
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிகெட் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து ரசித்தார். அவர் போட்டியை பார்க்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் "தலைவா இன் ஹவுஸ்" என்று பதிவிட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியை காண சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வான்கடே மைதானத்துக்கு வருகை தந்தார். அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலேவுடன் சேர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.
இது தொடர்பாகப் பேசிய அமோல் காலே, “ கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்க நான் மிகப்பெரிய நடிகர் ரஜினிகாந்தை அழைத்திருந்தேன், அவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் வான்கடே மைதானத்திற்கு வருவதால் இது எங்களுக்கு ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.