ரஜினியின் ‘பில்லா!’: கேங்ஸ்டர் படம் மூலம் நம் மனதைக் கொள்ளையடித்தவன்!

ரஜினியின் ‘பில்லா!’: கேங்ஸ்டர் படம் மூலம் நம் மனதைக் கொள்ளையடித்தவன்!

எழுபதுகளின் மத்தியில் நமக்கு அறிமுகமாகி, எழுபதுகளின் நிறைவுக்குள்ளேயே நம் மனதில் இடம்பிடித்தவர். பிறகு எண்பதுகளில் ஒவ்வொரு படமும் அவரை உயரத்துக்கு அழைத்துச் சென்றன. ஒருகட்டத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ எனக் கொண்டாடவைத்தன. இன்றும் அவரையே ‘சூப்பர் ஸ்டார்’ எனக் கொண்டாடி வருகிறோம்.

இத்தனை பிரம்மாண்ட உயரத்துக்கு வருவதற்கான படிகளாக, பல்வேறு படங்கள் அவருக்கு அப்போது கிடைத்தன. அப்படியொரு படிக்கட்டு படம்தான் ‘பில்லா’. கெட்டவனாகவும், வில்லனாகவும் நடித்திருந்தாலும், ‘ஆடு புலி ஆட்டம்’ மாதிரியான படங்களில் நடித்தாலும் கூட, ரஜினியின் திரை வாழ்வில் முதல் கேங்க்ஸ்டர் படமாக ‘பில்லா’ அமைந்தது.

’அபூர்வராகங்கள்’, ’அவர்கள்’, ’ மூன்று முடிச்சு’, ‘கவிக்குயில்’, ‘ஆடு புலி ஆட்டம்’, ‘காயத்ரி’ என்ற கறுப்பு வெள்ளைப் படங்களின் மத்தியில் ‘16 வயதினிலே’ படத்தை பாரதிராஜா இயக்கினார். கமலும் ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்தார்கள். இதையடுத்து சில கலர்ப்படங்களும் பல கறுப்பு வெள்ளைப்படங்களுமாக வந்த போதுதான், அட்டகாசமாக ஒரு கலர் படமாக, தனது ஸ்டைல் எல்லாம் காட்டும் வகையிலான ‘டான்’ படமாக... ரஜினிக்கு கிடைத்தது.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் அமிதாப் நடித்த ‘டான்’ இந்திப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி வாங்கினார். இப்படி ரீமேக் படங்களை எடுப்பதை ஒரு பாணியாகவும், வெற்றிக்கான சூத்திரமாகவும், பிரம்மாண்டத்தின் அங்கமாகவுமே பார்த்தார் கே.பாலாஜி. அப்படி உருவானவன்தான்... ‘பில்லா!’

அறுபதுகளின் மத்தியில் இருந்து, எழுபதுகளிலும் ஏன்... எண்பதுகளிலும் கூட சிவாஜியை வைத்து ஏராளமான படங்களைத் தயாரித்தவர் கே.பாலாஜி. அதேசமயம், கமல்ஹாசன், ரஜினி, மோகன், சுரேஷ் போன்றோரையும் வைத்து படங்களைத் தயாரித்தார். வெற்றியும் பெற்றார். அந்த வகையில் ரஜினிக்கு ப்ளாக் பஸ்டர் வெற்றியாக அமைந்ததுதான் இந்தப் படம்!

’அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, தொடர்ந்து படங்கள் பண்ணிக்கொண்டிருந்த ரஜினியை, 1979ம் ஆண்டிலெல்லாம் எவரும் அணுகவே பயந்தார்கள். சிலபல காரணங்களால், ரஜினியை பரிசீலிக்கவே தயங்கினார்கள். அப்படி பட நிறுவனங்கள் மறுதலித்துக் கொண்டிருந்த வேளையில், ‘’இந்தப் படத்துக்கு ரஜினிதான் செட்டாவார். அவரை நான் வரச்சொன்னேன்னு கூப்பிடுங்க’’ என்று கே.பாலாஜி சொன்னார். அதன்படி ரஜினியும் வந்தார். ‘டான்’ படக்கதை ரஜினிக்குச் சொல்லப்பட்டது. அவரோ, ‘’ரொம்ப நன்றி சார். வேணாம் சார். வேற யாரையாவது வைச்சுப் பண்ணிக்கோங்க சார்’’ என்று மறுத்தார்.

