ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 69

ரஜினியுடன் நடிக்க விரும்பிய பாக்யராஜ்!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 69

‘அன்புள்ள எம்ஜிஆர்’ கதையைக் கேட்ட அமைச்சர் அரங்கநாயகம் அந்தப் படத்தை தாமே தயாரிக்க விரும்பி, கதைக்கு விலை பேசினார். அதில் உடன்பாடில்லாத அழகன் தமிழ்மணியும் தூயவனும் நாளை வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். பிறகு நடந்ததை அழகன் தமிழ்மணி தொடர்ந்து விவரிக்கிறார்.

“எம்ஜிஆர் சொன்னதுபோல் அரங்கநாயகமோ கோவை தம்பியோ படத்தை தயாரிக்க நிதி உதவி செய்வார்கள் என்று எதிர்பர்த்தோம். ஆனால், அரங்கநாயகம் கதையை தனக்கு விற்றுவிடும்படி கேட்டதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பிறகு வருகிறோம் என்று சொல்லிவிட்டு நேராக தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கதை இலாகாவில் பணியாற்றிக்கொண்டிருந்தார் தூயவன். அப்பன் முருகன் குடியிருக்கும் இடம் என்று தேவர் நம்பும் அந்த அலுவலகத்தில் தூயவனுக்கு மட்டுமே மது அருந்த அனுமதி உண்டு. ஏனென்றால், கதை, வசனம் மற்றும் காட்சிகளை டக் டக்கென்று சொல்லும் திறனும், எழுதும் திறனும் தூயவனுக்கு இருந்தது. தூயவன் ஒரு மதுப் புட்டியை திறந்து கொஞ்சம் அருந்திவிட்டு என்னிடம் சொன்னார்; ‘மச்சான்... நாம பிச்சை எடுத்தாவது இந்தப் படத்தை தயாரிப்போம். யாருக்கும் கதையை விற்கவேண்டாம். என்று. நானும் ‘சரி மச்சான்’ என்றேன்.

போட்டி போட்ட உதவி இயக்குநர்கள்

இதற்கிடையில், நாங்கள் எம்ஜிஆருக்கு கதை சொல்லித் திரும்பிய விஷயம் சாலிகிராமத்தில் தீயாய்ப் பரவிவிட்டது. தேவரின் மருமகன் இயக்குநர் தியாகராஜனிடம் இரண்டு பேர் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் சுப்ரமணியன். இவர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர். இன்னொருவர் நட்ராஜ். ரஜினியுடன் திரைப்படக் கல்லூரியில் படித்த அவருடைய நண்பர். சுப்ரமணியனுக்கு ஏற்கெனவே கதை தெரியும். அவர் எங்களிடம் ‘எனக்கு இயக்குநர் வாய்ப்பு தருவதாக இருந்தால் நான் பாக்யராஜ் சாரிடம் கதையைச் சொல்லி கால்ஷீட் வாங்கிக் கொடுக்கிறேன்’ என்றார். நாங்களும் சரி என்றோம். ஏனென்றால், பாக்யராஜ் அப்போது வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

நாங்கள் சரி என்றதும் கிளம்பிப்போன சுப்ரமணியன், பாக்யராஜிடம் கதையைச் சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் வல்லவரான அவர், ‘இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும், அவ்வளவு சென்டிமென்ட், எமோஷன் எல்லாம் இருக்கிறது. தவிர, எனது தலைவருக்காக உருவான கதையில் நான் நடிப்பது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. இதைவிடக் கூடாது. இதைப் பற்றி தூயவன் சாரிடமும் அழகன் தமிழ்மணியிடமும் நான் வந்து பேசுகிறேன். இப்போது ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. அவர்களிடம் அவசரப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால், கதை பாக்யராஜுக்கு போகிறது என்பதைக் கேள்விப்பட்ட நட்ராஜ், ‘என்ன அண்ணன்களா... தாயும் புள்ளையுமா பழகிக்கிட்டு இருக்கோம். என்கிட்ட சொன்னா நான் ரஜினிகிட்ட கால்ஷீட் வாங்கிக்கொடுக்க மாட்டேனா? தூயவன் சார் ஏற்கெனவே ரஜினிக்கு இரண்டு கதை பண்ணியிருக்கார். இரண்டுமே ஹிட்! அப்படியிருக்கும்போது ரஜினி உங்களுக்கு கால்ஷீட் தரமாட்டேன்னு சொல்லமாட்டாரே!’ என்று கோபித்துக் கொண்டார்.

