ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 79

நெகிழ்ந்துபோன கவிஞர் பொன்னடியான்
ராஜாதி ராஜா படத்தில்...
ராஜாதி ராஜா படத்தில்...

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான ‘பிளட் ஸ்டோன்’ அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இது படம் வெளியான பிறகுதான் தெரிய வந்தது. படத்தின் இயக்குநரே, அதைத் தனது ‘கிரேஸி மூவி’ என்று மட்டம்தட்டிப் பேட்டி கொடுத்தார். அமெரிக்க பத்திரிகைகள் பலவும் பழைய பாணி படம் என்று பகடி செய்தன. ‘பிளட் ஸ்டோன்’ படத்தின் சென்னை நகர உரிமையைப் பெற்று வெளியிட்டிருந்தார் டி.ராஜேந்தர். அவர் அமெரிக்க பத்திரிகை களின் கிண்டலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாளிதழ்களின் சென்னைப் பதிப்புகளில் அட்டகாசமாக ஒரு விளம்பரம் கொடுத்தார்.

‘ஹாலிவுட் சேய்ஸ்... டெக்கேட் பேக்... இட் வாஸ் ‘மேக்னாஸ் கோல்ட்’! நவ் இட் இஸ் ‘பிளட் ஸ்டோன்’ என ஆங்கில நாளிதழ்களிலும், “ஹாலிவுட் புகழ்கிறது... பத்து ஆண்டுகளுக்கு முன் ‘மேக்னாஸ் கோல்டு’ திரைப்படம் என்றால் இன்று ‘பிளட் ஸ்டோன்’ என தமிழ் நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்த, அதைப் படித்துவிட்டு டி.ராஜேந்தரை அழைத்துப் பாராட்டினார் ரஜினி.

‘பிளட் ஸ்டோன்’ படத்துக்காக இந்தியாவில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை மூத்த ஸ்டண்ட் இயக்குநரான தாஸ் அமைத்துக் கொடுத்தார். ஹாலிவுட்டில் ஒவ்வொரு ஸ்டண்டையும் அதன் தன்மையை ஒட்டி அதில் நடிப்பதற்கு பல நிலைகளில் ஸ்டண்ட் கலைஞர்கள் இருந்தார்கள். ஒருவர் செய்யும் ஸ்டண்டை மற்றொருவர் செய்யமாட்டார்கள். ஆனால், எப்படிப்பட்ட சண்டைக் காட்சியையும் தயங்காமல் செய்வதற்கு தமிழ் சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் இருந்ததையும், ரஜினி பல காட்சிகளில் தனக்கு டூப் போடுவதைத் தவிர்த்து தாமே நடித்ததையும் குறிப்பிட்டு பேட்டி கொடுத்திருந்தார் படத்தின் இயக்குநரான ட்வைட் லிட்டில்.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலப் பதிப்புக்கு ஜெர்ரி கிராண்ட் இசையமைத்திருந்தாலும் தமிழ் நாட்டில் வெளியான ஆங்கிலப் பதிப்புக்கு இளையராஜா பின்னணி இசை வழங்கியிருந்தார். “ஆங்கிலப் பதிப்புக்கு ஜெர்ரி கிராண்ட் வழங்கியிருந்த இசைக்குச் சற்று மேலாகவே இளையராஜாவின் பின்னணி இசை அமைந்தது” என்று ரஜினி குறிப்பிட்டார்.

ரஜினி தனது ஹேர் ஸ்டைலை ‘மனிதன்’, ‘ஊர்க்காவலன்’ படங்களின்போதே மாற்றிவிட்டார். ஆனால், ‘பிளட் ஸ்டோன்’ படத்தில்தான் ஹாலிவுட்காரர்கள் அவருக்கு புதிய ஹேர் ஸ்டைலை செய்தார்கள் என்று சில பத்திரிகைகள் எழுத, அதை அப்போது மறுத்தார் ரஜினியின் மேக்கப் மேன் ஆர். சுந்தரமூர்த்தி.

ராதாவின் கமென்ட்

ரஜினியுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணிக் கதாநாயகியாக ஆகியிருந்த ராதா, பட பூஜையில் ரஜினியைப் பார்த்ததும் ‘பிளட் ஸ்டோன்’ படம் பார்த்தபின் ஏற்பட்ட உணர்வை ரஜினியிடம் மறக்காமல் பகிர்ந்துகொண்டார். அதை பொதுவெளியிலும் சொன்னார்.