ஆனால் ரஜினியை விடவில்லை கே.பாலாஜி. ‘’நான் எனக்காகக் கேக்கல ரஜினி. உங்களுக்காக, உங்க எதிர்கால நலனுக்காகக் கேக்கறேன். இந்தப் படத்துல கமிட்டாகுங்க. நடிங்க. தொடர்ந்து நடிச்சிக்கிட்டே இருங்க. எல்லாம் சரியாயிரும். இந்தப் படத்துக்குப் பிறகு வேற ஒரு ரஜினியா வருவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு’’ என்று உறுதிபடச் சொன்னார் கே.பாலாஜி. ரஜினி வேறுவழியின்றி சம்மதித்தார்.

நடிகரும் தயாரிப்பாளரும் திரையுலக அனுபவஸ்தருமான கே.பாலாஜி, ‘டான்’ படத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். ரஜினியின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார். ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் பில்லாவுக்கு அதனால்தான் தனியிடம் அமைந்தது. இந்தப் படத்தில் நடித்த பிறகு, அதன் மூலம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகே, ஏவிஎம் முதலான நிறுவனங்கள் ரஜினியை வைத்துப் படங்கள் தயாரித்தன. ’தர்மயுத்தம்’, ‘முரட்டுக்காளை’, ‘தீ’ என்றெல்லாம் படங்கள் தொடர்ந்து வந்து ஹிட்டடித்தன.

மிகப்பெரிய கடத்தல் தலைவன் பில்லா. போலீஸ் மொத்தப்பேருக்கும் தண்ணிகாட்டுகிற ஒவ்வொரு காட்சியும், அத்தனை திடம். அவ்வளவு நுணுக்கம். ஒருகட்டத்தில், போலீஸ் பில்லாவைச் சுட்டுவிட... பில்லா இறந்துபோகிறான். காவல்துறை அதிகாரிக்கு அதிர்ச்சி... ‘இனி இந்தக் கூட்டத்தை எப்படிப் பிடிப்பது?’ என்று! ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ‘என்ன... பில்லான்னு டைட்டில் வைச்சிட்டு, பில்லாவைக் கொன்னுட்டாய்ங்களே...’ என்று! அடுத்து அந்தக் கூட்டத்தை, எப்படிப் பிடிப்பது, என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கும்போது, போலீஸ் அதிகாரி கே.பாலாஜியின் கண்களில், ராஜா என்கிற ராஜப்பா தென்படுகிறார்.

ராஜப்பாவைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போகிறார். நடை, உடை, பாவனைகள்தான் வேறாக இருக்கின்றன. ஆனால் முகமெல்லாம் பில்லாவைப் போல் இருப்பதை உணர்ந்து பூரிக்கிறார். ராஜப்பா எனும் கிராமத்து வெள்ளந்தி மனிதனை அழைத்து, பில்லாவைப் பற்றி புரியவைத்து, அவர் பில்லாவாக அங்கே செல்ல தோதாக மாற்றுகிறார். இப்படி கொள்ளைக் கூட்டத்துக்குள் பில்லாவாக ராஜப்பாவை நுழைவார்.

அந்தக் கூட்டத்தின் வேலையையும் கூட்டத்தையும் எப்படி மடக்கிப் பிடிக்கிறது போலீஸ், நடுவே பில்லாவாக நடிக்கும் ராஜப்பாவுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன, அவற்றிலிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதை திடுக் திருப்பங்களும் நகைச்சுவையும்கொஞ்சம் கிளாமரும் கலந்துகட்டி படையலாக்கிக் கொடுத்திருந்தார்கள்.

’இண்டர்போல்’ போலீஸ் ஆபீஸர் கோகுல்நாத்தாக மேஜர் சுந்தர்ராஜன், போலீஸ் அதிகாரிகளாக கே.பாலாஜி, ஏவிஎம்.ராஜன், பில்லாவுடன் பிரவீணா, ஆர்.எஸ்.மனோகர், நடுவே கொஞ்சகாலம் இந்தக் கூட்டத்தில் இருந்துவிட்டு, பிறகு விலகிவந்து திருந்தி வாழ்கிற, அதேசமயம் போலீஸ் அதிகாரியைப் பழிவாங்கத்துடிக்கிற தேங்காய் சீனிவாசன் என எல்லோரும் உணர்ந்து நடித்திருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் உள்ள தன் அண்ணன் திருந்தி, திருமணம் செய்துகொண்டு செட்டிலாக நினைக்கும்போது, அவனை பில்லா கொன்றுவிடுகிறார். அதனால் அவனுடைய சகோதரி ராதா, பில்லாவைப் பழிவாங்குவதற்காக கூட்டத்தில் சேருகிறார். ஸ்ரீப்ரியாவின் நடிப்பு, தனித்துவத்துடன் ஜொலித்திருக்கும். அதேபோல், ராஜப்பாவுடன் இருக்கும் மனோரமாவின் நடிப்பு மிகச்சிறப்பானது. கே.பாலாஜி படங்களில் மனோரமாவுக்கு எப்படியும் நல்ல கதாபாத்திரம் அமைந்துவிடுவது உண்டு. இதிலும் அப்படித்தான்!

