ரஜினிக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி மரணம்

ரஜினிக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி மரணம்
முத்துமணிபடம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி அறிமுகமானபோதே, அவருக்கு, 'கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம்' தொடங்கிய மதுரை முத்துமணி இயற்கை எய்தியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் சீன் கேனரி முதல் நடிகர் முரளி, ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் நடிகர்கள் வரையில் பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டது. இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகிவிட்டாலும், முதல் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணி மீது ரஜினிக்கு எப்போதுமே தனிப் ப்ரியம் உண்டு.

20 வயதிலேயே தாய், தந்தையை இழந்த முத்துமணிக்கு தன் வீட்டில் தன்னுடைய செலவிலேயே திருமணம் செய்துவைத்தார் ரஜினி. அவரே தாலியெடுத்துக் கொடுத்து ஆசியும் வழங்கினார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் தனது திருமண நாளன்று ரஜினியை சந்திப்பதை முத்துமணி தம்பதியர் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

கடந்த 2020 செப்டம்பர் மாதம் முத்துமணி திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்ற அவருக்கு ரஜினிகாந்த் போன் செய்து தைரியம் அளித்ததுடன், அவரது மனைவி, மகளுடனும் போனில் உரையாடினார். தனது பிஆர்ஓ மூலம் சில உதவிகளையும் செய்தார்.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தபோதுகூட, கட்சியில் எந்தப் பொறுப்பும் கேட்காமல் இருந்தவர் முத்துமணி. 62 வயதிலும் ரஜினி ரஜினி என்று சின்னப் பையன் போல பேசிக்கொண்டிருந்தாலும், உடல் நலக்குறைவு காரணமாக அதிகம் வெளியே தலைகாட்டாமல் வீட்டிலேயே இருந்தவர், நேற்றிரவு மரணமடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

இறந்த முத்துமணிக்கு லட்சுமி என்ற மனைவியும், சாய் ஹரிணி என்ற ஒரே மகளும் உள்ளனர். மகள் இன்னும் கல்லூரிப் படிப்பையே முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துமணியின் இறுதி நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணியளவில் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.