ரஜினியின் காலைத் தொட்டு ஆசி பெற்ற மாதவன்: வைரலாகும் வீடியோ

ரஜினியின் காலைத் தொட்டு ஆசி பெற்ற மாதவன்: வைரலாகும் வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் காலைத் தொட்டு நடிகர் மாதவன் ஆசி பெறும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நடிகர் மாதவன், ’ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ படம் மூலம் இயக்குநர் ஆனார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. மாதவன், நம்பி நாராயணனாக நடித்திருந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதன் தமிழ்ப் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக்கானும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் திரைப்படத்துறையினரும் பாராட்டி இருந்தனர்.

நடிகர் ரஜினிகாந்தும் பாராட்டி இருந்தார். ’ராக்கெட்ரி திரைப் படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ராக்கெட்ரி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து நடிகர் மாதவன் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடிகர் மாதவனுக்கு ரஜினிகாந்த் சால்வை அணிவித்துப் பாராட்டுகிறார். தொடர்ந்து ரஜினியின் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார் மாதவன். இந்தச் சந்திப்பின் போது நம்பி நாராயணன் உடன் இருந்தார்.

இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில், 'உங்கள் இனிமையான வார்த்தைகளுக்கும் அன்புக்கும் நன்றி. அந்த வார்த்தைகள் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. இந்த உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைப் போலவே உங்களை நாங்களும் நேசிக்கிறோம்’ என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in