கதையின் நேர்த்தியும் திரைக்கதையின் தெளிவும் நட்சத்திரப் பங்களிப்புகளும் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும். முதல் காட்சியே மிரட்டும். ரஜினி ஒற்றை ஆளாக காரில் வந்து இறங்குவார். மூன்று பேர் நிற்பார்கள். ’’என்ன பில்லா தங்கம் கொண்டாந்துருக்கதானே, பணம் கொடுத்து வாங்க முடியாது. வீரம் காட்டித்தான் வாங்கணும்’’ என்று துப்பாக்கி எடுப்பார்கள்.

’’பெட்டியக் கொடு’’ என்பார்கள். உடனே பில்லா பெட்டியை தூக்கிப் போடுவார். டம்மென்று வெடிக்கும். டைட்டில் அங்கிருந்துதான் ஆரம்பிக்கும். டைட்டிலிலும் ரஜினியின் விதம்விதமான ஸ்டைல்கள். இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தின! கூட்டத்தில் உள்ள ஒருவனைச் சுட்டுவிடுவார் பில்லா. எல்லோரும் வந்து கேட்பார்கள். ’’ஒரு சின்சியர் வேலைக்காரனாச்சே இவன். ஏன் பில்லா இப்படிச் செஞ்சே?’’ என்பார் மனோகர்.

’’இந்த பில்லா தேவையில்லாம புல்லட்டை வேஸ்ட் பண்ணமாட்டான்’’ என்பார் ரஜினி. ‘’அவனை எனக்குப் பிடிக்கல. முக்கியமா அவனோட ஷூ... சுத்தமாப் பிடிக்கலை’’ என்பார். எல்லோருக்கும் குழப்பம். அவனுடைய வலது ஷூவைக் கழற்றி ஓபன் செய்யச் சொல்வார். அதற்குள் ஒரு பேப்பர் இருக்கும். அந்தப் பேப்பர் காவல்துறைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி. போலீஸின் கையாள் அவன் என்பது நிரூபணமாகும். இப்படி படம் நெடுக... அதிரிபுதிரியான சரவெடிக் காட்சிகளைக் கொளுத்திக்கொண்டே இருப்பார்கள். அவை வெடித்துக்கொண்டே இருக்கும்.

பில்லாவின் கூட்டத்தில் ஸ்ரீப்ரியா சேருவார். வழக்கம் போல், பாலாஜி படத்தின் நாயகி பெயரான ராதாதான் இவரின் பெயர். அப்படிச் சேர்ந்ததே தன் அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்குவதற்குத்தான். ஆனால் என்ன, அதற்குள் பில்லா போலீசில் சிக்கி இறந்துவிடுவார். அந்த இடத்துக்குத்தான் ராஜப்பா வந்திருப்பார். ஆனால் ‘இது பில்லா இல்லை... ராஜப்பா’ என்று தெரியாமல் அவரைக் கொல்லத் திட்டமிடுவார். விறுவிறு சுறுசுறு பரபர என ரஜினியைப் போலவே, ரஜினிக்கு ஈடுகொடுத்து தடதடக்கும் திரைக்கதை, படத்தின் மிகப்பெரிய பலம்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மொத்தமும் அமர்க்களம். அப்போது விவிதபாரதியிலும், சிலோன் ரேடியோவிலும் இந்தப் பாடலை ஒலிபரப்பாத நாளே கிடையாது. விரும்பிக் கேட்ட நேயர்களின் அடுத்த பாடல்... என்றதும் ‘மை நேம் இஸ் பில்லா’ என்று ஒலிபரப்பி நிறுத்துவார்கள். பிறகு, ’பில்லா’ படத்தில் இருந்து எஸ்.பி.பி. பாடும் பாடல் என்பார்கள். தொடர்ந்து பாட்டு ஒலிபரப்பாகும்.

