‘ஆர்ஆர்ஆர்’ ஒரு சர்க்கஸ், ‘கே.ஜி.எஃப் 2’- வை 5 நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியலை: சர்ச்சை இயக்குநர் பரபரப்பு

‘ஆர்ஆர்ஆர்’ ஒரு சர்க்கஸ், ‘கே.ஜி.எஃப் 2’- வை 5 நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியலை: சர்ச்சை இயக்குநர் பரபரப்பு

யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட பலர் நடித்த ‘கே.ஜி.எஃப் 2’ பான் இந்தியா முறையில் வெளியாகி, வசூலில் சாதனைப் படைத்துள்ளது. ரூ.1200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் பாலிவுட் திரையுலகில் பலருக்குப் பிடிக்கவே இல்லை என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி வர்மா கூறியதாவது:

பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குநர் ஒருவர், ‘அந்தப் படத்தை பார்க்க 5 முறை முயன்றேன். அரை மணி நேரத்துக்கு மேல் முடியவில்லை’ என்று என்னிடம் சொன்னார். பிறகு அவர் அடுத்தப் படத்துக்கான வேலையில் இறங்கிவிட்டார். ஹாலிவுட்டில், ‘நீங்கள் கதை பற்றி வாதிடலாம், ஆனால், வெற்றியுடன் வாதிட முடியாது’ என்பார்கள். அதே போல அந்தப் படத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் வெற்றியைப் புறக்கணித்துவிட முடியாது.

லாஜிக் இல்லாத அந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியால் இந்தி சினிமாத் துறை குழப்பத்தில் இருக்கிறது. அதற்காக எனக்கு இந்தப் படம் பிடிக்காமல் இல்லை. அதுபற்றி சொல்ல சரியான வார்த்தை கிடைக்கவில்லை. அந்தப் படத்தை, ’ம், அப்புறம் என்ன?’ என்றே பார்த்தேன்.

’ஆர்ஆர்ஆர்’ படம் பற்றி இயக்குநர் ராஜமவுலியிடம் ஒரு சர்க்கஸ் போல இருக்கிறது என்று ஜாலியாகச் சொன்னேன். சர்க்கஸ் என்றால் நமக்கு கோமாளிகள்தான் நினைவுக்கு வருவார்கள். அந்தப் படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் ஒரு சிறுவனை மீட்கும் காட்சி, சர்க்கஸை நினைவூட்டியது. அதில் கயிறுகளைக் கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஆடுவார்கள்.

ஆனால், ’கே.ஜி.எஃப் 2’ படம் முற்றிலும் வித்தியாசமானது. அமிதாப்பச்சன் நடித்து 70- களில் வெளியான படங்களைப் போன்றது. அதை காலாவதியான ஸ்டைல் என்று நினைத்திருந்தோம். ஒரு காட்சியில் இயந்திரத் துப்பாக்கியால் சுடுவார் ஹீரோ. அதற்கு ஜீப்புகள் ஏன் காற்றில் பறக்க வேண்டும்? யாராவது பதில் சொல்வார்களா? ஆனால், நான் கேள்வி கேட்பது முட்டாள்தனம். நான் சொல்ல முயற்சிப்பது இதுபோன்ற விஷயங்களைத்தான்.

இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். சூப்பர் ஹிட்டான இந்தப் படங்கள் பற்றி இவர் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in