ரஜினியின் மார்க்கெட் மதிப்பைக் கூட்டிய ‘தீ’!

 ‘தீ’யில் ரஜினி
‘தீ’யில் ரஜினிரஜினியின் மதிப்பைக் கூட்டிய தீ

எழுபதுகளின் இறுதிவரை நம்மூரில் இந்திப் படங்களின் தாக்கமும் இந்திப் பாடல்களின் தாக்கமும் நிறையவே இருந்தன. எங்கு பார்த்தாலும் இந்திப் படங்கள் ஓடின. இந்திப் படத்தை ரீமேக் செய்து தமிழ்ப் படங்கள் தயாரிப்பது அதிகரித்திருந்தன. ரீமேக் படங்களின் நாயகன் என்றே கொண்டாடப்பட்ட நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, எண்பதுகளிலும் கூட இந்திப் படங்களை ரீமேக் செய்து வெற்றிகளைக் குவித்தார். இந்தியில் சலீம் - ஜாவத் என்கிற மிகச்சிறந்த திரை எழுத்தாளர்களின் படைப்பாக வந்த பல படங்கள் தமிழிலும் பட்டையைக் கிளப்பின. அப்படி இந்தியில் ‘தீவார்’ என்று வந்து, தமிழில் தீயாகப் பற்றிக் கொண்ட படம்தான்... ‘தீ’.

வழக்கமான அண்ணன் - தம்பி கதையாக இல்லாமல், இன்னும் பல விஷயங்களை உள்ளே சேர்த்திருக்கும் கதை இது. தொழிலாளர் பிரச்சினைகள், போராட்டம், முதலாளித்துவ சிந்தனைகள் என்கிற விஷயத்திலிருந்துதான் படமே தொடங்கும். தொழிற்சங்கத் தலைவருக்கு சீதா என்ற மனைவியும் ராஜா, ரவி என்ற மகன்களும் இருக்கிறார்கள்.

போராட்டம் வலுக்கிறது. ஊழல் செய்யும் பண முதலையான தொழிலதிபர், தொழிற்சங்கத் தலைவரை மிரட்டுகிறார். தொழிலாளர்களை அந்தத் தலைவனுக்கு எதிராக மாற்றுகிறார். ‘’உங்கள் தலைவன் களங்கமானவன்’’ என்பதைப் பரப்புகிறார். ‘’திருடன்’’ என்று முத்திரை குத்துகிறார். அவரின் மகனான சிறுவன் ராஜாவுக்கு, ‘என் தந்தை ஒரு திருடன்’ என்று முத்திரை குத்தி அசிங்கப்படுத்த, அந்தக் குடும்பமே தத்தளிக்கிறது. அவமானத்தில் பதைபதைக்கிறது. அப்பாவையும் இழக்க நேரிடுகிறது.

அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், மகன்களை அழைத்துக் கொண்டு அம்மா சீதா சென்னைக்கு வருகிறார். மகன் ராஜாவுக்கு ஒரு கோபம் உள்ளே கனன்று கொண்டே இருக்கிறது. வேலை செய்து மகன்களைக் காப்பாற்றுகிறார் அம்மா. இந்தச் சமூகத்தின் மீது கோபமாகிற ராஜா, வளர்ந்து துறைமுகத்தில் வேலை பார்த்தாலும் கடத்தல் தொழிலிலும் ஈடுபடுகிறார். அந்தக் கொள்ளைத் தொழிலில், கில்லாடி எனப் பேரெடுக்கிறார். அதேசமயம், ராஜாவின் தம்பி ரவி, நன்றாகப் படிக்கிறான். அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நினைக்கிறான். வளர்கிறான். போலீஸ் அதிகாரியாக பணியில் சேருகிறான்.

ஆக, அண்ணன் ராஜா கிழக்கு; தம்பி ரவி மேற்கு. அண்ணன் கெட்டவன். தம்பியோ கெட்டவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கும் போலீஸ். இந்த எதிரெதிர் போராட்டங்களுக்கு மத்தியில் ராஜாவுக்கும் காதல் அரும்புகிறது. ரவியும் ஒருத்தியைக் காதலிக்கிறான். ராஜாவைக் காதலிக்கும் அனிதா, அவனுடைய தீய செயல்களையும் கெட்ட குணங்களையும் கண்டு வருந்துகிறாள். அவனுடன் எப்போதும், இதுகுறித்துப் பேசி முட்டிக்கொண்டே இருக்கிறாள். அவனை எப்படியாவது திருத்திவிடவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாள்.

இந்த நிலையில், ஒருகட்டத்தில் அனிதாவின் அறிவுரையை ஏற்க முடிவு செய்கிறான் ராஜா. அம்மாவிடமும் தம்பியிடமும் முதலில் மன்னிப்புக் கேட்கத் துடிக்கிறான். மிகப்பெரிய கொள்ளைகளைச் செய்யும் கூட்டத்தைப் பிடிக்கும் பணி, ரவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் தன் அண்ணன் ராஜாவும் இருப்பதை அறிந்து கலங்கித் தவிக்கிறான் தம்பி.

