ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 65

காலத்திடம் பெற்ற ஞானம்!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 65
R Senthil Kumar

கடந்த 2021, ஜூலையில் தனது மருத்துவர்களின் அறிவுரையை தட்டாமல் ஏற்றுக்கொண்ட ரஜினி, தனது உடல்நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, “இனி எப்போதுமே நான் அரசியலுக்கு வரப்போவதில்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இது, அவருடைய ரசிகர்களுக்கும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால், ரஜினி இந்த முடிவை காலத்திடம் பெற்ற ஞானத்தின் வழியாக திடமான ஒன்றாக எடுத்தார். அரசியல் களத்தில் தனக்கு முன்னால் நிற்பவர்களைப் பார்த்து ரஜினி எப்போதுமே பயந்து பின்வாங்கியதில்லை. அரசியலை விடவேண்டும் என்று ரஜினி விரும்பினால் கூட அரசியல் ரஜினியை விடவில்லை என்பதுதான் கடந்த 30 ஆண்டு கால எதார்த்தம். ஆனால், காலம் தனக்குக் கனிந்து வரவேண்டும் என்று ரஜினி விரும்பினார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியல் களத்திலும் ஆட்சி மன்றத்திலும் ஆளுமை மிகுந்த தலைவர்களாக மாறி மாறி தமிழக மக்களால் ஆதரிக்கப்பட்டு வந்த காலங்களிலும் ரஜினியின் அரசியல் குரல் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதாகவே இருந்திருக்கிறது.

ரஜினி எதிர்பார்த்த மாற்றம்

அவர்கள் இருவரும் மறைந்த பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தில் தனக்கான அரசியல் வெளி உருவாகும் என்று ரஜினி எதிர்பார்த்தார். அது ஒரு அரசியல் புரட்சியாக அமையவேண்டும் என்பதும் அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால்தான் கட்சி தொடங்கும் அறிவிப்புக்குப் பிறகு தன்னுடைய மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியபோது, “நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்வதாகச் சொல்கிறார்கள். இனி அப்படிச் சொல்லாதீர்கள். நான் வருவதை உறுதி செய்துவிட்டேன். ஆனால், இளைஞர்கள் மத்தியில் அரசியல் அலை வர வேண்டும். அப்போதுதான் அசுர பலம் கொண்ட கட்சிகள் தோற்கும். நான் முதல்வராகவும் வரவில்லை. வாக்குகளைப் பிரிக்கவும் வரவில்லை. எனக்கு என்ன 50 வயதா ஆகிறது. இப்போது விட்டால் பிறகு பார்க்கலாம் என்று சொல்வதற்கு? எனக்குத் தற்போது 71 வயது ஆகிறது. உங்கள் ரஜினிகாந்த் 71 வயதில் பிழைத்து வந்திருக்கிறேன். கட்சி வேறு... ஆட்சி வேறு என்கிற புரட்சி நடக்க வேண்டும். அப்படி நடந்தால் நான் அரசியலுக்கு வருவேன். எனது இந்த நியாயமான எதிர்பார்ப்பை... மக்களின் நலன் சார்ந்த எதிர்பார்ப்பை அவர்களிடமே எடுத்துச் சென்று பரப்புங்கள். இதை நீங்கள் மக்களிடம் சொல்லுங்கள். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் இனி எப்போதும் நடக்காது" என்றார் ரஜினி.

ஆனால், கரோனா பெருந்தொற்று எனும் பெருந்துயரம், ரஜினி மக்களை பொதுவெளியில் நெருக்கமாகச் சந்திக்க முடியாத நிலையை உருவாக்கியது. ஏனென்றால், 71 வயது ரஜினி அவரது குடும்பத்துக்கு பெருங்கொடை என்றால் தமிழ் சினிமாவுக்கு கடந்த 35 ஆண்டுகளாக பெரும் ஊக்க சக்திகளில் ஒன்றாக நீடிப்பவர். அவர் கள அரசியலில் இறங்கி மக்களை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டிய நிலை வந்தால், கரோனா தொற்றுக்கு ஆளாகிவிடலாம் என்று குடும்பத்தினர், திரையுலகினர் மட்டுமல்ல... அவரது மருத்துவர்களும் பயந்தார்கள். அதனால், அவரைத் தடுத்தார்கள். காலம், கரோனாவின் வடிவத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைத் தடுத்தது.

