'ஜெய் பீம்' இயக்குநரிடம் கண்டிஷன் போட்ட ராவ் ரமேஷ்

நடிகர் ராவ் ரமேஷ்
நடிகர் ராவ் ரமேஷ்

’ஜெய் பீம்’ படத்தில் நடிக்கக் கேட்டதும் அன்பான கண்டிஷன் போட்டதாக, அந்தப் படத்தில் அட்டர்னி ஜெனரலாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’ஜெய் பீம்’. இதில், அட்டர்னி ஜெனரலாக ஆச்சரியப்படுத்தியவர், தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ். தெலுங்கில் 120 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அவர், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

’ஜெய் பீம்’ படத்தில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது:

“நான்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று என்னைக் கேட்டதில் ஆச்சரியமான சந்தோஷம். ஞானவேல் என்னைக் கேட்டதும், அன்பான கண்டிஷன் போட்டேன். நான் நடித்தால் அதற்கு நான்தான் டப்பிங் பேசுவேன் என்பதுதான் அந்தக் கண்டிஷன். எந்தக் கேரக்டராக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் அதில் நாமே நடித்து நம் மாடுலேஷனில் பேசினால்தான் அதற்கு ஜீவன் இருக்கும் என்ற கருத்து கொண்டவன் நான். அதனால்தான் அப்படிக் கேட்டேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டதும் மகிழ்ச்சியுடன் நடித்தேன்.

ஜெய் பீம் படத்தில் ராவ் ரமேஷ், சூர்யா
ஜெய் பீம் படத்தில் ராவ் ரமேஷ், சூர்யா

அது மட்டுமல்லாமல் தமிழ் அழகான மொழி. நான் வளர்ந்தது சென்னையில்தான். தி.நகர் ராமகிருஷ்ணாவில்தான் பள்ளிக் கல்வி படித்தேன். அதனால் பிறமொழிக் கலப்பு இல்லாமல் சுத்தமாகவும் தமிழ்ப் பேச முடியும். ’ஜெய் பீம்’ படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்கு, இயக்குநர் ஞானவேல்தான் காரணம். அவர்தான் என் கேரக்டரை அணு அணுவாக என்னுள் ஏற்றினார். எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு கோபம் வேண்டும் என்றெல்லாம் அந்த ஸ்கேல் மாறாமல் நடிப்பை வாங்கினார்.

என் தந்தை, ராவ் கோபால் ராவ் தெலுங்கில் நானூறு படங்களுக்கு மேல் நடித்த சாதனையாளர். அந்தத் திறமை என்னுள் இயல்பாகவே இருப்பது உண்மைதான். நடிகர் சூர்யா, முன்னணி ஹீரோ என்ற பந்தாவோ, பகட்டோ இல்லாமல் நடந்து கொண்டார். செட்டில் எல்லோருடனும் இயல்பாக, மரியாதையுடன் பழகினார். அந்தத் தன்மைதான் என்னை மட்டுமல்லாமல் எல்லோரையும் நன்றாக நடிக்க வைத்தது.

’ஜெய் பீம்’ பார்த்துவிட்டு பெரிய இயக்குநர்கள் நடிக்க அழைத்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் முடிவானதும் சொல்கிறேன்”. இவ்வாறு ராவ் ரமேஷ் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in