ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 63

திரைக்கதை தந்த பாபா
எழுத்தாளர்கள் சுபாவுடன்...
எழுத்தாளர்கள் சுபாவுடன்...

அமெரிக்காவுக்கு சென்று ஆன்மிகம் பரப்பிய துறவியான பரமஹம்ச யோகானந்தர், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற பெயரில் எழுதியிருந்தார். அதை வாசிக்கத் தொடங்கியபோது தனக்கு ஏற்பட்ட மெய்ஞான உணர்வினைப் பற்றி, அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டபோது, அதன் வெளியீட்டு விழாவில் ரஜினி மனம்விட்டு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த நூலை வாசித்து முடித்ததும் ‘பாபா’ படத்துக்கான கதை மனதில் தோன்றியதையும் அந்த விழாவில் கூறினார்.

ராமா சுவாமியின் புத்தகம்

அதேபோல் ரஜினியை பெரிதும் ஈர்த்த மற்றொரு புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை எழுத்தாளர்கள் சுபாவிடம் ரஜினி ஒப்படைத்தார். இதுபற்றி தொடர்ந்து விவரிக்கிறார்கள் எழுத்தாளர்களான சுபா:

“மலேசியாவில் பெரும் வணிகராக வெற்றிபெற்றிருந்த மோகன் என்பவர், தொழில் வாழ்க்கையின் வெற்றியைத் தாண்டி இந்த உலகில் வேறு ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து, ஆன்மிகத்தின் பாதையில் திரும்பினார். அதன்பொருட்டு துறவு வாழ்க்கையை ஏற்று மோகன் சுவாமியாகி, தன்னுடைய மெய்ஞான குருவைத் தேடி அலைந்தார். அப்போதுதான் மற்றொரு இமாலயத் துறவியான ‘சுவாமி ராமா’ எழுதிய ‘Living with the Himalayan Masters’ என்கிற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு மோகன் சுவாமிக்குக் கிடைத்தது.

அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் தாம் தேடிய குரு சுவாமி ராமா தான் என்பதைக் கண்டுகொண்டு அவரிடம் சரணாகதி அடைந்தார் மோகன் சுவாமி. இந்தப் புத்தகம் பற்றி கேள்விப்பட்ட ரஜினி, அதைத் தேடிப்பிடித்து படித்த பின், சுவாமி ராமாவின் மீது பெரும் நம்பிக்கையும் மதிப்பையும் வரவழைத்துக் கொண்டார். அத்துடன், அவரை இமயமலைப் பயணத்தில் சந்திக்கவும் விருப்பினார். ஆனால், இயலாமல் போய்விட்டது. ஆனால், அவருடைய நேரடிச் சீடரான மோகன் சுவாமியை ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்தபோது சந்தித்தார் ரஜினி. அவரைச் சந்தித்ததை தன் வாழ்வில் ஒரு முக்கியத் தருணமாகக் கருதினார் ரஜினி. ஒரு கட்டத்தில் மோகன் சுவாமிக்கும் ரஜினிக்கும் ஆன்மிகத் தளத்தில் நட்பு துளிர்த்தது.

மோகன் சுவாமியுடன் நட்பு

சுவாமி ராமாவையே தன் குருவாக கண்டைந்த கொண்ட மோகன் சுவாமி, அவரைப் பார்க்க வேண்டும் என்ற பெரும் விழைவுடன் இந்தியாவுக்கு வந்தார். அதன்படி அவர் குருவைத் தேடிச்சென்று அடைக்கலமானதும் அவரது நிழலிலேயே தன் நாட்களைக் கழிக்க விரும்பியதும் அதன் பொருட்டு அவர் மேற்கொண்ட சாதனாக்களும் அவர் வாழ்வில் நடந்தேறிய சம்பவங்களும் மிகவும் சுவாரசியமானவை. தனது குருவுடனான அந்த அற்புத அனுபவங்களைத் தொகுத்து மோகன் சுவாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். ‘Journey with A Himalayan Master Swami Rama’ என்கிற தலைப்பில் அந்தப் புத்தகம் இறுதி வடிவம் பெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. ‘தன்னுடைய வணிக சாம்ராஜ்ஜியத்தைத் துச்சமெனத் துறந்திடத் துடிக்கும் ஒரு மாபெரும் வெற்றியாளன் அதற்கு எதிர்திசையில் ஆன்மிகப் பாதையில் செல்வது’ தன்னுடைய வாழ்க்கையுடன் ஓரளவுக்கு ஒத்துப்போவதை ரஜினி உணர்ந்திருக்க வேண்டும். அதனால் மோகன் சுவாமியின் வாழ்க்கையைக் கூறும் அந்தப் புத்தகத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அதை மொழியாக்கம் செய்து தரும் பொறுப்பை எங்களிடம் கொடுத்தார்.

