
நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் மார்ச் 26-ம் தேதி நடத்த இருந்த பாராட்டு விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு, அதற்கான விழாவை மார்ச் 26-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு மற்றும் நலிந்த ரஜினி ரசிகர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருந்தது. இதற்கான நிகழ்ச்சியை வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் சோளிங்கர் ரவி நடத்த இருந்தார். இவர் ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பிற்கு முன்பு சோளிங்கரில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். அதிலும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நந்தனத்தில் 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கான தலைப்பை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியதுடன் அந்த தலைப்பை வெளியிட்டு வாழ்த்தியும் இருந்தார். அவரோடு நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் 'மனிதம் காத்து மகிழ்வோம்' தலைப்பை வெளியிட்டு இருந்தனர். மார்ச் 26-ம் தேதி நடைபெற இருந்த இந்த விழாவில் சினிமா துறையில் இருந்து சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருந்தனர்.
அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இவ்விழா நிறுத்தி வைக்கப்படுவதாக சோளிங்கர் ரவி தற்போது அறிவித்துள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் நேரில் வழங்கப்படும் என்று அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.