ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 66

காலம் புரட்டிப் போட்ட கதாபாத்திரம்!
கை கொடுக்கும் கை படத்தில்...
கை கொடுக்கும் கை படத்தில்...

மக்கள் அங்கீகாரம் என்பது பொது வாழ்க்கையில் இயங்கும் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. பெரும் மக்கள் திரளைச் சென்றடையும் திரைப்பட ஊடகத்தில் ஒருவர் வெற்றிபெறுவது மக்களின் ஆதரவால் மட்டுமே. ரஜினிக்கு அந்த ஆதரவு கிடைத்ததால்தான் அவர் சூப்பர் ஸ்டார் ஆக முடிந்தது.

ரஜினிக்கு அத்தகைய ஆதரவை மக்கள் கொடுத்ததால் தான் அவர் வில்லனாக நடித்த கதாபாத்திரங்களைக் கூட அவர்கள் வெறுக்காமல் ரசித்தார்கள். இந்த நிபந்தனையற்ற ஆதரவு காரணமாக, கன்னடத்தில் ஒரு கதையில் (கதா சங்கமா) வில்லனாக நடித்த ரஜினி, அதே கதை பின்னாளில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதில் கதாநாயகனாக நடித்தார். அதுதான் ‘கை கொடுக்கும் கை’ இதுதான் காலம் அவருக்கு அளித்த சன்மானம்.

ரஜினி முதலில் வில்லனாக நடித்த அந்த கன்னடப் படம் புட்டண்ணா கனகல் இயக்கிய ‘கதா சங்கமா’ (1976). கதைகளின் சங்கம் என்று பொருள்படும் இந்தப் படம் மூன்று கதைகள் ஒரு கருத்தில் இணையும் ஆந்தாலஜி வகைப்படம். ‘கதா சங்கமா’வில் இடம்பெற்ற ‘முனித்தாயி’ என்ற கதையில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் ரஜினி. அந்தப் படம் கன்னடத்தில் வெற்றியும் பெற்றது. புட்டண்ணா கனகலிடம் சிலகாலம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பாரதிராஜா, ‘16 வயதினிலே’ படத்தை இயக்கியபோது ‘முனித்தாயி’ படத்தில் ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் குணவியல்புடன் ‘பரட்டை’ கதாபாத்திரத்தைப் படைத்தார்.

விஜயகுமாருக்கு ஒரு படம்

ரஜினி எதிர்மறைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்த தொடக்கத்தில் விஜயகுமார் நாயகனாக நடித்துவந்தார். விஜயகுமாரும் ரஜினியும் பல படங்களில் இணைந்து நடிக்கவும் செய்தனர். அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் பின்னாளில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த விஜயகுமார், சொந்தப் படம் தயாரிக்க விரும்பி ரஜினியிடம் கால்ஷீட் கேட்டார். நண்பரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஜினி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்டப் பொறுப்புகளை மகேந்திரனிடம் ஒப்படைக்கும்படி கூறினார்.

‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’ படங்களுக்குப் பிறகு அடுத்த படம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஓய்விலிருந்த மகேந்திரனைப் போய்ப் பார்த்தார் விஜயகுமார். மகேந்திரனுக்கு ஷாக்! ‘ஜானி’ படத்துக்குப் பிறகு ரஜினிக்கு ஏற்ற கதாபாத்திரம் எதுவும் கிடைக்காத நிலையில் அமைதியாக இருந்தார் மகேந்திரன். ஆனால், ரஜினியால் அமைதியாக இருக்க முடியவில்லை. ‘மூன்று முகம்’, ‘பாயும் புலி’, ‘தங்க மகன்’ என மாஸ் மசாலா கதைகளில் நடித்துகொண்டிருந்த ரஜினி, தன்னை ஆசுவாசப்படுத்திகொள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு தன்னுடைய ஆருயிர் நண்பர் மகேந்திரன்தான் சரி என முடிவு செய்துகொண்டு, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

