ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 64

நான் மகான் அல்ல..!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 64

ரிஷிகேஷை தன்னுடைய முக்கிய தபஸ்தலமாகக் கொண்டிருந்த தயானந்த சரஸ்வதி சுவாமிகள், ஆண்டுக்கு ஒருமுறை ஆனைகட்டி ஆசிரமத்துக்கு வருவார். அப்போதெல்லாம் அவருடைய பிரதான சீடர்களில் ஒருவரான ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். உடனே ரஜினியும் தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆனைகட்டியில் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள குடிலில் அடைக்கலமாகிவிடுவார். அதிகாலையில் ரஜினி ஆசிரமத்தைவிட்டு வெளியே வந்து நடைப்பயிற்சி செய்யும்போது கண்ணில் படும் பொதுமக்களுக்கு அவர் வணக்கம் வைப்பதே அவ்வளவு பணிவாக இருக்கும். ரஜினியை ஆனைகட்டி கிராம மக்கள் பார்த்து பரவசப்படுவதைக் கேள்விப்பட்ட அவருடைய ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா?

ரஜினிக்கு உத்தரவிட்ட தயானந்தர்!

சுவாமிஜி குருகுலம் வந்திருக்கிறார் என்றால் நிச்சயம் ரஜினியும் வந்திருப்பார் என்று ஆசிரம வாசலில் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். சுவாமிஜியும், “உன்னைக் காணப் பெருங்கூட்டம் வந்திருக்கு பார்... அவர்களுக்கு உன்னுடைய முகத்தைக் காட்டிவிட்டு வா! அவர்கள் மனம் நிறைவாகிச் செல்லட்டும்” என்று சொல்லி அனுப்புவார். குருகுலத்தின் முன்பு இப்படிக் கூடிக் கூச்சலிடும் ரசிகர் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துகொண்டே செல்ல, அமைதியே வடிவாக இருந்த அந்த ஆசிரமத்தில் சலசலப்பு உருவானது. இதை ரஜினியும் புரிந்துகொண்டு, சென்னைக்கு கிளம்ப முடிவு செய்து சுவாமிஜியிடம் வந்தார். ரஜினி பேசும் முன்பே சுவாமிஜி அவருடைய மனதில் இருந்ததைச் சொன்னார்.

“நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறாயோ அதையேதான் நானும் இப்போ சொல்றேன். நீ சென்னைக்குப் புறப்பட்டுட்டே... அதுவும் சரிதான்! கோவைக்கு வரும் நாட்களில் என்னைப் பார்க்க வேண்டுமென்று நீ விரும்பும்போது நான் சென்னை வந்து உன்னைப் பார்க்கிறேன். சீடன் குருவைச் சந்திப்பதும் குரு சீடனைச் சந்திப்பதும் ஒன்றுதான். இவை இரண்டுமே நடக்காமல் போகாது! நாம் இருவரும் ரிஷிகேஷிலும் சந்தித்துக் கொள்வோம்” என்றார். சொன்னது போலவே ரஜினியின் வீட்டுக்கும் தயானந்தர் வருகை தந்தார்.

தயானந்த சரஸ்வதி சுவாமிகள்
தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

‘படையப்பா’ வெற்றிக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட ரஜினி, அடுத்தப் படத்தைத் தொடங்கலாம் என முடிவு செய்தபோது, சென்னையில் ரஜினியின் வீட்டுக்கு வருகை புரிந்தார் தயானந்தர். “உன்னுடைய அடுத்த படத்துக்கு ‘பாபா’ என்கிற தலைப்பைச் சூட்டிக்கொள்” என்றார். அதை அப்படியே பிடித்துக்கொண்ட ரஜினி, அடுத்த படத்துக்கு பலரிடம் கதைகள் கேட்டார். எதுவும் பிடிக்காமல் போன நேரத்தில்தான் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ புத்தகத்தை படித்துகொண்டிருந்தபோது ‘பாபா’ படத்துக்கான முழு திரைக்கதையும் அவரது மனதில் தோன்றியது. அதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உதவியுடன் எழுதி முடித்தார்.

குரு விட்டுச் சென்றதை தொடர விரும்பிய ரஜினி

‘பாபா’ படத்துக்கு தலைப்புக் கொடுத்த தயானந்தரின் கோவை ஆசிரமம் உருவாக்கித் தந்த ஆன்மிகத் தொடர்பு, ரஜினியின் மற்றொரு ஆன்மிக குருவான சுவாமி சச்சிதானந்த மகராஜுடனும் பின்னிப் பிணைந்திருந்தது. அமெரிக்காவில் வாசம் செய்துவந்த சச்சிதானந்த மகராஜ் கோவையைச் சேர்ந்தவர். அங்குள்ள செட்டிபாளையம் கிராமத்தில் இவர் கட்டியெழுப்பிய தாமரைக்கோயில் இருக்கிறது.

சுவாமி சச்சிதானந்தா தனது ஜெயந்தி விழாவை ஒருமுறை கோவையில் கொண்டாடினார் என்றால் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் கொண்டாடுவது வழக்கம். கோவையில் பிறந்த நாள் விழா நடக்கும்போது அமெரிக்காவிலிருந்து கோவைக்கு வந்து விழாவில் பங்கேற்பார் சுவாமிஜி. அந்தநேரத்தில் ரஜினி கோவைக்கு வரமாட்டார். வருவதாகச் சொன்னாலும் வேண்டாமென்று சொல்லி விடுவார் சுவாமிஜி. ஏனென்றால் ரஜினியை பார்க்க வரும் ரசிகர் கூட்டத்தால் ஜெயந்தி விழா, ரஜினி விழாவாக மாறி விடும். அதுவே சச்சிதானந்தா அமெரிக்காவில் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்றால் அங்கே பறந்து விடுவார் ரஜினி.

