நிறுவனரை நீக்கிய நெட்ஃபிளிக்ஸ்: 25 ஆண்டு சகாப்தம், அடுத்து..?

ரீட் ஹேஸ்டிங்ஸ்
ரீட் ஹேஸ்டிங்ஸ்

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது 25 ஆண்டுகால நிறுவனத் தலைவரை நீக்கியிருக்கிறது. இது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நெட்ஃபிளிக்ஸை சரிவிலிருந்து மீட்குமா?

கரோனா பொதுமுடக்க காலம், உலகின் மூலை முடுக்கெல்லாம் ஓடிடி புகழை பரவச் செய்திருக்கிறது. இன்றும் புற்றீசலாய் ஓடிடி நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. திறமை உள்ள படைப்பாளர்களுக்கு தளம் அமைத்து தந்ததோடு, ரசிகர்களின் சிலாகிப்புக்கு உலகளாவிய படைப்புகளை ஒரே செயலியில் குவித்த வகையில் ஓடிடி தளங்கள் வரவேற்பு பெற்று வருகின்றன.

25 ஆண்டுகளுக்கு முன்னே அதற்கான கனவில் இருந்தவர் ரீட் ஹாஸ்டிங்ஸ். பொழுதுபோக்கின் புதிய அத்தியாயத்தை எழுதும் முயற்சியில், 1997ல் அவர் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு அஸ்திவாரம் இட்டார். அப்போது இந்தளவுக்கு இணைய வேகம் வளரவில்லை. நேயர் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் வீடியோ மற்றும் திரைப்பட கேசட்டுகளை தபாலில் அனுப்பும் ’லெண்டிங் லைப்ரரி’ நிறுவனத்தை ஒத்த வர்த்தகத்தை அவர் நடத்தி வந்தார். கட்டற்ற இணையம் அறிமுகமானபோது தற்போதைய நெட்ஃபிளிக்ஸ் வடிவத்துக்கு வித்திட்டார்.

இன்றைக்கும் ஓடிடி உலகில் நுழைவோருக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே முன்னோடி. ஓடிடிக்கு என படைப்புகளை உருவாக்குவோரும், நெட்ஃபிளிக்ஸ் படைப்புகளின் வாயிலாகவே தங்களை பட்டை தீட்டிக்கொள்கிறார்கள். உலகம் தழுவிய வரவேற்பு காரணமாக உச்சம் தொட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், போட்டி நிறுவனங்களின் உதயத்தால் சரிவு காண ஆரம்பித்திருக்கிறது.

முக்கியமாக, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு படைப்புகளை அள்ளித்தந்த டிஸ்னி, லயன்ஸ்கேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் சொந்தமாக ஓடிடி கடை விரித்தன. பிராந்திய அளவில் தொடங்கப்பட்ட உள்ளூர் ஓடிடிகள் நெட்ஃபிளிக்ஸின் உலக படைப்புகளுக்கு மாற்றான சொந்த மண்ணின் படைப்புகளை அடுக்கின. இவற்றை விட ஒப்பீட்டளவில் நெட்ஃபிளிக்ஸ் கட்டணம் அதிகம் என்பதாலும், ஒரே கணக்கை பலபேர் பயன்படுத்துவதை தடுக்க முடியாததும் நெட்ஃபிளிக்ஸ் சரிவுக்கு கூடுதல் காரணமானது.

நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளாக, கட்டணக்குறைப்பு, விளம்பர அடிப்படையிலான சந்தா திட்டம் உள்ளிட்ட புதிய முயற்சிகளும் அதற்கு கைகொடுக்கவில்லை. குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரும் சந்தையை நம்பி பேராவலுடன் நெட்ஃபிளிக்ஸ் இங்கே மேற்கொண்ட முதலீடுகள் அதன் கையைக் கடித்தன. இதனால் அமெரிக்காவை தலையிடமாக கொண்ட நெட்ஃபிளிஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகமானது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது முதலே அதன் சிஇஓ பொறுப்பை வகித்து வரும் ரீட் ஹேஸ்டிங்ஸ், தனக்கு பிறகான தூண்களை உருவாக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வந்தார். அந்த வகையில் க்ரெக் பீட்டர்ஸ், டெட் சாராண்டாஸ் என இருவரை சிஓஓ பொறுப்பில் தனக்கு அடுத்தபடியாக அமர வைத்தார். தற்போது அவர்களுக்கு முழு பொறுப்பையும் வழங்கி சிஇஓ பதவியிலிருந்து அவர் விலகி உள்ளார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக, நிறுவனத்தின் இயக்குநர் குழு எடுத்த முடிவின் அடிப்படையிலும் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. டெக் நிறுவனங்களின் நிறுவனர்கள் அப்புறப்படுத்தப்படும்போது, ஒதுக்கப்படும் கௌரவ பொறுப்பான நிர்வாக தலைவர் இருக்கையில் ரீட் ஹாஸ்டிங்ஸ் அமர்த்தப்படுகிறார். தள்ளாடும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சிக்கல்கள், ஓடிடி உலகின் பிதாமகன் ஓரங்கட்டப்படுவதன் வாயிலாக தீர்வாகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in