அவரைச் சமாதானப்படுத்துவதற்காக, ‘இங்க பாரு தம்பி… எங்களுக்கு நீங்க ரெண்டு பேருமே வேண்டியவங்கதான். ஒண்ணு நீயே ரஜினிக்கிட்ட கதையச் சொல்லு. இல்லேன்னா கதை சொல்ல அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிக் குடு. கதையைக் கேட்டுட்டு அவர் ஓகே சொன்னா, நீயே டைரக்ட் பண்ணு. உன்னை டைரக்டர் ஆக்க ரஜினி நல்ல கதையைத் தேடிட்டு இருக்காருன்னு சொன்னீல்ல... இதைவிட நல்ல கதை கிடைக்குமா? நங்களாப் போய் ரஜினிக்கிட்ட பேசக் கூச்சமா இருக்கு’ என்று தூயவன் சொன்னார்.

எழுத்தாளன் எப்போதும் கெத்துதானே! அந்த நிமிடமே ரஜினியைப் பார்க்க கிளம்பிப்போனார் நட்ராஜ். ரஜினியிடம் நட்ராஜ் 15 நிமிடம் தான் கதையைச் சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு அதுவே பிடித்துப் போய்விட்டது. ‘முழுக் கதையையும் கேட்க விரும்புறேன். உடனே தூயவன் சாரைக் கூட்டிட்டு வாங்க. என்னை சந்திக்கிறதுல அவங்களுக்கு என்ன தயக்கம்?’ என்று ரஜினி நட்ராஜிடம் சொல்லியிருக்கிறார்.

அடித்துப் பிடித்து ஓடிவந்த நடராஜ், எங்களை அழைக்க, என்னுடைய லாம்ரடா ஸ்கூட்டரில் தூயவனை அழைத்துக்கொண்டு ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு ஒரே முறுக்கில் போய் நிறுத்தினேன். 1 மணி நேரம் நிதானமாகக் கதையைக் கேட்டு, இடையிடையே கண்கலங்கிய ரஜினி, ‘எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும்?’ என்று கேட்டார். நட்ராஜ் முகத்தைப் பார்த்துவிட்டு ரஜினியிடம் தூயவன் சொன்னார். ‘இவர்தானே உங்க இயக்குநர்... இந்தக் கதையை சீன் பை சீன் தெரிஞ்சவர். இவருக்குத்தான் எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்று தெரியும்’ என்றார்.

நட்ராஜ், ‘ஆறு நாள் கால்ஷீட் போதும்’ என்றார். எனக்கோ உள்ளூர இடித்தது. ஒரு தயாரிப்பாளராகவும் கதை அறிவு கொண்டவனாகவும் இந்தக் கதைக்கு குறைந்தது 10 நாட்களாவது கால்ஷீட் தேவைப்படும் என்று நினைத்தேன். ஆனால், நட்ராஜ் 6 நாட்களுக்குள் ரஜினி போர்ஷன்களை எடுத்து உங்களுக்குப் பணத்தை மிச்சம் பிடித்துக் கொடுக்கிறேன்’ என்றார். விடைபெறும்போது ‘இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?’ என்று ரஜினி கேட்டார். நான் சட்டென முந்திக்கொண்டு, ‘மிகவும் பொருத்தமான தலைப்பாக இருக்கும். தலைப்பை இறுதிசெய்துவிட்டு உங்களுக்குச் சொல்கிறோம்’ எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ரஜினி புன்முறுவல் செய்தார்.

