ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 78

மணிவண்ணன் செய்த முதல் மரியாதை!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 78

மாஸ் நட்சத்திரங்கள் காக்கி அணிந்து நடிக்கும் எந்தப் படமும் அவர்களுடைய ரசிகர்களுக்கு ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் தான். ஒரு தனி ஆள், பத்து பேரை அடித்து வீழ்த்துவதற்கான தர்க்க ரீதியான காரணம் இருப்பதில்லை. அதுவே காக்கி சட்டை அணியும் நாயகனுக்கு அதற்கான நியாயம் கிடைத்துவிடுவதாக ரசிகர்கள் சமாதானம் அடைந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி, தமிழ் சினிமாவில் ஒரு சில மாஸ் நடிகர்கள் காக்கி அணியும்போது அனல் பறக்கும். அப்படியொரு மாஸ் அப்பீல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உண்டு. அவர் போலீஸ் வேடம் ஏற்று சுமாராக ஓடிய ஒரு சில படங்களும் உண்டு என்றாலும், ரஜினியைப் போலீசாகப் பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான்.

ஓர் அசலான கிராமத்தை தனது ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் பாரதிராஜா. ஒவ்வொரு நடிகரையும் உயிருள்ள கதாபாத்திரங்களாக உலவவிட்டார். ‘புவனா ஒரு கேள்விக்குறி’க்கு முன்பே ரஜினி நடித்துவிட்ட கிராமத்து வில்லன் கதாபாத்திரம் பரட்டை. “இது எப்படி இருக்கு?” என்று பரட்டை அடிக்கடி சொல்கிற அந்த மூன்று வார்த்தைகள்தான் ரஜினி பேசிய முதல் ‘பன்ச்’ வசனம். ரஜினியை மக்கள் கலைஞனாக்கிய வசனமும் கூட. இந்தப் படத்துக்குப் பின் 12 வருடங்கள் கழித்து ‘கொடி பறக்குது’ படத்தில் பாரதிராஜாவுடன் இணைந்தார் ரஜினி. அதன்பின் இவர்களது கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனாலும் பாரதிராஜாவும் ரஜினியும் கருத்து வேற்றுமையைக் கடந்த நல்ல நண்பர்களாகத் தொடர்கிறார்கள்.

‘கொடி பறக்குது’ படத்தை தயாரிக்கவும் செய்த பாரதிராஜா, “என் காதலுக்குரிய கறுப்பு ராஜகுமாரனோடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பவனி வருகிறேன். ரஜினிக்கு நான் ரசிகனாய்... ரஜினி எனக்கு ரசிகனாய் தாகம் கொண்ட இரு நதிகளாய் பயணித்துவரும் நாங்கள் ‘கொடி பறக்குது’ படம் வழியாக மீண்டும் சங்கமித்துக் கொண்டோம்” என்று படத்தின் தொடக்கத்தில் ரஜினியுடன் இரண்டாம் முறையாக இணைந்தது பற்றி நெகிழ்சிக் கவிதை வாசித்தார். அந்தப் படத்தின் மூலம்தான், பாரதிராஜாவின் உதவியாளரும், பின்னாளில் அட்டகாசமான ‘அரசியல் பகடி’ சினிமாக்களைக் கொடுத்தவருமான இயக்குநர் மணிவண்ணன் முதன் முதலாக வில்லன் நடிகராக அறிமுகமானார். மணிவண்ணனுக்கு நடிகராக அரிதாரம் பூசச் செய்தவர் ரஜினி.

அதான் மணிவண்ணன் இருக்காரே..!

'கொடி பறக்குது' படத்தில் ரஜினிக்கு இரண்டு பரிமாணங்கள் கொண்ட வேடம். வில்லனுடைய ரகசியங்களைக் கண்டுபிடிப்பதற்காக, சென்னை மாநகரில் பேட்டை தாதாவாகவும் உதவிக் காவல் ஆணையராகவும் மாறி மாறி ஆடுபுலி ஆட்டம் ஆடும் வேடம். “கறுப்புச் சட்டைபோட்ட இந்த தாதாதான் காக்கிச் சட்டைபோட்ட ஈரோடு சிவகிரிங்கிறது எனக்கும் தெரியும். நீ யாரு... உன் சரித்திரம் என்னன்னு என் காதுக்கும் கேட்ருச்சு... உன்னோட தாய்ப்பாசத்தை நாய்க் கூண்டுல வெச்சிருக்கேன். முடிஞ்சா காப்பாத்திக்க” என்று ரஜினியின் அம்மாவை நாய்கள் கடித்துக் குதறும் கூண்டுக்குள் அடைத்துவிட்டு, ரஜினியைப் பார்த்து க்ளைமாக்ஸ் சவால் விடும் வில்லன். அந்த மாதிரியான ஒரு அதி பயங்கர வில்லன் கேரக்டருக்குப் பாரதிராஜா புதிய முகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது, “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே... அவரையே வில்லன் ஆக்கிடுங்க" என்று சொல்லி, மணிவண்ணன் இயக்குநர் ஆகும் முன்பே ஒரு நடிகராக உருவெடுக்கக் காரணமாக இருந்தவர் ரஜினி.