“ 'பிளட் ஸ்டோன்' படம் பார்த்தேன். அதுபற்றி ரஜினியிடம் மனதில் பட்டதைச் சொன்னேன். ‘மைசூர், சென்னையில் அந்தப் படத்தை எடுத்ததாலோ என்னவோ, அது ஆங்கிலப் படம் மாதிரி இல்லாமல் போயிற்று. தெலுங்குப் படத்தின் தரத்தைவிட குறைவாகவே இருந்தது. இனி நடிக்கப் போகிற ஆங்கிலப் படத்தில், வெளிநாட்டிலேயே படம் எடுக்கிற மாதிரி நடிங்க. அப்பத்தான் அந்த ஆங்கிலப் பட தரமும், உங்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் குறையாமல் இருக்கும்’ என்று சொன்னேன். ஆனால், இப்போது அந்தக் கருத்து எவ்வளவு பக்குவம் இல்லாத ஒன்று என்பதை உணர்கிறேன்” என்றார் ராதா.

அவரை அப்போது சமாதானப்படுத்தும் விதமாக பேசிய ரஜினி, “அது உண்மை தான். எனக்கே தெரியுது. நான் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் அமையவில்லைதான். அதேசமயம், ரசிகர்கள் அதைக் கொண்டாடியிருக்கிறார்கள். தமிழில் அதை வாங்கி வெளியிட்டவர்களுக்கு நஷ்டமில்லை என்பதே எனக்குப் பெரிய நிம்மதி. அடுத்து ஓமர் ஷெரீப்புடன் நடிக்கிறேன். அதை வெளிநாட்டிலேயே படமாக்குகிறார்கள்” என்று சொன்னதாக ராதா பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இளையராஜாவுக்காக ஒரு படம்

திரையுலகில் தனது வளர்ச்சியில் பக்கெடுத்தவர்கள் கேட்டால் மறுக்காமல் கால்ஷீட் கொடுத்து உதவி வந்தார் ரஜினி. அப்படித்தான் இளையராஜாவின் ‘பாவலர் கிரியேஷன்ஸ்’ பட நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக்கொடுக்க முன்வந்தார். அதுதான் ரஜினியின் 125-வது படமாக வெளிவந்த ‘ராஜாதி ராஜா’. அந்தப் படத்தின் கதையை எழுதி, இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். திரைக்கதை, வசனத்தை எழுதும்படி பஞ்சு அருணாசலத்தைக் கேட்டுகொண்டார் ரஜினி. படத்தில், ரஜினிக்கு இரட்டை வேடம். நதியாவும் ராதாவும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்கள். அந்தப் படத்தின் கதை இதுதான்:

ராஜாவாக வரும் ரஜினி படத்தில் ஒரு கோடீஸ்வரர். அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார். ஊரில் இருக்கும் ராஜாவின் அப்பா விஜயகுமார், மகனுக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துக்கிறார். அவருடைய அந்த ஆசை நாயகி ஒய்.விஜயா. அவரும் அவருடைய தம்பி ராதாரவியும் விஜயகுமாரின் சொத்துக்களுக்குக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆசை நாயகியின் போலி அன்பைத் தெரிந்துகொண்ட விஜயகுமார், தனது ஆசை நாயகியையும் அவரது தம்பியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறார். அவர்களோ விஜயகுமார் போதையில் இருக்கும்போது, அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார்கள்.

எதிர்பாராத விதமாக அப்பாவைப் பார்க்கவேண்டும் என்கிற உள்ளுணர்வால் தூண்டப்பட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை வருகிறார் ரஜினி. விமான நிலையத்தில் இறங்கியதுமே தன் நண்பர்கள் மூலம் அப்பாவின் மரணம் பற்றி அறிந்து கொள்கிறார். அப்பாவின் ஆசை நாயகியை அவர் பார்த்ததில்லை; அவருக்கும் ரஜினியைத் தெரியாது. இதனால் உண்மையை அறிய, சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தனது நண்பன் ஜனகராஜை ராஜாவாக சில காலம் நடிக்கும்படி தனது வீட்டுக்கு அனுப்புகிறார் ரஜினி. ஜனகராஜின் கார் ஓட்டுநராக ரஜினி தனது வீட்டுக்குள் நுழைகிறார். இதன்பிறகு குற்றவாளிகளை தன்னைப் போன்றே தோற்றம் கொண்ட கிராமத்து மனிதனாகிய சின்ராசுவின் உதவியுடன் எப்படி சட்டத்தின் முன்னாள் நிறுத்தினார் என்பதுதான் மீதிக் கதை.

