ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 67

சிம்பிளாய் இருந்த சிவாஜி ராவ்!
கைகொடுக்கும் கை படத்தில்...
கைகொடுக்கும் கை படத்தில்...

தமிழ் திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என்கிற அடையாளத்தைத் தாண்டி தயாரிப்பாளர், ஈவென்ட் மேனேஜர் என தனது எல்லைகளை விரித்துக்கொண்டவர் சின்னி ஜெயந்த். தனது மகனை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கியவர். சென்னையில் தொடக்க கால ரஜினியை நெருக்கமாகப் பார்த்தவர். அதற்கொரு காரணம் இருந்தது.

சென்னை ராயப்பேட்டையில் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அரங்கத்தின் பின்னால் இருந்த தெருவில்தான் சின்னி ஜெயந்தின் வீடு இருந்தது. அதே தெருவில்தான் ரஜினியும் வாடகைக்குக் குடியிருந்தார். சின்னி ஜெயந்துக்கும் ரஜினிக்கும் இன்னொரு தொடர்பும் உண்டு. ரஜினியும் - மகேந்திரனும் மீண்டும் இணைந்த ‘கை கொடுக்கும் கை’ படத்தில், ‘திரிகோணம்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, சினிமாவுக்கு அறிமுகமானார் சின்னி ஜெயந்த். அதற்கு முன்பு ரஜினியை அவர் எப்படி அறிந்திருந்தார்? அந்தப் படத்தில் நடித்தபோது அவர் பார்த்த ரஜினி எப்படிப்பட்டவர்? கேட்டதுமே மனம் திறந்து பேசத் தொடங்கினார் சின்னி ஜெயந்த்:

சின்னி ஜெயந்த்
சின்னி ஜெயந்த்GRJMG

அண்ணாச்சி கடை போன்

“எனது அம்மா கர்னாடக சங்கீத ஆசிரியை. அம்மா வழியாகத்தான் எனக்குக் கலையார்வம் ஒட்டிக்கொண்டது. 12 வயதிலிருந்து அம்மாவுடன் மியூசிக் அகாடமியில் நாடகங்கள் பார்க்கத் தொடங்கினேன். பிறகு நானே தனியாளாக பள்ளிவிட்டு வந்ததுமே அகாடமிக்குள் ஓடிவிடுவேன். சிவாஜி அப்பாவின் ‘வியாட் நாம் வீடு’ நாடகம், ‘தங்கப் பதக்கம்’ நாடகம் ஆகியவற்றை 40 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன். ஜெயலலிதாவின் ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகத்தைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். பாலசந்தர், சோ, சிவகுமார், ஜெய்சங்கர் நாடகங்கள் தொடங்கி 22 வயது வரை நான் பார்க்காத நாடகங்களோ, இசை, நடன நிகழ்ச்சிகளோ கிடையாது.

எனக்கு இப்படியொரு வாய்ப்பு அமைந்ததற்கு, மியூசிக் அகாடமிக்கு பின்னால் எங்கள் வீடு இருந்ததுதான் காரணம். அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். எங்கள் தெருவுக்கு மேற்கே கார்னர் வீடுதான் ரஜினியுடன் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்த விட்டல் முரளியின் வீடு. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமானபோது அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்த கீற்றுக் குடிசையில் ரஜினி வாடகைக்கு வந்து தங்கினார். அப்போது உடல் பூசி கொழு கொழுவென்று சற்று குண்டாக, கறுத்த சிவாஜி ராவாக சாலையில் நடந்துபோய்க் கொண்டிருப்பார்.

விட்டல் முரளியின் வீட்டுக்கு எதிர்வீட்டுக் கட்டிடத்தில் இருந்த பொன்னுராஜ் அண்ணாச்சி மளிகைக்கடையில் போன் இருக்கும். அங்கிருந்துதான் போன் பேசிக்கொண்டிருப்பார் ரஜினி. அவருக்கு போன் வந்தால், ‘சிவாஜி ராவ்’ என்று சத்தம்போட்டுக் கூப்பிடுவார்கள். இப்படி தொடக்க கால ரஜினியை, எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்த 14 வயது பையனாக இன்ச் பை இன்ச் பார்த்து வளர்ந்தவன் நான்.

