சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படமெடுக்க தயார்! - மனம்மாறிய ஞானவேல்ராஜா

சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படமெடுக்க தயார்! - மனம்மாறிய ஞானவேல்ராஜா
ஞானவேல்ராஜா

'மிஸ்டர் லோக்கல்' படத்தில் தனக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனம் திறந்துள்ளார்.

யூடியூப் தளம் ஒன்றுக்கு அளித்துள்ள அந்தப் பேட்டியில் “ மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை பேசியிருந்தோம். அந்தப் படத்திற்கு பிறகு, நான் அடுத்து ஒரு பெரிய படம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. எனக்கு அந்த சமயத்தில் பணப்பிரச்சினை இருந்தது. அதனால் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த உறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவரும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து இந்த விஷயத்தில் சட்டபூர்வ நடவடிக்கைக்குப் போய்விட்டார்.

அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தில் 30 முதல் 40 சதவீதத்தை ஏற்கெனவே கொடுத்து விட்டோம். மீதியை இப்போது அவருக்குக் கொடுத்து வருகிறோம். அவசரப்பட்டு வழக்குப்போட்டுவிட்டாரே என்று ஆரம்பத்தில் எனக்கும் அவர் மீது சற்று கோபம் இருந்தது. பிறகு யோசித்துப் பார்த்தேன். அவருக்குச் சேரவேண்டிய பணத்தைத்தானே கேட்கிறார் என்று நினைத்து அமைதியாகிவிட்டேன்.

இது விஷயமாக சிவகார்த்திகேயனை பலமுறை வாட்ஸ்-அப் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. வருங்காலத்தில் அவராக விருப்பபட்டு தேதி கொடுத்தால் அவரை வைத்து படம் எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா.

இந்தப் பேட்டியில் சிம்புவின் 'பத்துதல' பற்றியும் பேசியிருக்கும் ஞானவேல்ராஜா, "இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை நாங்கள் பெற்று இயக்குநர் கிருஷ்ணாவை அணுகினோம். இந்தப் படத்தின் கதைக்கு தமிழில் விஜய் சேதுபதி, அஜித், சிம்பு ஆகிய மூவருமே மிகப் பொருத்தமாக இருப்பார்கள். அந்த வகையில் முதலில் சிம்புவிடம் கதையைச் சொன்னோம்; அவருக்குப் பிடித்து விட்டது. கிருஷ்ணா மிக அருமையாக படத்தை இயக்கியிருக்கிறார். ரஹ்மான் இசை படத்திற்கு கூடுதல் பலம். படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது விக்ரமை வைத்து இயக்குநர் இரஞ்சித் இயக்கும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ‘அட்டகத்தி', 'மெட்ராஸ்' உள்ளிட்ட இரஞ்சித்தின் முந்தைய படங்களில் எந்த மாதிரியான விஷயங்கள் கவனம் பெற்ற பெற்றதோ அதெல்லாம் இந்தப் படத்திலும் நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in