‘நாட்டுக்குள்ளே எனக்கொரு பேருண்டு’, என்றொரு பாடல். ‘இரவும் பகலும் முழுதும்’ என்றொரு பாடல். ‘நினைத்தாலே இனிக்கும் சுகமே..’ என்கிற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல், ‘மை நேம் இஸ் பில்லா’ , ‘வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ என்று எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட்டடித்தன. ஒருபக்கம் எஸ்.பி.பியும் இன்னொரு பக்கம் மலேசியா வாசுதேவனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம்தான். அந்த கோட்டும்சூட்டும் ரஜினிக்கு தனி அழகு கூட்டித் தந்தன. வாயில் புகையும் பைப் கூட ஸ்டைல் காட்டும். ராஜப்பாவாக ஒரு பாடி லாங்வேஜ் காட்டி நெளிந்து வளைந்து அசத்தியிருப்பார். அதேசமயம், பில்லாவாக மிடுக்குக் காட்டி மிரட்டியிருப்பார்.

’’இது பில்லா இல்லை. பில்லா இறந்துவிட்டான். இவன் ராஜப்பா’ என்பதெல்லாம் தெரிந்த ஒரே நபர், போலீஸ் அதிகாரி பாலாஜி. அவர் இறந்துவிடவே, போலீஸ் பில்லாவாக நடிக்க வந்த ராஜப்பாவை பில்லா என்று துரத்தும். ‘’நான் பில்லா இல்லை’’ என்று ராஜப்பா சொல்லுவார். அதை போலீஸ் நம்பமறுக்கும். இன்னொரு பக்கம், பில்லாவின் கூட்டமும் துரத்தும். நல்லவேளையாக, ஸ்ரீப்ரியாவுக்கு உண்மைகள் தெரியவர, அதனால் இருவருக்கும் காதலும் பிறக்கும். இப்படி எக்ஸ்பிரஸ் வேக திருப்பங்களும், பிரமாண்ட காட்சிகளும் முக்கியமாக, ரஜினியின் ஸ்டைல் கலந்த நடிப்பும் ‘பில்லா’வை தனிக்கோட்டை கட்டி, மக்கள் மனங்களில் நிற்கவைத்தது! படத்தின் இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இதன் பின்னர் இவருடன் ‘பில்லா’ பெயரும் அடைமொழியாக சேர்ந்துகொண்டது.

ஸ்ரீப்ரியாவின் நடிப்பு அபாரம். அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்க நினைப்பதும் அதற்காக அசோகனிடம் கராத்தே முதலான பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதும் கிளாமரில் மயக்கப் பார்ப்பதும், டிங்டிங் என்று கண்சிமிட்டும் நர்ஸ் வேடமணிந்து கலகலக்கவைப்பதுமாக எல்லாக் காட்சிகளிலும் நடிப்பில் பின்னியிருப்பார். அந்த ’வெத்தலயைப் போட்டேண்டி’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

பொதுவாகவே கே.பாலாஜியின் படங்கள், ஜனவரி 26ம் தேதி அல்லது ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும். 1980ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி ‘பில்லா’ வெளியானது. 90களுக்குப் பிறகு, ’பாட்ஷா’ மாதிரி இருக்கவேண்டும் என ரஜினி ரசிகர்கள் ஒவ்வொரு படத்தையும் எதிர்பார்க்கிறார்கள் அல்லவா அதேபோல், 80களின் இறுதி வரைக்கும் ‘பில்லா’ மாதிரி வேண்டும் என ஆசைப்பட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.

அதனால்தான், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜித், நயன், பிரபு நடிப்பில், ’பில்லா’ ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் வந்த ஒரு படத்தை, மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டதும் புதுமைகளில் ஒன்றுதான் இன்றைய தலைமுறையினருக்கு!

படம் வெளியாகி, 43 ஆண்டுகளானாலும் அட்டகாசமான ‘கேங்ஸ்டர்’ படத்துக்கு புது ரூட் போட்டுக்கொடுத்த விதத்தில், ‘பில்லா’ எல்லோரையும் கவர்ந்தான். என்றைக்கும் நம்மை கவர்ந்திருப்பான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in