சிவாஜியின் நடிப்பை, மேடையிலும் திரையிலும் பார்த்து, நடிப்பில் இவ்வளவு மாயங்கள் செய்யமுடியுமா என்று வியந்தவன் நான். அந்த நேரத்தில், ரஜினியின் பாணிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, ‘நடிப்பு என்பது இவ்வளவு ஈஸி’யா என ஆச்சரியப்பட்டு, நாமும் ஏன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்கக்கூடாது என நினைத்தேன். அதே உத்வேகத்துடன், ரஜினி படித்த அதே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படித்து சினிமாவுக்கு வந்தேன். அந்த வகையில் சிவாஜி அப்பா எனக்கு மானசீக ஆசான் என்றால் ரஜினி உத்வேகம் கொடுத்தவர் என்று சொல்லுவேன். அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேனே தவிர, அதிகம் பழகியதில்லை. ஆனால், எதிர்பாராமல் சந்திக்கும்போதும் நலம் விசாரித்துக்கொள்வோம்.

மறக்க முடியாத ‘ட்ரைவ் இன் வுட்லேண்ட்ஸ்’

பொதுவாக பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்கள் அனைவரும் அதன் எதிரே கதீட்ரல் சாலையில் இருந்த ‘ட்ரைவ் இன் வுட்லேண்ட்ஸ்’ உணவகத்தில் தான் பாதி நேரத்தை செலவிடுவார்கள். ரஜினியும் அங்கே உட்கார்ந்து திரையுலகப் பிரபலங்களுக்காகக் காத்திருந்த மாணவர்தான். பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவனாக நானும் அங்கே போவதும் வருவதுமாக இருப்பேன். அங்கே எனக்குக் கிடைத்த கலையுலக நண்பர்கள் அதிகம். அப்படி அறிமுகமான நண்பர்தான் சாம்சன்.

நடிகர் ராஜேஷின் சகோதரர்தான் சாம்சன். மகேந்திரன் சாரிடம் அசோசியேட்டாக இருந்தார். அவர் தான் என்னை மகேந்திரன் சாரிடம் அறிமுகம் செய்தவர். ‘விஜயகுமாருக்கு ஒரு படம் பண்ணிக்கொடுக்க ரஜினி முடிவெடுத்திருக்கிறார். அதை இயக்கும் பொறுப்பை மகேந்திரனிடம் கொடுத்திருக்கிறார். ரஜினியே கன்னடப் படத்திலிருந்து ஒரு கதையையும் எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். அந்தப் படத்தில் உமேஷ் நடித்த கேரக்டர் உனக்கு அற்புதமாகப் பொருந்திவிடும். வா உன்னை மகேந்திரன் சாரிடம் அறிமுகப்படுத்துகிறேன். ஆனால், ஒரு விஷயம்... அந்தக் கேரக்டரில் விஜயகுமாரின் தம்பியை நடிக்க வைக்க அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மகேந்திரன் சார் ‘இவர் அந்தக் கேரக்டருக்குப் பொருந்தமாட்டார்’ என்று கறாராகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். எப்படியாவது மகேந்திரன் சாரை இம்ப்ரஸ் செய்துவிடு’ என்று சொல்லி, என்னை மகேந்திரன் சாரிடம் கொண்டுபோய் நிறுத்தினார் சாம்சன்.

பாராட்டும் வாழ்த்தும்...

என்னைப் பார்த்ததுமே, ‘இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்டா... அப்படின்னா ஓகேதான். ஆனா, இந்தக் கேரக்டர் ரொம்பவும் பெக்யூலியர். விடலைத்தனம், கபடத்தனம் இரண்டின் கலவை. அதைக் குரலிலும் கொண்டுவர வேண்டும் உடல்மொழியிலும் கொண்டுவர வேண்டும். உனது கண்களை நீ எவ்வளவு பயன்படுத்துகிறாய் என்று எனக்குத் தெரியவேண்டும். இன்றைக்கு அந்த கேரக்டர் ஸ்கெட்ச் என்ன என்று கேட்டுவிட்டுப்போய் நாளை வந்து கொஞ்சம் நடித்துக் காட்டு தம்பி’ என்றார் மகேந்திரன் சார்.

‘அதெல்லாம் முன்பே கேட்டுத் தெரிந்துகொண்டு விட்டேன் சார்’ என்று சொல்லிவிட்டு, அந்த நிமிடமே திரிகோணம் கேரக்டருக்கு நானே சில வசனங்களை மனதுக்குள் எழுதிப் பேசிக்காட்டினேன். ‘வெல்டன் மிஸ்டர் ஜெயந்த்’ என்றார் மகேந்திரன் சார். அப்படித்தான் ‘கை கொடுக்கும் கை’ படத்தில் நான் அறிமுகமானேன்.