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் தனது ஜெயந்தி விழாவைக் கொண்டாடினார் சச்சிதானந்தா. அதில் ரஜினியும் கலந்து கொண்டார். 2002-ம் ஆண்டு தன்னுடைய பிறந்தநாளுக்கு நான்கு மாதங்கள் இருக்கும்போதே சமாதியாகி விட்டார் சச்சிதானந்தா. அதுவும் ‘பாபா’ பட வெளியீட்டில் கலந்து கொண்டு திரும்பிச்சென்ற சுவட்டிலேயே இறையில் கலந்துவிட்டார். எனவே, அடுத்து வந்த அவருடைய ஜெயந்தி விழாவை அமெரிக்காவில் நடத்தலாமா அல்லது அவர் பின்பற்றி வந்த வழக்கப்படி அவரின் பிறந்த மண்ணான கோவையிலேயே நடத்தலாமா என்று குழம்பிப் போயிருந்தார்கள் சச்சிதானந்த மகராஜ் அறநிறுவத்தின் நிர்வாகிகள். அதுபற்றி சுவாமியின் பிரதான சீடர்களில் ஒருவரான ரஜினியிடமும் கலந்து ஆலோசித்தனர்.

ஆனைகட்டி குருகுலம்
ஆனைகட்டி குருகுலம்

அப்போது ரஜினி, “இதில் குழப்பத்துக்கோ தயக்கத்துக்கோ இடமில்லை. குருஜி எப்படி தன்னுடைய ஜெயந்தி விழாவை இத்தனை காலமும் கொண்டாடி வந்தாரோ, அப்படியே செய்வதுதான் சரி!. போனமுறை அமெரிக்காவில் கொண்டாடினார் என்றால் இம்முறை கோவையில் கொண்டாடுவதுதானே சரி; கோவையிலேயே ஏற்பாடு செய்யுங்கள். குருஜியின் போதனைகள், தத்துவங்கள் அமெரிக்காவில் பரவியதை விட, அதிகமாக நம்நாட்டில்தான் பரவ வேண்டும். அதற்கு நானும் ஒரு துணையாக வரவிரும்புகிறேன். விழாவுக்கு வந்து நானே குருஜி சொன்ன வாக்குகளை பிரகடனப்படுத்துகிறேன்” என்று சொன்னார். அதன்படியே குரு விட்டுச் சென்ற பணியை தானும் தொடர விரும்பினார் ரஜினி.

ரஜினியின் விருப்பப்படியே கோவை கொடீசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில் பிரம்மாண்டமாக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சச்சிதானந்தா ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவைக்கு சென்றிருந்தார் ரஜினி. அப்போது, காந்திஜி, நேதாஜி, நேருஜி என தேசத்தைக் கட்டியெழுப்பிய தலைவர்களின் புகழ்மிகு தோற்றங்களில் ரஜினியின் உருவத்தைப் பொருத்தி வரைந்த பேனர்களை வழியெங்கும் வைத்து தங்களுடைய அரசியல் ஆர்வத்தை தணித்துக் கொண்டார்கள் அவருடை ரசிகர்கள். விழாவில் தன்னுடைய ரசிகர்களைக் கண்டித்தார் ரஜினி.

“எனது குருநாதர் கோவையில் பிறந்தவர். கூட்டுக் குடும்பத்திலிருந்து வந்தவர். கூட்டுக் குடும்பமாகவே வசித்தவர். கோவை கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. ஒரு வளையல் அணிந்தால் ஓசையெழாது. பல வளையல்கள்தான் ஓசைகளை எழுப்பும். அதன் சுகம் அலாதியானது. வாழ்ந்து பார்த்தால்தான் அதன் சுவை தெரியும். அப்படியான மண்ணில் என் ரசிகர்கள் காந்தி, சுபாஷ் என்று மகான்களின் படத்தை வரைந்து அதில் என் உருவத்தை பதித்துள்ளார்கள். அந்த மகான்கள் எங்கே... நான் எங்கே? அந்த மகான்களுடன் ஒப்பிடும் அருகதை எனக்குத் துளியும் கிடையாது. இப்படியான படங்களை வைத்து என் ரசிகர்கள் என்னைக் கொண்டாடுவதை நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் இந்த செயலை மறந்தும் கூட செய்யாதீர்கள்” என்று ரஜினி பேசி முடித்ததும் அரங்கம் ஆர்ப்பரித்தது.

பாமகாவுடன் மல்லுக்கட்டு!

கள அரசியலுக்கு வெளியே நிற்பதையே ரஜினி விரும்பினாலும் பாட்டாளி மக்கள் கட்சி அவரை உள்ளே இழுத்தது. சினிமாவில் ரஜினி சிகரெட் பிடிப்பதை தன்னுடைய உடல்மொழி மூலம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்து இளைஞர்களைத் தவறான பாதைக்குத் தூண்டுகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தார். அது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து, ‘பாபா’ படம் ஓடிய திரையரங்குகள் பலவற்றில் பாமகவினர் போராட்டம் செய்தும் பேனர்களைக் கிழித்தும் பிரச்சினை செய்தனர். இதைக் கண்டித்து ரஜினி ரசிகர்களும் கொதித்து எழுந்தனர். அவர்களைச் சமதானப்படுத்த வேண்டும் என்று நினைத்த ரஜினி, “அவர்களுக்கு தேர்தல் வரும் போது பாடம் புகட்டுவோம்” என்று சொன்னார். ஆன்மிகவாதியாக மட்டுமே இருந்த ரஜினியை அரசியல்வாதியாகவும் ஆக்கிப் பார்த்த பக்கங்களை அடுத்துப் புரட்டுவோம்.

(சரிதம் பேசும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in