இந்த சமயத்தில்தான், ராஜாவின் தொழில் போட்டியாளர்கள், அனிதாவைக் கொலை செய்கிறார்கள். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் சிந்தனையில் ஆவேசமாகக் களத்தில் இறங்குகிறார் ராஜா. அனைவரையும் துவம்சம் செய்கிறார். அதேவேளையில், அண்ணனைப் பிடிப்பதற்காக தம்பி நெருங்குகிறார். அண்ணன் - தம்பி போராட்டச் சண்டையில், அண்ணனைச் சுடுகிறார் தம்பி. அம்மாவின் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, உயிர் துறக்கிறார் அண்ணன் ராஜா. சொந்தங்களையெல்லாம் கடந்து, அநீதியில் ஈடுபட்டவர்களைக் கொன்றொழித்ததற்காக, போலீஸ் ரவிக்கு, விருதுகள் வழங்கப்படுகிறன.

ராஜாவாக ரஜினி. தம்பி ரவியாக சுமன். இவர்களின் அம்மாவாக செளகார் ஜானகி. இந்தியில் அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். சசிகபூர் நடித்த கேரக்டரில் சுமன் நடித்தார். இந்திப் படமான ‘தீவார்’ என்பதன் முதல் வார்த்தையான ‘தீ’ என்பதை மட்டும் எடுத்து படத்துக்கு தலைப்பு வைத்தார்கள். ரஜினிக்கு மிகப்பிரம்மாண்டமான வெற்றியைக் கொடுத்த ‘பில்லா’ படத்தை அடுத்து கே.பாலாஜி, ரஜினியை வைத்து இந்தப் படத்தைத் தயாரித்தார்.

இந்திய - இலங்கைக் கூட்டுத்தயாரிப்பில் அப்போது ஒரு சில படங்களை எடுத்தார்கள். அந்தப் படங்களில், ‘தீ’ திரைப்படமும் ஒன்று. ஸ்ரீப்ரியா, ஏவி.எம்.ராஜன், தேங்காய் சீனிவாசன், கே.பாலாஜி, ஆர்.எஸ்.மனோகர், இலங்கை நடிகை ஷோபா, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், சிலோன் மனோகர், வி.கோபாலகிருஷ்ணன், மனோரமா முதலானோர் நடித்திருந்தார்கள்.

ரஜினி, ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் காட்டியிருப்பார். ரஜினியின் ஸ்டைலையும் ஆக்‌ஷனையும் வெளிப்படுத்தும் வகையில் சண்டைக்காட்சிகளும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டன. குடும்பம், உறவு, அன்பு, பாசம், காதல், பழிவாங்குதல், ஆக்‌ஷன், கடமை என்று ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு திசையில் பயணிக்கிற கதையை, அழகிய திரைக்கதையாக்கி இந்தியில் கொடுத்திருந்தார்கள். ஏனோ தெரியவில்லை... தமிழுக்காக கொஞ்சமும் மாற்றங்கள் செய்யாமல், அப்படியே இந்திப் படத்தைக் காட்சிக்குக் காட்சி எடுத்திருந்தார்கள்.

ஸ்ரீப்ரியாவின் நடிப்பும் அசத்தலாக இருந்தது. செளகார் ஜானகி கலங்கடித்திருப்பார். தேங்காய் சீனிவாசனின் கேரக்டர் பேசப்பட்டது. சுமன் இளமையும் அழகும் கொண்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். படத்தின் லொகேஷன்கள், படத்துக்கு பலம் சேர்த்தன. துறைமுகப் பகுதி, அந்தக் காட்சிகள் எல்லாமே தமிழுக்குப் புதுசுதான். அதேபோல், இலங்கையிலும் இலங்கை ஹோட்டல்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாக ஜொலித்தன.

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் கூட்டணியில் பாடல்கள் அமைந்திருந்தன. ஆனால், ‘பில்லா’வில் எல்லாப் பாடல்களும் ஹிட்டான அளவுக்கு இந்தப் பாடல்கள் பரபரப்பைக் கிளப்பத் தவறியது.

பில்லா ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். கிட்டத்தட்ட சிவாஜியும் முத்துராமனும் நடித்த ‘இரு துருவம்’ படத்தின் சாயலாகவும் இந்தப் படம் இருந்தது என்று ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், ரஜினி தன் அசத்தலான நடிப்பாலும் ஸ்டைலாலும் நம்மைக் கட்டிப்போட்டார்!

என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, மிரட்டலாக இருந்தது. ஏ.எல்.நாராயணனின் வசனங்களுக்கு கரவொலி கிடைத்துக் கொண்டே இருந்தன. படம் முழுக்க ரஜினி, மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்து நிறுத்தியிருந்தார்.

1981-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, வெளியானது ‘தீ’ திரைப்படம். படம் பெயருக்குத் தகுந்தது போல், காட்டுத் தீ போல் பற்றிக் கொண்டிருக்கவேண்டிய படம்தான். ஆனால் ஏனோ, மிகப்பெரிய வெற்றியைப் பெறாமல் போய்விட்டது. அதேசமயம், ரஜினியின் வளர்ச்சி வரிசையில், மார்க்கெட் வேல்யூவை எகிறச் செய்த படங்களில், ‘தீ’ படமும் முக்கியத்துவம் பெற்றது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in