S_R_Raghunathan

கட்சி வேறு ஆட்சி வேறு

ரஜினி முன்வைத்த மாற்று அரசியல் என்ன என்பதை அவருடைய வார்த்தைகள் வழியாகவே கேளுங்கள்: “சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசிலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரைப் பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும். நல்ல அரசியலுக்கு, மாற்று அரசியலுக்கு நான் மூன்று திட்டங்களை வைத்திருக்கிறேன். முதலாவது திட்டம், தேர்தலுக்குப் பிறகு, தேவையில்லாத அரசியல் பதவிகள் நீக்கப்படும். இரண்டாவது திட்டம், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் வயதான பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக, திறமையான, நேர்மையான இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நான் அதற்குப் பாலமாக இருக்க விரும்புகிறேன். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி இளைஞர்கள் அரசியலிலிருந்து விலகிவிடக்கூடாது. அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நல்லவர்கள், கண்ணியமானவர்கள், மற்ற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத நல்லவர்கள் ஆகியோருக்கு 40 சதவீத இடத்தை நாம் வழங்கவேண்டும்.

மூன்றாவது திட்டம், கட்சிக்கு ஒரு தலைவர்; ஆட்சிக்கு ஒரு தலைவர் என்பதே சரி. இதை நான் கடந்த 2017-ம் ஆண்டிலேயே சொன்னேன். ஆட்சியில் இருப்பவர் தவறு செய்தால், அவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார். கட்சி, ஆட்சி ஆகிய இரண்டும் ஒரே நபரிடம் இருப்பதால், ஆட்சியில் என்ன தவறு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்க முடியாத சூழல்தான் இருக்கிறது. அந்தத் தவறை நாமும் செய்ய வேண்டாம்.

முதல்வர் ஆவதற்காகவோ... வாக்குகளைப் பிரிப்பதற்காகவோ நான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. அரசியலுக்கு வந்து 30 அல்லது 40 சதவீத வாக்குகள் வாங்குவதற்காக இந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமா?” என்று ரஜினி அடுக்கடுக்காக கேட்ட கேள்விகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஜினி எதிர்பார்த்த அரசியல் மாற்றம், கரோனா உருவாக்கிய கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதே தவிர, அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அவர் வைத்த மாற்று அரசியல் கருத்துகள் வரவேற்று விவாதிக்கப்பட்டன.

சோ.ராமசாமி மற்றும் ஜி.கே.மூப்பனாருடன் ரஜினி
சோ.ராமசாமி மற்றும் ஜி.கே.மூப்பனாருடன் ரஜினி

90-களில் தொடங்கிய ஈடுபாடு

2021-ல் ரஜினியை தேர்தல் அரசியலுக்கு அவருடைய ரசிகர்களுக்கும் மக்களும் எதிர்பார்த்ததன் பின்னணியில் அவருடைய 30 ஆண்டுகால ‘பொலிட்டிக்கல் வாய்ஸ்’ முக்கிய இடத்தை பிடித்தது. 1990-களின் தொடக்கத்தில் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி அவற்றைக் கட்டுகோப்பான ஒரு அமைப்பாக மாற்றினார் ரஜினி. ஒருகட்டத்தில் அப்போதைய முதல்வர், ஜெயலலிதாவின் ஆட்சியை வெளிப்படையாக விமர்சனம் செய்ததால் ஜி.கே.மூப்பனாருக்கு நெருக்கமானவராக மாறினார். பிறகு 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். அந்தத் தேர்தலில் அக்கூட்டணி மகத்தான வெற்றியையும் பெற்றது. 1998 மக்களவைத் தேர்தலில் ரஜினி மீண்டும் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் கூட்டணிக் கணக்குகளால் எதிரணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அதன்பின்னர், தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணிகளுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை நிறுத்திக்கொண்டார் ரஜினி.

இதன்பின்னர் 2002-ல் காவிரி நதிநீர் பிரச்சினை வெடித்தபோது, அரசியல் மற்றும் திரையுலகில் மொழி ரீதியாக அவரைத் தனிமைப்படுத்த சில சக்திகள் முயன்றன. அப்போது தனியொரு மனிதனாக சென்னைக் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அவரை யாரும் ஆதரிக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ப.சிதம்பரம், மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் உண்ணாவிரத மேடைக்கு வந்து அவரை வாழ்த்தினார்கள்.

அதன் பிறகு, சோ.ராமசாமி, தமிழருவி மணியன் போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போதும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத வெற்றிடத்தை வரலாறு உருவாக்கித் தந்தபோதும் ரஜினி தன் உடல்நலத்துக்கு முன்னுரிமை கொடுத்து அரசியலைவிட்டு ஒதுங்கினார். தனது ரசிகர்களை அவர்களுடைய அன்புக்குரிய ‘சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்து மகிழ்விப்பதே 71-ம் அகவையில் எடுக்கும் சரியான முடியாவாக இருக்க முடியும் என்று நம்பினார். அதனால்தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக ‘பேட்ட’யிலும் ‘அண்ணாத்த’யிலும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். இன்னும் அவர் நடிக்கும் வரை கொண்டாடுவார்கள்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in