சென்னையில் ‘ஜீத் ஹமாரி’ இந்திப் படத்தின் படப்பிடிப்பில் இருந்த ரஜினியைப் போய் சந்தித்தார் மகேந்திரன். ”இப்போதைக்கு உங்களுக்கு ஏத்தமாதிரி எந்த ஸ்கிரிப்டும் என்கிட்ட இல்லையே ரஜினி..!” என்றார் “அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் மகி. நீங்க புட்டண்ணா கனகலோட ‘கதா சங்கமா’ ஆந்தாலஜி பார்த்திருக்கீங்களா?” என்றார். “அதை எப்படி மறக்க முடியும் ரஜினி. நீங்கதானே எனக்கு ஸ்கிரீன் பண்ணிக் காட்டுனீங்க. மூன்று சிறந்த கன்னட சிறுகதைகள எடுத்துப் பண்ணின படமாச்சே..! நீங்க நடிச்ச ‘முனித்தாயி’ இன்னும் மனசுல இருக்கு” என்றார் மகேந்திரன்.

“அந்தக் கதையை ஒரு இன்ஸ்பிரேஸனா வைச்சுக்கிட்டு அதுக்கு நீங்க உங்க பாணியில கதை எழுதினா சூப்பரா வரும்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்று ரஜினி கேட்க, “இப்போ நீங்க சூப்பர் ஸ்டார்... அதையும் நான் மனசுல வெச்சுத்தான் திரைக்கதை எழுதணும். முதல்ல எழுதிப் பார்த்துட்டு, ஸ்கிரிப்ட் திருப்தியா வந்தா சொல்றேன் ரஜினி” எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டார் மகேந்திரன். அந்த கெத்துதான் மகேந்திரன். கதையும் கதாபாத்திரமும் தன்னை கவராவிட்டால் பார்வையாளர்களை கவர வழியில்லை என்று நினைப்பவர் அவர்.

கைகொடுத்த முனித்தாயி

‘கதா சங்கமா’வில் இடம்பெற்ற முனித்தாயியின் கதை, ஆணாதிக்கம் நிறைந்த உலகில் ஓர் அபூர்வம். ஓர் அழகான கிராமம். அங்கே வசிக்கும் முனித்தாயி ஒரு பார்வையற்ற பெண். முற்போக்குச் சிந்தனைகொண்ட இளைஞன் அவளை மணந்து கொள்கிறான். முனித்தாயிக்கு சிறுசிறு உதவி வேலைகள் செய்துகொடுப்பதற்காக பதின்ம வயதுடைய இளைஞன் ஒருவனை தன் வீட்டில் சேர்த்துக்கொள்கிறான் அவளுடைய கணவன். அந்த இளைஞன் அவளை, ‘அக்கா’ என்றும் பாசமாக அழைக்கிறான். அவளும் அவனைத் தன்னுடைய குழந்தைபோல் நினைத்து அன்பு காட்டுகிறாள்.

ஒரு நாள் அவள் குளிப்பதை அந்த இளைஞன் பார்த்து விடுகிறான். இப்போது அவனது மனதில் சஞ்சலம் உருவாகிறது. அதே ஊரில் மது அருந்திவிட்டு, சீட்டாடி அலம்பல் செய்யும் சிலர் ஒரு கூட்டமாக ஒரு பாழடைந்த கட்டிடத்தில் கூடியிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில்தான் கொண்டாஜியும் இருக்கிறான். சினிமா போஸ்டரில் ஒரு பெண் அரையாடையுடன் இருப்பதைப் பார்த்து ரசிக்கும் கொண்டாஜியை ஏளனம் செய்யும் அந்தச் சபலப்பட்ட இளைஞன், பார்வையற்ற முனித்தாயி குளிப்பதை பணம் வாங்கிக்கொண்டு, கொண்டாஜி கும்பலை பார்க்க அனுமதிக்கிறான்.

