அந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதா? தயாரிப்பாளர் வழக்கு

ரவி தேஜா
ரவி தேஜா

ரவி தேஜா நடித்துள்ள 'கில்லாடி’ படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தித் திரைப்பட தயாரிப்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தெலுங்கு ஹீரோ, ரவி தேஜா நடித்துள்ள திரைப்படம் ‘கில்லாடி’. இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ரமேஷ் வர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், மீனாக்‌ஷி சவுத்ரி, டிம்பிள் ஹயாதி, அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கில்லாடி- ரவிதேஜா, டிம்பிள் ஹயாதி
கில்லாடி- ரவிதேஜா, டிம்பிள் ஹயாதி

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யநாராயணா தயாரித்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு எதிராக இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின், டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவர் அக்‌ஷய்குமார் நடித்த ’கில்லாடி’ படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

ரத்தன் ஜெயின், ரவிதேஜா, அக்‌ஷய்குமார்
ரத்தன் ஜெயின், ரவிதேஜா, அக்‌ஷய்குமார்

இதுபற்றி அவர் கூறும்போது, "கில்லாடி’ படத்தின் இந்தி டிரைலரை 8-ம் தேதி ரிலீஸ் செய்தார்கள். அதைக் கண்டதும் உடனடியாக 9-ம் தேதி வழக்கு தொடர முடிவு செய்தோம். 11-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். கில்லாடி, அக்‌ஷய் குமார் நடிப்பில் நாங்கள் தயாரித்த ஹிட் படம். தலைப்பை பயன்படுத்த அனுமதிகூட கேட்கவில்லை. இப்போது ’கில்லாடி’ என்று கூகுளில் தேடினால், எங்கள் படம் வரவில்லை. அவர்கள் படம்தான் வருகிறது. நாளை, இந்தியில் பிரபலமான பல படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்தினால், அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்?

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் அங்குள்ள சங்கத்தில் தலைப்பைப் பதிவு செய்துவிட்டு, அதே தலைப்பில் இந்தியிலும் வெளியிடுகிறார்கள். அவர்கள் ஏன் இந்தி தலைப்பை வைக்கிறார்கள்? இது டிரெண்டாக மாறியுள்ளது. நான் தொடர்ந்துள்ள வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in