ரஜினி நடிக்க ஆசைப்பட்ட ‘கீழ்வானம் சிவக்கும்!’

41 வருடங்களாகியும் ‘கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்’ இன்றைக்கும் ஹிட்!
ரஜினி நடிக்க ஆசைப்பட்ட  ‘கீழ்வானம் சிவக்கும்!’

நாவலாக வந்து பின்னர் படமாக வந்தபோது, வெற்றி பெற்ற படங்கள் இருக்கின்றன. அதேபோல, நாடகமாக முதலில் வந்து, அதன் பிறகு, சினிமாவாகவும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. சிவாஜி நடிப்பில் முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கிய ‘கீழ்வானம் சிவக்கும்’ படமும் அப்படித்தான் நாடகமாக உருவாக்கப்பட்டு, பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

இயக்குநர் விசு, அவரின் சகோதரர்கள் கிஷ்மு, ராஜாமணி, இவர்களின் சகோதரியின் கணவர் குரியகோஸ் ரங்கா முதலானோர் சேர்ந்தும், தனித்தனியாகவும் நாடகங்களை அரங்கேற்றினார்கள். குரியகோஸ் ரங்காவை நினைவிருக்கிறதுதானே... ‘மணல் கயிறு’ படத்தில் சாந்தி கிருஷ்ணாவின் அண்ணனாக... அண்ணன்களாக ‘டபுள் ஆக்ட்’ கொடுத்து எஸ்.வி.சேகரை கதறடித்து, நம்மை சிரிக்கவைத்திருப்பாரே... அவர்தான் குரியகோஸ் ரங்கா.

இவருடைய நாடகம் ஒன்று, விசு மற்றும் பலரால் நடிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. ‘கீழ்வானம் சிவக்கும்’ என்ற பெயரில் வந்த அந்த நாடகம், பின்னர், அதேபெயரில் திரைப்படமாகவும் வந்தது. சிவாஜி, சரிதா, சரத்பாபு, ஜெய்சங்கர், மேனகா, மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி முதலானோர் நடித்தார்கள். முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா ரவி தயாரிக்க, முக்தா சீனிவாசன் இயக்கினார். படத்தின் கதை குரியகோஸ் ரங்கா. திரைக்கதை வசனம் விசு. இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சிவாஜி மருத்துவர். அதிலும் கண் மருத்துவர். துவாரகாநாத் என்பது அவர் பெயர். அவருடைய மகன் சரத்பாபு. மருமகள் சரிதா. இந்த நிலையில், ‘’டாக்டர் எனக்கு கண் ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர். எனக்கு கண் கிடைக்கணும் டாக்டர்’’ என்று ஜெய்சங்கர் வந்து கெஞ்சுகிறார். அவரின் பதற்றத்துக்கும் வேகத்துக்கும் காரணம் இருக்கிறது.

ஜெய்சங்கரின் தங்கை மேனகா. அவரை ஒருவர் ஆசை வார்த்தைகள் சொல்லி, காதலிப்பதாக ஏமாற்றி, சீரழித்துவிடுகிறார். இதையெல்லாம் சொல்லி, கையில் அந்த நபருடைய புகைப்படத்தையும் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார் மேனகா. ‘’எனக்கு கண்ணு கிடைக்கணும். என் தங்கச்சி வாழ்க்கையை நாசமாக்கினவனைக் கொல்லணும் டாக்டர்’’ என்று தன் கதையைச் சொல்கிறார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் கையில் உள்ள புகைப்படத்தைப் பார்க்கிற சிவாஜிக்கு அதிர்ச்சி. அது மகன் சரத்பாபுவின் ஃபோட்டோ. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். ஒருபக்கம் மருத்துவச் சேவை... இன்னொரு பக்கம் மகனின் உயிர்... நடுவே ஊசலாடுகிறார் சிவாஜி. போதாக்குறைக்கு, இதைக் கண்டறிய முனைப்புக் காட்டுகிறார் மருமகள் சரிதா. இத்தனைக்கும் நடுவே, ஜெய்சங்கருக்கு ஆபரேஷன் செய்தாரா சிவாஜி, சரத்பாபு என்ன ஆனார், சரிதாவின் நிலை என்பதையெல்லாம் சொல்லியிருப்பதுதான் ‘கீழ்வானம் சிவக்கும்’ திரைப்படம்!

சிவாஜி நடிப்பில் காட்சிக்குக் காட்சி அசத்தியிருப்பார். ஒருபக்கம் சரிதா... இன்னொரு பக்கம் சரத்பாபு... மறுபக்கம் ஜெய்சங்கர் என எல்லோருக்கும் ஈடுகொடுத்து, சமாளித்து நடிப்பில் புது அவதாரமெடுத்து டாக்டராகவே மாறியிருப்பார். அதேபோல் சிவாஜிக்கு அடுத்து சரிதாவின் நடிப்பு பேசப்பட்டது. சிவாஜியிடம் இருந்து ரகசியத்தைக் கைப்பற்ற முனைப்பெடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ‘நீயா நானா’ போட்டி அமர்க்களமாக இருக்கும்.

’கீழ்வானம் சிவக்கும்’ நினைவுகளைத் தயாரிப்பாளர் முக்தா ரவியிடம் கேட்டேன். பல சுவாரசியங்களைச் சொன்னார்.

