
ராஜமுந்திரி சிறை முன்பு செல்ஃபி எடுத்து ‘நான் வெளியே...அவர் உள்ளே’ என்ற கேப்ஷனோடு, சிறையில் இருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கிண்டலடிக்கும் விதமாக இயக்குநர் ராம்கோபால் வர்மா பகிர்ந்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்தப் பக்கம் காரில் சென்று கொண்டிருந்த இயக்குநர் ராம்கோபால் வர்மா, காரை நிறுத்தி ராஜமுந்திரி சிறை முன்பு செல்ஃபி எடுத்திருக்கிறார். இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘ராஜமுந்திரி சென்ட்ரல் ஜெயிலில் ஒரு செல்ஃபி. நான் வெளியே... அவர் (சந்திரபாபு நாயுடு) உள்ளே’ என்ற நாயுடுவை கிண்டலடிக்கும் விதமாக கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
ஜெயில் வாயில் முன்பாக காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் சாலையில் நின்று ராம்கோபால் வர்மா செல்ஃபி எடுத்ததாகத் தெரிகிறது. சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக ராம்கோபால் வர்மா செல்ஃபி எடுத்ததால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.