மோகன் சுவாமி ஓர் எழுத்தாளர் அல்ல. பொங்கும் தன் உணர்வுகளையும், அவை குறித்த அனுபவங்களையும் அவர் தொகுத்தபோது சில விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்லியிருந்ததை கவனித்தோம். படிப்பவர்களுக்கு சலிப்பு வந்துவிடக்கூடாது, அதன் சுவாரஸ்யத்தால் அதிக வாசகர்களைச் சென்று சேர வேண்டும், பலருக்கும் ஆன்மிக விளிப்பு கிடைக்க வேண்டும், ரஜினியும் எண்ணமும் அதுதானே என்று நாங்கள் நினைத்தோம். அதனால், ரஜினியின் நண்பர் எழுதியதை அவசியமெனத் தோன்றிய இடங்களில் எடிட் செய்து, எழுதி அனுப்பியிருந்தோம்.

அதைப் படித்துவிட்டு ரஜினி என்ன சொல்லப்போகிறாரோ என்று காத்திருந்தோம். இரண்டு நாட்களில் திடீரென்று ரஜினி வீட்டியிலிருந்து போன். ரஜினி பேசினார். ‘படிச்சேன்... சூப்பரா இருக்கு. கரெக்டா எடிட் பண்ணியிருக்கீங்க’ என்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசினார். எங்களுக்குப் பரபரப்பாயிருந்தது. ‘புத்தகத்துல மத்த பகுதிகள்லயும் ஒரே விஷயம் மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருந்தா, அதைச் சுருக்கி எழுதலாமா?’ என்று அவரிடம் அனுமதி கேட்டோம். ‘நீங்க கரெக்டாத்தான் பண்றீங்க... அப்படியே செய்யுங்க’ என்றார்.

ஆங்கிலப் புத்தகத்தில், இறுதி அத்தியாயங்களில், மோகன் சுவாமி சில நாட்களிலேயே தனது பரபரப்பான மலேசிய வாழ்வைத் துறந்துவிட்டு இமயத்திற்குச் சென்று, தன் குருவின் ஆசிரமத்தில் தன் ஆன்மிகத் தேடலைத் தொடரவிருப்பதாக எழுதியிருந்தார். தமிழில் அப்புத்தகம் தயாராகும்போது, அவர் அவ்வாறு செய்திருக்கக் கூடும் என்று தோன்றியதால், அவருடைய அப்போதைய நிலை என்ன என்று அறிந்துகொண்டு, அதையும் புத்தகத்தில் சேர்க்கலாமே என்று ரஜினிக்குத் தெரிவித்தோம். மின்னஞ்சல் மூலம் அதையறிந்து சொல்வதாகத் தெரிவித்த ரஜினி, தன்னை நேரில் சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தந்தார்.

ரஜினியைச் சந்தித்தோம்

ரஜினியின் வீட்டுக்கு முதன்முறையாக சென்றோம். ரஜினியின் உதவியாளர் சுப்பையா எங்களை வரவேற்று, உள்ளே அனுப்பினார். ரஜினியை வழிநடத்தும் ஆன்மிக குருமார்களின் ஒளிப்படங்களும் ஓவியங்களும் அலங்கரித்த அந்த அறையில், கருப்பு வேட்டியும், தூய வெள்ளைச் சட்டையும் அணிந்து, செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார் ரஜினி. எங்களைப் பார்த்ததும், பேப்பரை மடித்து வைத்துவிட்டு, பேசத் தொடங்கினார். நாங்கள் பணிபுரிந்திருந்த சினிமாக்கள் பற்றிப் பேசினார். அவருடன் பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்தபோது நாங்கள் ஏற்க முடியாமல் போனதுபற்றிச் சொன்னோம்.

