அல்லு அர்ஜுன் படத்தின் இந்தி வெளியீடு திடீர் ரத்து

அலா வைகுந்தபுரம்லோ
அலா வைகுந்தபுரம்லோ

அல்லு அர்ஜுனின், ’அலா வைகுந்தபுரம்லோ’படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடும் முயற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்துக் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம், ’அலா வைகுந்தபுரம்லோ’. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படத்தில், தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, நிஷாந்த், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இதன் இந்தி டப்பிங் உரிமையை, கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மனீஷ் ஷா என்பவர் பெற்றார்.

இந்நிலையில், ’அலா வைகுந்தபுரம்லோ’படம் ’ஷேஜாதா’ (Shehzada) என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. ரோகித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், கீர்த்தி சனான் நடிக்கின்றனர். பூஷன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனம் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கிறது.

இதற்கிடையே, ’அலா வைகுந்தபுரம்லோ’ படம் டப் செய்யப்பட்டு, டிவியிலோ, ஓடிடி தளங்களிலோ வெளியானால், ’ஷேஜாதா’ படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால், டிவி மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடாமல் இருக்க, மனீஷ் ஷாவுக்கு ரூ.8 கோடியை தயாரிப்பாளர் கொடுத்ததாகச் சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் வரும் 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா’ படம் இந்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்த முடிவை மனீஷ் ஷா எடுத்தார். இதனால், ’ஷேஜாதா’ படக்குழு அதிர்ச்சி அடைந்தது. டப் செய்யப்பட்டு வெளியானால், இந்தி ரீமேக்கின் வசூல் பாதிக்கப்படும்.

இதனால், ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் தெலுங்கு தயாரிப்பாளரும் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த், மும்பை சென்று மனீஷ் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் அந்தப் படத்தின் இந்தி டப்பிங்கை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் முடிவை அவர் கைவிட்டார். இதை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in