இதை மணிவண்ணன் கடைசி வரை மறக்கவேயில்லை. மணிவண்ணன் தனது மகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும் பொறுப்பை குருநாதர் பாரதிராஜாவுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுக்கவேண்டும் என்கிற கௌரவத்தை ரஜினியிடம் கொடுத்துவிட்டார். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜாதான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலான இடத்தில் ரஜினியை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டி வந்தார் மணிவண்ணன். பின்னாளில் அரசியல் களத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை மணிவண்ணன் ஆதரித்தபோதும் ரஜினி - மணிவண்ணன் இடையிலான நட்பு கடைசிவரை நீடித்தது.

ஹாலிவுட் அழைத்தது...

‘கொடி பறக்குது’ படத்துக்குப் பிறகு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு அமைந்தது. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ரஜினி, அதன் பிறகு தமிழில் நடிப்பதை முதன்மைப்படுத்திக் கொண்டாலும் கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய பிற இந்திய மொழிகளிலும் அவ்வப்போது நடித்து வந்தார். இந்த சமயத்தில் ஆங்கில மொழியில் நடிக்கும் வாய்ப்பு ரஜினியைத் தேடி வந்து அழைத்தது. அந்த ஹாலிவுட் படத்தில் தனது ஸ்டைலும் வேகமும் கலந்த நடிப்பு முறையை மாற்றாமல், சொந்தக் குரலில் லைவ் ஒலிப்பதிவில் பேசி நடித்து அசத்தினார் ரஜினி. அந்தப் படம். ‘பிளட் ஸ்டோன்’.

சரவதேச டென்னிஸ் வீரராகப் புகழ்பெற்று பின்னர் அமெரிக்காவில் குடியேறி, ஹாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த விஜய் அமிர்தராஜும் லண்டன் வாழ் தமிழரான முரளி மனோகரும் இணைந்து தயாரித்தது இந்தப் படம். ‘மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன்’ என்கிற பேனரில் படம் தயாராகியது. ஹாலிவுட் நட்சத்திரங்களான பரெட்ஸ் டிம்லி, சார்லிபிரில், அன்னா நிகடெஸ் ஆகியோருடன் இணைந்து ரஜினி நடித்தார். டிவைட் லிட்டில் டைரக்ட் செய்த இந்தப் படத்தில் வாடகை கார் ஓட்டுநராக ரஜினி நடித்தார்.

படத்தின் கதை இதுதான். ‘பிளட் ஸ்டோன்’ என்பது விலை உயர்ந்த செந்நிற வைரக்கல். அதை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருகிறார்கள். அது ரஜினியின் வாடகைக் காரில் தவறுதலாக விழுந்து, பிறகு ரஜினியின் கையில் கிடைக்கிறது. அந்த விலை உயர்ந்த கல், கதாநாயகியிடம் இருப்பதாக வில்லனின் ஆட்கள் தவறாகக் கருதி, அவளைக் கடத்திச் செல்கிறார்கள். கல்லைக் கொடுத்தால்தான் அவளை விடுவிக்க முடியும் என்று மிரட்டுகிறார்கள். அவளைத்தேடி இந்தியாவுக்கு வரும் ஹீரோவும், ரஜினியும் நண்பர்களாகி விடுகிறார்கள்.

“விலை உயர்ந்த இந்தக் கல்லை, ஏன் அவர்களிடம் கொடுக்க வேண்டும்? உங்கள் மனைவியை நாம் இருவரும் சேர்ந்து மீட்டுக்கொண்டு வருவோம். பிறகு இந்தக் கல் நம் இருவருக்கும்தான் சொந்தம்” என்று ரஜினி சொல்ல, அதை ஹீரோவும் ஒப்புக்கொள்கிறார். அதன்பிறகு இருவரும் இணைந்து வில்லனை எப்படி ஒழித்துக் கட்டினார்கள், கதாநாயகியை எப்படி மீட்டார்கள் என்பதுதான் கதை.