‘தெரியும்... தெரியும். கடைசில அந்தப் படத்தை நானும் பண்ண முடியல’ என்றார். சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடர் பற்றிக் குறிப்பிட்டார். அந்த அனுபவங்களைப் பற்றி சற்று நேரம் கேட்டார். மோகன் சுவாமியை மட்டுமல்ல, ரஜினியையும் இமயத்தின்பால் ஈடுபாடுகொள்ளச் செய்த ஸ்வாமி ராமா எழுதிய ‘Living with the Himalayan Masters’ நூலை வாசித்த பின்னரே மோகன் சுவாமியின் சூலை மொழிபெயர்க்கத் தொடங்கினோம் என்பதையும், சுவாமி ராமாவின் நூல் எங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரிடம் சொன்னோம். அவர் முகம் மலர்ந்தது. அடுத்து தானாகவே எங்கள் பேச்சு ஆன்மிகம் பற்றித் திரும்பியது.

ஒவ்வொருவருக்கும் குரு அவசியம் என்பது பற்றி மனம்விட்டு உரையாடினார் ரஜினி. விடைபெறும் முன்பு, ‘நாம அடிக்கடி சந்திக்கணும்... சினிமா பத்திப் பேசாம, ஆன்மிகம் பத்திப் பேசுவோம்’ என்றார். மோகன் சுவாமியின் புத்தகத்துக்குத் தமிழில் நாங்கள் கொடுத்த தலைப்பு: ‘இமய குருவுடன் ஓர் இதயப் பயணம்’. அதை மிகவும் ரசித்துப் பாராட்டினார் ரஜினி” என்று சொன்னார்கள் எழுத்தாளர்கள் சுபா.

கோவையுடன் ஒரு ஆன்மிக பந்தம்!

சுவாமி ராமா மட்டுமல்ல... தன்னை மெய்யுணர்வு கொள்ள வைத்த உண்மையும் மேன்மையும் மிகுந்திருந்த பல துறவிகளை ரஜினி ஏற்கத் தயங்கவில்லை. அந்த வரிசையில் தயானந்த சரஸ்வதி சுவாமியும் முக்கியமானவர். ‘எஜமான்’ பட ரிலீஸைத் தொடர்ந்து தமாகா - திமுக அரசியல் ஆட்டத்தில் உழன்ற ரஜினி, அவ்வப்போது வந்து சென்றது கோவையின் ஆனைகட்டிக்கு. இங்கேதான் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆர்ஷ வித்ய குருகுலம் அமைந்திருக்கிறது. இது தயானந்த சரஸ்வதி ஆசிரமம் என்றும், ஆர்ஷ வித்ய குருகுலம் என்றும் அழைக்கப்படுவதற்கு முன்பே ரஜினி ஆசிரமம் என்றே இப்பகுதியில் வசிக்கும் உள்ளுர் மக்களின் மனங்களில் பதிவாகியிருக்கிறது.

பரந்து விரிந்த ஆனைகட்டி மலைக்குன்றுகள் மத்தியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தின் நடுவே ஆசிரமம். அங்காங்கே வீடுகள் குடில்கள். இந்த குடிலில் ஒன்று ரஜினிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. ரிஷிகேஷத்திலிருக்கும் சுவாமிஜி தனது ஆனைகட்டி ஆசிரமத்திற்கு வருடத்தில் ஏதாவது ஒரு முறை வருவதுண்டு. அந்த தகவல் பிரதான சீடர்களில் ஒருவரான ரஜினிக்கு தெரிவிக்கப்படுவதுண்டு.

பிறகென்ன, சுவாமிஜி இங்கே இருக்கும்போதெல்லாம் ரஜினியும் இருப்பார். ஒரு வாரம். பத்து நாள். மாலை வேளைகளில் ஆசிரமத்திற்கு வெளியே ரஜினி நடந்து செல்வதுண்டு. வழி நடையில் ஆடு, மாடு மேய்க்கும் எளிய மக்கள் பார்த்துவிட்டு, “ஹேய்... ரஜினி” என பிரமிப்பது உண்டு. அருகில் போய் கை குலுக்குவதும் உண்டு. இந்த விஷயம் அரசல் புரசலாக காடுகள் தாண்டி நகரங்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. இதையறிந்த ரசிகர்களால் சும்மாயிருக்க முடியுமா?

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in