நான் இன்ஸ்டிடியூட் மாணவன் என்பதைத் தெரிந்துகொண்ட ரஜினி, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி ‘ஆல் த பெஸ்ட்’ சொன்னதுடன் எனது நடிப்பையும் பார்த்துப் பாராட்டினார். அதன்பிறகு எனது பயணம் வேறாக அமைந்தாலும் என்னை எங்கே சந்தித்தாலும் அன்புடன் நலம் விசாரிப்பார் ரஜினி. என் மகன் ஐஏஎஸ் பாஸ் செய்துவிட்டான் என்பது தெரிந்ததும் முதல் போன் கமல் சாரிடமிருந்து என்றால் இரண்டாவது போன் ரஜினியிடமிருந்து வந்தது. மனம்விட்டுப் பாராட்டினார்; வாழ்த்தினார்” என்று முடித்தார் சின்னி ஜெயந்த்.

வாசிப்பைப் பாராட்டிய ரஜினி

பாரதிராஜாவால் ‘மண் வாசனை’ படத்தின் மூலம் அறிமுகமான ரேவதி, ‘கைதியின் டைரி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ‘கை கொடுக்கும் கை’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். ‘கை கொடுக்கும் கை’ நினைவுகளைப் பற்றிக் கேட்டதும் சட்டென்று பழைய நினைவுகளுக்குப் போய் பேச ஆரம்பித்தார்:

“சினிமா என்றாலே என்னவென்று தெரியாதவளாக இருந்த என்னை ‘மண் வாசனை’ படத்தில் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா சார். நான் அவருடைய ‘ஸ்கூல்’ என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு. ஆனால், பாலசந்தர், மகேந்திரன் இவர்களுடைய இயக்கத்தில் நடித்ததும் எனக்கு சினிமா நடிப்பு பற்றிய முழுமையான புரிதலை உருவாக்கியது. ‘கை கொடுக்கும் கை’ படத்தில் எனக்குக் கண் தெரியாத பெண் கதாபாத்திரம் என்று தெரிந்ததுமே, நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் என்று அம்மா உடனே ஓகே சொல்லிவிட்டார்.

அந்தப் படத்தில் நடித்தபோது ரஜினி பெரிய ஸ்டார் என்று எனக்குத் தெரியும். அதற்காக அவருக்கு ஸ்பெஷல் மரியாதையெல்லாம் கொடுக்கமாட்டேன். நான் எல்லா நடிகர்களிடமும் ஒன்றுபோல் தான் நடந்துகொள்வேன். அதை கவனித்த ரஜினி, ‘யுவர் ஆட்டிடியூடு ஈஸ் வெரிகுட் ரேவதி’ என்றார். எனக்கான ஷாட் வரும்வரை நான் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன். எனக்கு கொஞ்ச நேரத்தைக் கூட வீணாக்கப் பிடிக்காது. படப்பிடிப்பு இடைவேளையில் ஒருமுறை என்னைக் கடந்து சென்ற ரஜினி, எனக்குத் தொந்தரவாக ஆகிவிடக்கூடாது என்று தனது நடையின் வேகத்தைக் குறைத்து மென்மையாக நடந்துபோய் தூரத்தில் இருந்த ஒரு மர நிழலில் போடப்பட்டிருந்த நாற்காலில் உட்கார்ந்துகொண்டார். அங்கே நாற்காலி போடப்படாமல் இருந்திருந்தால், தரையில் ஒரு துணியை விரித்து உட்கார்ந்திருப்பார். தனக்குச் சேர் வேண்டும், டென்ட் வேண்டும் என்று எதுவும் கேட்கமாட்டார் அதுதான் ரஜினி. ஏனோ அதன்பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவே இல்லை” என்கிறார் ரேவதி.

‘கை கொடுக்கும் கை’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் ‘அன்புள்ள ரஜினி காந்த்’. நிஜ வாழ்க்கையின் கதாபாத்திரத்தையே திரையிலும் ஒரு கதாபாத்திரமாக ஏற்று நடித்த ரஜினியின் அந்தப் படம் 100 நாள் ஓடியது. அதை இயக்கும் வாய்ப்பினை தன்னுடன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த நண்பனுக்குக் கொடுத்தார் ரஜினி. அந்தப் படம் உருவான கதையின் பின்னால் அவ்வளவு சம்பவங்கள்! அவற்றையும் மீட்டுக் கொண்டுவருவோம்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in