புதுமாதிரியான நடிப்பு!

ரஜினியின் 119-வது படமாக வெளியான ‘பிளட் ஸ்டோன்’ சர்வதேசச் சந்தையில் வெற்றிபெற்றதுடன், தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக சில வாரங்கள் ஓடியது. இந்தப் படத்தில் ரஜினியின் புதுமாதிரியான நடிப்பைப் பார்த்து பாராட்டினார்கள் ஹாலிவுட் கலைஞர்கள். முதன் முதலாக ஆங்கிலப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரஜினிகாந்த் அப்போது அளித்த பேட்டியில், “ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்றால், ஒரு வருடத்துக்கு முன்பே ப்ரி புரொடெக் ஷன் செய்து திட்டமிடுகிறார்கள். ஆறு மாத காலம் தேடி, சரியான லொகேஷனை தேர்ந்தெடுத்த பிறகே திரைக்கதை எழுதுகிறார்கள். திரைக்கதையிலேயே எடிட்டிங் என்பது முறையாக நடந்துவிடும். உபரியாக ஒரு ஷாட்கூட எடுக்கமாட்டார்கள். கணக்கு வழக்கு இல்லாமல் படம் பிடித்துவிட்டு, எடிட்டிங்கில் குறைத்துக் கொள்ளலாம் என்ற பஞ்சாயத்தெல்லாம் அங்கே கிடையாது.

அதேபோல் படப்பிடிப்புக்கு லொகேஷனுக்கு போனதும் கதையை இப்படி மாற்றிக் கொள்ளலாம், வசனத்தில் இதை சேர்த்துக் கொள்ளலாம்... அப்படி பண்ணலாம்... இப்படிப் பண்ணலாம் என்கிற வித்தையெல்லாம் பலிக்காது. ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ, எந்த ஷாட் இருக்கிறதோ, என்ன டயலாக் இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கள். நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஒவ்வொரு நாளும் எடுக்கப்படவிருக்கும் காட்சி, அதில் இடம் பெறும் வசனம் ஆகிய எல்லா விவரங்களும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கொடுக்கப்பட்டு விடும்.

இதனால் நட்சத்திரங்கள், அவரவர் சம்பந்தப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்துகொள்ளவும், கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தவும் போதிய அவகாசம் கிடைக்கிறது. ஷூட்டிங்கில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை முன்னரே தீர்மானித்து விடுவதால், செட்டுக்குப் போன பிறகு டென்ஷன் இருக்காது.

டப்பிங் கிடையாது

இங்கே முதலில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, திரையில் காட்சிகளை ஓடவிட்டு பிறகு டப்பிங் பேசுகிறோம். அங்கு அப்படி இல்லை. படப்பிடிப்பின்போது என்ன பேசுகிறோமோ, அதுவே நேரடியாக ஒலிப்பதிவு ஆகிவிடும். படத்தில் அந்த வசனம்தான் இடம் பெறும். என்னிடம் அவர்கள் ‘படப்பிடிப்பின்போதே ஆங்கில வசனம் பேசவேண்டும்’ என்று சொன்னபோது தொடக்கத்தில் பயந்தேன். காரணம், இலக்கணச் சுத்தமாக எனக்கு ஆங்கிலம் பேச வராது! படத்தில் பேசுகிற அளவுக்கு நாம் என்ன கான்வென்டிலா படித்தோம்?

வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. என்னிடம் மூன்று மாதங்களுக்கு முன்பே வசனத்தைக் கொடுத்து விட்டார்கள். ‘நீங்கள் வசனத்தைப் படித்து உங்களைத் தயார் செய்துகொண்டு வரலாம்’ என்று தயாரிப்பாளர் ஊக்கம் தந்து தைரியமூட்டினார். அப்படியிருந்தும் ஷூட்டிங்கில் அவர்கள் பேசியதை நான் புரிந்து கொள்ளவும், நான் பேசியதை அவர்கள் புரிந்து கொள்ளவும் ஒரு வாரம் பிடித்தது. அதன் பிறகுதான் உச்சரிப்பில் படிப்படியாக சகஜநிலை ஏற்பட்டது” என்று தனது ஆங்கிலப் பட அனுபவங்களை மனம் திறந்து சொல்லி இருந்தார் ரஜினி. அத்துடன் இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த அனுபவங் களையும் பகிர்ந்திருக்கிறார். அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in