மீண்டும் நகைச்சுவை தர்பார்

ரஜினியின் படங்களில் காமெடியன்களுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை ஒருபுறம் இருந்தாலும் அவரே தனி ஆவர்த்தனமாகச் செய்யும் நகைச்சுவை தர்பார் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமைந்திருக்கின்றன. ரஜினிக்கு அப்படி அமைந்த படங்களில் ஒன்றாக மாறியது ராஜாதி ராஜா. ரஜினி - ராதா, ரஜினி - நதியா ஆகிய இரண்டு ஜோடிகளின் கலகல காமெடி, படத்துக்கு பெரும் பலமாக அமைந்துபோனது. சின்ராசு, மாமா மகள் நதியாவிடம் தன்னை வீரனாகக் காட்டிக்கொள்ள சிலம்பம் கற்றுக்கொள்ளும் காட்சிகளில் ரஜினியின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

பாடலாசிரியரின் அனுபவம்

ராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்துபோயின. கவிஞர் பொன்னடியான் எழுதிய ‘எங்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா’ பாடலும், பிறைசூடன் எழுதிய ‘மீனம்மா மீனம்மா’ பாடலும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. சென்னையில் 150 நாட்களும் மதுரையில் 181 நாட்களும் பிய்த்துக்கொண்டு ஓடியது படம். பாடல்களின் வெற்றியால் சென்னையில் மட்டுமே 1 லட்சத்து 22 ஆயிரம் ஆடியோ கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தன. படத்தின் வெற்றி விழாவுக்கு அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமை தாங்கி படத்தின் ‘பிளாட்டினம் டிஸ்க்’கை வெளியிட்டார். ராஜாதி ராஜா படத்துக்கு பாடல் எழுதிய அனுபவம் பற்றி கவிஞர் பொன்னடியான் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

“ஒருநாள் மாலை, சென்னை பீச்சில் நானும், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பாஸ்கர் என்னிடம், ‘ஊட்டியில் ‘ராஜாதி ராஜா’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி பாடுவது போல் அமைந்த ஒரு பாடலை உடனே பதிவுசெய்து அனுப்ப வேண்டும். அந்தப் பாடலை நீங்கள் தான் எழுதுகிறீர்கள். இதுபற்றி இளையராஜாவிடம் பேசிவிட்டேன்' என்றார். மறுநாள், பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சென்று இளையராஜாவைச் சந்தித்தேன்.

பாடலின் சூழ்நிலையை ராஜா என்னிடம் ரத்தினச் சுருக்கமாக விளக்கினார். ‘கதாநாயகன் மிகவும் பயந்த சுபாவம் உடையவன். அவன் காதலி, அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் ஊட்டி வீரனாக்குகிறாள். அவன் தன் எதிரிகளுடன் மோதி, அவர்களை வீழ்த்தும்போது பாடும் பாடல் இது’ என்றார்.

ரஜினி ஸ்டைலையும், அவருடைய நிஜ வாழ்க்கை குணங்களையும், சமூகம் மீது அவர் கொண்டுள்ள பார்வையையும் மனதில் வைத்து பாடல் வரிகளை அமைத்தேன். அந்தப் பாடல்தான் ‘எங்கிட்டே மோதாதே... நான் ராஜாதி ராஜனடா! வம்புக்கு இழுக்காதே... நான் வீராதி வீரனடா!’ என்கிற பாடல். அந்தப் பாடலின் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில் படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ரஜினியை எனக்கு அறிமுகப்படுத்தினார் பாஸ்கர். அப்போது ரஜினி சொன்னர்: ‘இதற்கு முன் நாம் பழகியதில்லை; நான் உங்களுக்கு ஒரு சிறு துரும்பைக்கூடக் கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போதும் என்னைக் குறித்து இவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருக்கிறீர்கள். அதற்காகவேனும் நான் என்னிடம் இருக்கும் சில குறைகளை என்னிடமிருந்து கழுவிக்கொள்ள விரும்புகிறேன். பொன்னடியான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று ராஜா சாரிடம் கேட்டேன். அவர் ‘தங்கம் போன்ற வரிகளை எழுதும் கவிஞன்’ என்று சொன்னார். அது உண்மை, உங்கள் வரிகள் ஒவ்வொன்று தங்கம்’ என்று பாராட்டினார் ரஜினி.

இப்படியெல்லாம் தன் படத்துக்கு பாடல் எழுதும் ஒரு ஏழைக் கவிஞனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று எந்த வெற்றிபெற்ற கதாநாயகனும் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ரஜினி விதிவிலக்கு; அதனால்தான் அவர் சினிமாவில் ஓளி விளக்கு” என்று சொல்லி இருக்கிறார் பொன்னடியான்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in