கீர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மின் சாயல்: இயக்குநர் லிங்குசாமி கணிப்பு

கீர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மின் சாயல்: இயக்குநர் லிங்குசாமி கணிப்பு

இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி , சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை ராம் பொத்தினேனி என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்துள்ள படம், 'தி வாரியர்’. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ஆதி வில்லனாக நடித்துள்ளார். நதியா உட்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் வரும் 14 -ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்," 'தி வாரியர்' படம் நன்றாக வந்துள்ளது. நதியா மேடத்துடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது சரியான திரைப்படத்தில் நடந்துள்ளது. கீர்த்தி ஷெட்டிக்கு, மீரா ஜாஸ்மினின் சாயல்கள் உள்ளன. அவர் திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி. அவருடன் ஆரம்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பின் குடும்ப நண்பர்களாகிவிட்டோம். இந்த படத்தில் ஆதி, சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இதுவரை நான் செய்த படங்களில் அவர்தான் சிறந்த வில்லன். அடுத்த ஆண்டு ‘சிறந்த வில்லன் பிரிவில்’ அதிக விருதுகளை அவர் வெல்வார். இந்த திரைப்படத்திற்காக நான் முழு மனதுடன் உழைத்தேன். இப்படம் அவருக்கு நல்ல லாபத்தை தரும். 'சண்டக்கோழி', 'பையா' நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் 'வாரியர்' அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி , சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர்" என்று கூறினார்.

ராம் பொத்தினேனி
ராம் பொத்தினேனி

நடிகர் ராம் பொத்தினேனி பேசும்போது," எனது நீண்ட நாள் கனவான தமிழ் சினிமா அறிமுகம் இப்படி பிரம்மாண்டமாக அமையும் என நினைக்கவில்லை. நானும் ,கீர்த்தியும் மிகவும் பாக்கியசாலிகள். என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் சிட்தூரிக்கு நன்றி. இந்த படத்தில் நதியா அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்றார்.

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி பேசும்போது, "தெலுங்கில், ராம் ஏற்கனவே 'வாரியர்' என்று அழைக்கப்படுகிறார். இந்தப் படம் வெளியான பிறகு தமிழிலும் அவர் அழைக்கப்படுவார். லிங்குசாமி சார் ஒரு போர்வீரன். அவர் மீண்டும் போர்க்களத்தில் இருக்கிறார். இன்று அவருக்கு ஆதரவாக பலர் வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார்.

இயக்குநர்கள், பாரதிராஜா , மணிரத்னம், ஷங்கர், வசந்தபாலன், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன், பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் விஷால், ஆதி, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in