‘ராஜமௌலியை கொல்லப் போகிறோம்’: ராம் கோபால் வர்மா பகிரங்கம்!

ராம் கோபால் வர்மா - எஸ்.எஸ்.ராஜமௌலி
ராம் கோபால் வர்மா - எஸ்.எஸ்.ராஜமௌலி

கோல்டன் க்ளோப் விருதை தொடர்ந்து ஆஸ்கர் விருதையும் குறிவைத்திருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும், அதன் இயக்குநர் ராஜமௌலியையும் தனக்கே உரிய பாணியில் சிலாகித்திருக்கிறார் சக இயக்குநரான ராம் கோபால் வர்மா.

அண்மைக்காலமாக தன்னுடைய படங்கள் மூலமாக ரசிகர்கள் மகிழ்விக்கிறாரோ இல்லையோ, சமூக ஊடகங்கள் வாயிலாக ரசிகர்கள் மற்றும் தன்னை பின்தொடருவோருக்கு சுவாரசியங்களை அள்ளி வழங்கி வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அரசியல்வாதிகள் முதல் சக சினிமா பிரபலங்கள் வரை ராம் கோபால் வர்மாவின் வாயில் விழுவோர் அனைவரும், அவரது சமூக ஊடக பதிவுகளில் சந்தி சிரித்து வருகிறார்கள். சமீபத்திய உதாரணம் நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண். மிக நேர்த்தியான பகடியுடன் பவன் கல்யாணை சாடி வருவதும், பதிலுக்கு பவன் கல்யாண் ரசிகர்களிடம் திட்டுக்கள் வாங்குவதும் ராம் கோபால் வர்மாவின் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது.

இவற்றின் மத்தியில் ராம் கோபால் வர்மா வெளியிட்ட அண்மை பதிவு ஒன்று தெலுங்கு படவுலகுக்கும் அப்பால் சினிமா உலகத்தினரையும், திரைப்பட ரசிகர்களையும் அதிரச்செய்தது. ஆர்ஆர்ஆர் படத்துக்காக கோல்டன் க்ளோப் விருது வரிசையில் ஆஸ்கரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ராஜமௌலியை ‘பொறாமை காரணமாக கொல்லப்போகிறேன்’ என்று ராம் கோபால் வர்மா பகிரங்கமாக அறிவித்திருந்ததே அதற்கு காரணம்.

ராஜமௌலிக்கான நேரடி செய்தியாக வெளியான அந்த பகிர்வில், ‘ராஜமௌலி சார், உடனடியாக உங்களது பாதுகாப்பு வளையத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள். பொறாமை காரணமாக சினிமா உலகில் பலர் உங்களை தீர்த்துக்கட்டுவதற்கான கொலைப்படையை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். தற்போது 4 ரவுண்டு உள்ளே சென்றிருப்பதால், நான் உண்மையை சொல்ல வேண்டியதாயிற்று’ என்று படு உளறலாக ராம் கோபால் வர்மாவின் பதிவு அமைந்திருந்தது. உண்மையில் இயக்குநர் ராஜமௌலியை சக இயக்குநர் ராம் கோபால் வர்மா தன்னுடைய பாணியில் விதந்தோதி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள பலருக்கும் நேரம் பிடித்தது. ராம் கோபால் வர்மாவின் இயல்பு அறியாத பலர் வழக்கம்போல அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in