`வந்தியதேவன் கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு ஜெயலலிதா சொன்னாங்க’: ரஜினிகாந்த்

`வந்தியதேவன் கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு ஜெயலலிதா சொன்னாங்க’: ரஜினிகாந்த்

'பொன்னியின் செல்வன்' கதையில், வந்திய தேவன் கேரக்டருக்கு தான் பொருத்தமாக இருப்பேன் என்று ஜெயலலிதா கூறியதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ``சுமார் 70 வருஷத்துக்கு முன்னால ‘கல்கி’ பத்திரிகையில அஞ்சரை வருஷம் ’பொன்னியில் செல்வன்’ நாவல் தொடரா வந்திருக்கு. அந்த புத்தகம் வரும் போது பெரிய ஸ்டார் ஹீரோவுக்கு முதல் நாள், முதல் ஷோ டிக்கெட் வாங்க எப்படி கஷ்டப்படுவாங்களோ, அதே போல அந்தப் பிரதிய வாங்க வாசகர்கள் துடிச்சாங்க. அந்த மாதிரி புரட்சி செஞ்ச கதைதான் ’பொன்னியின் செல்வன்’. நான் புத்தகம் நிறைய படிப்பேன். எல்லாரும் ’பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா?’ன்னு எங்கிட்ட கேட்பாங்க. என் பழக்கம் என்னன்னா, புத்தகம் எத்தனை பக்கம்னு கேட்பேன். 200, 300 பக்கம்னா ஓகே. அதுக்கு மேலனா தொடவே மாட்டேன். அதனால ’பொன்னியின் செல்வன்’ எத்தனை பக்கம்னு கேட்டேன். எத்தனை பக்கமா? அது 5 பார்ட்டுங்க, 2000 பக்கம் வரும்னு சொன்னாங்க. ’அட போய்யா’ன்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.

பிறகு 80- கள்ல ஒரு பத்திரிகையில, ’பொன்னியின் செல்வன்’ படத்தை இப்ப எடுத்தா, வந்தியத் தேவன் கேரக்டருக்கு யார் பொத்தமா இருப்பாங்க?’ன்னு வாசகர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொன்னாங்க. அதுல ’ரஜினிகாந்த்’ அப்படின்னு ஒரே வரியில சொல்லியிருந்தாங்க. இப்படி சொன்ன உடனேயே குஷியாயிடுச்சு. ஜெயலலிதாவே சொல்லிட்டாங்கன்னா, அந்த கேரக்டர் எப்படி இருக்கும்னு ’பொன்னியின் செல்வனை’ படிக்க ஆரம்பிச்சேன். படிச்சு முடிச்சதும் அமரர் கல்கி இருந்திருந்தா அவங்க வீட்டுக்குப் போயி அவர் கால்ல சாஷ்டாங்கமா விழுந்திருப்பேன்.

இதை தமிழ் சினிமா ஜாம்பவான்களான மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமோ, எஸ்.எஸ்.வாசனோ இதை படமாக்கலை. எம்.ஜி.ஆர், கமல் கூட முயற்சி பண்ணினாங்க. இதை யாராவது படமா எடுக்கமாட்டாங்களான்னு ரசிகர்கள் துடிச்சுட்டு இருந்தாங்க. இப்ப மணிரத்னம் இயக்கி இருக்கார். இதுல என் பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சு, மணிரத்னம்கிட்ட எனக்கொரு கேரக்டர் கொடுங்கன்னு கேட்டேன். அவர் உங்க ரசிகர்களுக்கு யார் பதில் சொல்றதுக்கு ஒத்துக்கவே இல்லை. பெரிய பழுவேட்டரையர் கேரக்டராவது நான் பண்றேனேன்னு சொன்னேன். அவர் ஒத்துக்கவே இல்லை. உங்களை அப்படி பயன்படுத்தவே மாட்டேன்னு சொல்லிட்டார். மற்றவர்கள் என்றால் கண்டிப்பாக பயன்படுத்தி இருப்பாங்க. அதனாலதான் மணிரத்னம் சிறந்த இயக்குநராக இருக்கிறார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in