலித்த பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.

இன்று அதிகாலை காட்சிக்கு திரையரங்கிற்கு முன்பு குவிந்த பல பேரிடம் படத்தை பார்க்க டிக்கெட் இல்லை என்றாலும் காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் திரையரங்கில் கூட்டம் அத்துமீறி நுழைந்ததால் திரையரங்க பணியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். டிக்கெட் இல்லை என்றாலும் திரையரங்கில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் தானாகவே இருக்கைகளில் சென்று அமர, என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்கள் விழிபிதுங்கி நின்றார்கள்.

ஒருகட்டத்தில் டிக்கெட் உடன் வந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு இடமில்லாமல் தவிக்க பலரும் திரைப்படத்தை திரையரங்கிற்குள் நின்றுகொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டது. இன்னும் சில ரசிகர்கள் திரையரங்கில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகளை உடைத்து ஆர்ப்பரிக்க தொடங்கினர். அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்கலாம் என்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து அதற்கான டிக்கெட் விலை பல மடங்கு ஏற்றிவைக்கும் திரையரங்குகள் இதுபோன்ற சவால்களையும் எதிர்கொள்ளும் நிலை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.