பேபி மீனா அறிமுகம்

உடனடியாக பட வேலைகளில் இறங்கினோம். என் கையில் 2,500 ரூபாய் மட்டுமே இருந்தது. நண்பர்கள், உறவினர்கள், அங்கே, இங்கே என்று 15 ஆயிரம் ரூபாய் திரட்டினோம். 1983 மார்ச் 31-ம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. அன்று நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரத்தில், ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்கிற தலைப்பைப் பார்த்துத்தான் ரஜினியே படத்தின் தலைப்பைத் தெரிந்துகொண்டார். ‘அன்புள்ள எம்ஜிஆர்’ என்கிற தலைப்பு ஏற்கெனவே இருந்தது பற்றி அவருக்கு கடைசிவரை தெரியாது. மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு நட்சத்திர நடிகருக்கு அவருடைய பெயராலேயே படத்தலைப்பு அமைவதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வதும் ரஜினிக்கு நடந்தது. அதுதான் அவரது புகழுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் ’ரோஸி’ என்கிற காப்பகச் சிறுமியை மையமாக வைத்துத்தான் கதை நகரும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க, குழந்தை ஷாலினியை (இன்று ஷாலினி அஜித்) நேரில் போய்ப் பார்த்து 5 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துவிட்டோம். ஆனால், இயக்குநர் நட்ராஜ், ‘சிறுமி மிகவும் நோஞ்சானாக இருக்கிறாள். இன்னும் கொஞ்சம் குண்டாக இருந்தால் ஃபிரேமில் குழந்தை இருப்பது நன்றாகத் தெரியும்’ என்றார். பல சிறார் நடிகர்களைப் பார்த்தும் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

அந்தசமயத்தில்தான் சினிமாவில் மிகவும் பிரபலமான சிகை அலங்காரக் கலைஞராக வலம் வந்துகொண்டிருந்த சின்னச்சாமி இந்தப் படத்தில் பணியாற்றுவதற்காக எங்களைச் சந்திக்க வந்தார். அவரிடம் சிறார் நடிகர் தேவை என்று சொன்னதும் ‘நடிகை ராஜ் மல்லிகாவின் மகளைச் சென்று பாருங்கள். அவள் 9 அல்லது 10 வயது சிறுமி’ என்றார். கோடம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை அருகில் இருக்கும் மாநகராட்சி அலுவகத்துக்குப் பின்புறம் இருந்த பகுதியில்தான் ராஜ் மல்லிகாவின் வீடு இருந்தது. நான், தூயவன், நட்ராஜ் மூவரும் சென்று அந்தக் குழந்தையைப் பார்த்தோம். நட்ராஜ் எதிர்பார்த்தபடியே பேபி மீனா இருந்தார். அப்போதே 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட இயல்பாகவும் புத்திச்சாலித்தனமாகவும் பேபி மீனா நடித்தார்.

பேபி மீனா தவிர பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு ஆகிய சிறார் நடிகர்களுடன் மீனாவின் அம்மாவாக நடிக்க அம்பிகாவையும் பின்னர் ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்தோம். விறுப்பாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ரஜினி இந்தக் கதையில் நடிக்கிறார் என்ற செய்தி தெரிந்ததும் ‘தலைவருக்காக உருவான கதையை மிஸ் செய்துவிட்டோமோ!’ என்று பாக்யராஜ் வருந்தினார். ‘எந்த வகையிலாவது இந்தப் படத்தில் நான் இடம்பெற்றுவிட வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதா?’ என்று கேட்டார். நாங்களும் சரி என்றோம். உடனே ரஜினிக்கு போன் போட்டார் பாக்யராஜ்!”

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in