ஒரு நாள் இரவு நேரம். கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அந்த வேலைக்கார இளைஞன் துணையுடன், கணவர் போல் நடித்து முனித்தாயியை அடைய முயற்சிக்கிறான் கொண்டாஜி. ஆனால், முனித்தாயி, உண்மையைத் தெரிந்து கொண்டு தன்னுடையக் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடித் தோற்றுவிடுகிறாள். அடுத்த நாள் கணவன் வந்ததும், நடந்ததைச் சொல்லிக் கதறுகிறாள். “நான் கற்பை இழந்தவள். இனி உங்களோடு வாழும் தகுதியை இழந்துவிட்டேன்” எனக் கதறுகிறாள். ஆனால், கணவன் அவளை விட்டுக்கொடுக்கவில்லை.

“ரிஷி பத்தினியான அகல்யா மீது இச்சை கொண்ட இந்திரன், அந்த ரிஷியைப் போல் வேடமிட்டு தந்திரமாக அவளது கற்பை சூறையாடினான். கண் இருந்தும், கணவனுக்கும் அந்நியனுக்குமான வேறுபாட்டை அபலை அகல்யாவால் உணரமுடியாமல் போனது அவளுடைய விதி. நீயோ பார்வையற்ற பெண். அப்படியிருந்தும் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள போராடிய நீ நிரபராதி. நடந்ததை மறந்துவிடு கண்ணே... இந்த ஊரைவிட்டே போய்விடுவோம்” எனக் கூறி மனைவியை அழைத்துக் கொண்டு அந்த ஊரைவிட்டே கிளம்பிவிடுகிறான் அந்தக் கணவன்.

கொண்டாஜி இருக்கும் அதே ஆண் சமூகத்தில்தானே நமது கணவரும் இருக்கிறார் என வியந்து, “அன்று அகல்யா மீது தவறில்லை என்பது தெரிந்தும் அவளுடைய கணவர் அவளைக் கல்லாகும்படி சபித்தார். நீங்களோ என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் என் கடவுள்” என்று கூறி கணவரின் கைபற்றி நடக்கத் தொடங்குகிறாள் முனித்தாயி. இந்தக் கதையில் ‘கொண்டாஜி’யாக அட்டகாசமான வில்லன் நடிப்பைக் கொடுத்திருந்தார் ரஜினி.

48 மணி நேரத்தில் ஒரு திரைக்கதை

இந்த அழுத்தமான கதையைக் கொண்டிருந்த ‘கதா சங்கமா’ படத்தை மீண்டும் பார்த்த மகேந்திரனுக்கு, அதிலிருந்த ‘முனித்தாயி’ கதையை ஒரு முழுநீளத் திரைக்கதையாக விரித்து எழுதி, அதில் சில புதிய மாற்றங்களைச் செய்வதற்கு வெறும் 48 மணிநேரம் தான் தேவைப்பட்டது. இசையைக் கதை சொல்லப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த மகேந்திரன், படப்பிடிப்பைத் தொடங்கும் முன் தனக்குத் தேவைப்படும் பாடல்கள் குறித்துச் சொல்ல, 45 நிமிடத்தில் 4 மெட்டுகளைக் கொடுத்தார் ராஜா. வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன், கங்கை அமரன் ஆகிய நான்குபேர் எழுதிய அந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

ஊர் பெரியவரின் மகன் காளிமுத்துவாக, இதில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. இதே கதையில் கன்னடத்தில் வில்லனாக நடித்தவரை காலம் மீண்டும் அதே கதையில் நாயகனாக நடிக்க வைத்த அதிசயம் ரஜினியின் திரை வாழ்க்கையில் நடந்தது. பார்வையற்ற பெண்ணாக கதாநாயகி வேடத்தில் ரேவதி நடித்த ‘கை கொடுக்கும் கை’ படத்தில் தான் அறிமுகமானார் சின்னி ஜெயந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை நம்மிடம் அசைபோட வருகிறார் சின்னி ஜெயந்த்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in