‘’விசுவும் குரியகோஸ் ரங்காவும் ‘இதைப் படமாக்கலாம்’ என்று அபிப்ராயம் சொன்னார்கள். நாங்களும் பார்த்தோம். பிறகு சிவாஜி சாரிடம் அப்பா முக்தா சீனிவாசன் சொல்ல, நாடகம் பார்க்க வந்தார் சிவாஜி சார். நாடகம் தொடங்கியதும் கண்களை சட்டென்று அப்படியே மூடியபடியே இருந்தார். விசுவுக்கு வருத்தமும் கோபமும் வந்தது. ‘நாடகத்தைப் பார்க்காமல், கண்களைத் திறக்காமல் மூடியபடி இருக்கிறாரே...’ என்று ஆத்திரப்பட்டார். இடைவேளையின் போது, ’சீனா... (முக்தா சீனிவாசனை சிவாஜி சார் செல்லமாக இப்படித்தான் அழைப்பார்) நாளைக்குக் காலைல எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்க’ என்று எழுந்தார். கிளம்பிச் சென்றார். விசுவுக்குக் கோபமான கோபம்.

மறுநாள்... சிவாஜி வீடு. ’ஏம்பா விசு... அந்த டாக்டர் இப்படிப் பேசினா நல்லாருக்குமா சொல்லுப்பா’ என்று ஒவ்வொரு காட்சிக்கான வசனங்களை மனப்பாடமாகச் சொல்லி, மாடுலேஷனுடன் பேசிக்காட்டினார் சிவாஜி சார். ‘ஹீரோ கேரக்டர் யாரு? டாக்டர் துவாரகாநாத். அவருக்கு இருக்கிற ஸ்டேட்டஸ்க்கு மென்மையாப் பேசினாத்தான் நல்லாருக்கும்னு தோணுது. ஒரு டாக்டர் தான் சொல்லவந்த விஷயங்களை அமைதியாப் பேசினாத்தான் கரெக்ட்டா இருக்கும். என்ன சரியா விசு?’ன்னு கேட்டார். கண்களை மூடியிருந்தாலும் நாடகத்தின் மீது முழுக் கவனமும் வைத்திருந்த சிவாஜி சாரைக் கண்டு பிரமித்துவிட்டார் விசு.

பிறகு சிவாஜி சார் சம்மதித்தார். ‘சிவாஜி சார் நடிக்கலேன்னா நான் நடிக்கிறேன்’னு ரஜினி சார் சொன்னதா விசு சொன்னார். குறிப்பாக, அப்பா, மகன்னு ரெண்டு கேரக்டரும் நானே பண்றேன்’னு ரஜினி ஆசைப்பட்டதா விசு சொன்னார்.

ஜெய்சங்கர் கேரக்டருக்கு சங்கிலி முருகனைத்தான் அப்பா (முக்தா சீனிவாசன்) கேட்டார். அப்போ வெளியூர் ஷூட்டிங்ல இருந்ததால அவரால நடிக்க முடியல. ஜெய்சங்கருக்கும் முக்தா பிலிம்ஸுக்கும் நல்லதொரு பிணைப்பு உண்டு. எங்களோட கம்பெனிக்கு பத்துக்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கார் ஜெய்சங்கர். அதனால அவரையே வில்லன் கேரக்டருக்குப் போட்டோம்.

கண்ணதாசனை சினிமால எல்லாரும் ‘கவிஞரே கவிஞரே’ன்னுதான் கூப்பிடுவாங்க. கண்ணதாசனோட ‘சண்டமாருதம்’ பத்திரிகைல அப்பா வேலை பாத்தாரு. அதனால அப்போதிருந்தே ‘ஆசிரியரே’ன்னு கண்ணதாசனை கூப்பிடுவார் அப்பா. சிவாஜி சார் நடிப்பும் சரிதா நடிப்பும் ரொம்பவே ரசிக்கப்பட்டது.

அதேபோல சரத்பாபுவுக்கு பதிலா பிரபுவைப் போடலாமானு ஒரு யோசனையும் இருந்துச்சு. அதையும் கைவிட்டோம். ஜெய்சங்கர் நடிப்பும் பிரமாதமா இருந்துச்சு. கண்ணதாசன் பாடல்களும் மெல்லிசை மன்னரோட இசையும் சிறப்பா அமைஞ்சிச்சு’’ என்று ‘கீழ்வானம் சிவக்கும்’ நினைவுகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார் முக்தா ரவி.

‘கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே / கலை மகளே நீ வாழ்கவே / அவனே இணைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே / திருமகனே நீ வாழ்கவே’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் பாடலும் படமும் வந்ததற்குப் பின்னர், திருமண வீடுகளில் இந்தப் பாடல் தவறாமல் ஒலிக்கும். அதேபோல், கல்யாணத்தில் பாட்டுக்கச்சேரி நடத்தினால், இந்தப் பாடலை தவறாமல் இப்போதும் பாடுகிறார்கள். டிஎம்எஸ் மாதிரியே பாடிக்கொண்டும் சிவாஜி மாதிரியே நடித்துக் கொண்டும் மணமக்களை வாழ்த்திப் பாடுவதைப் பார்க்கவும் கேட்கவும் ஆனந்தமாக இருக்கும்.

1981 அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது. இன்றைக்கு மாதிரி ஒரு படமோ, இரண்டு படமோ மட்டும் அப்போதெல்லாம் வருவதில்லை. ஆறேழு படங்கள் வரும். இதில் நான்கைந்து படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைக்கும். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘டிக்... டிக்... டிக்...’ படங்களுக்கு மத்தியில் சிவாஜியின் ‘கீழ்வானம் சிவக்கும்’ படமும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு சில தியேட்டர்களில், 135 நாட்கள் வரை ஓடி, வசூல் குவித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in