
’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
’பாகுபலி’க்குப் பிறகு, பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கியுள்ள படம், ‘ரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இந்தி நடிகை ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. கடந்த 7-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம், கரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியதால், ஒத்திவைக்கப்பட்டது.
கரோனா தொற்று குறைந்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால், மார்ச் 18-ம் தேதி, இல்லை என்றால் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு இப்போது உறுதி செய்துள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தேதியில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி நடித்துள்ள ’பூல் புலைய்யா 2’ இந்திப் படமும் ரிலீஸ் ஆகிறது.