ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 62

இமயத்திலும் ஒலிக்கும் ‘தலைவா’!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 62

பயணங்கள் பலரது வாழ்க்கையையே மாற்றியமைத்திருக்கின்றன. ரஜினிக்கு இமயம் தன்னுடைய மடியை ஒரு தாய்போல் கொடுத்தது. அதில் தலைசாய்த்து மெய்சிலிர்த்துப்போனார். அந்த ஆன்மிகப் பயணத்தில் உற்ற உயிர்த்தோழனாய் அருகிலிருந்தவர் ஹரி. இமயமலைப் பயணம் ரஜினியின் மனதிலும் கண்களிலும் கொண்டுவந்த ஒளியைப் பற்றி தொடர்ந்து ஹரி விவரிப்பதைக் கேளுங்கள்:

“முதல் இமயமலை பயணம் ரஜினிக்குப் புத்துயிரூட்டியதால், இனி என்ன ஆனாலும் வருஷத்துக்கு இருபது நாட்கள் இமயமலையில் தஞ்சமடைவது என முடிவெடுத்தார். ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னும், படவேலைகள் முடிந்த பின்னும் நானும், ரஜினியும் இமயமலைக்குச் செல்வோம். ஆசிரமத்துக்குள் நுழைந்த அந்தக் கணமே செல்போன், டிவி, பத்திரிகை என வெளியுலகத் தொடர்பில் இருந்து விலகிவிடுவார். புராணம், ஆன்மிகம், அரசியல், சினிமா குறித்து பேசுவார். என்னோடு செஸ் விளையாடுவார். ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களிலும் குருமார்களின் சமாதிகளிலும் தியானம் செய்வோம். இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமர்ந்து காலையும், மாலையும் தவறாமல் 45 நிமிடங்கள் வரை ப்ராணாயாமம், க்ரியா யோகா செய்வார்.

ரஜினி எதையும் திட்டமிடாமல் ஒரு பரதேசியைப் போல காவி வேட்டியுடன் காட்டு வழியில் நடந்து களைத்துப் போவார். உற்சாகத்தை உடலுக்கு ஏற்ற பனிக்கட்டி போல இருக்கும் கங்கையில் கால் நனைத்துக் குளிப்பார். கண்ணில் தென்பட்ட மனிதர்களுடன் மனம்விட்டுப் பேசி, கிடைப்பதை தின்று, மரத்தடியிலே தலைசாய்த்துவிடுவார். தன்னை மறந்து மலைவாழ் குழந்தைகள், முதியவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். இரவில் சாதுக்கள் எப்படி இறைசக்தியிடம் பேசுகிறார்கள் என்பதைக் கண்டறிய முயல்வார். சாதுக்களுக்கும் சந்நியாசிகளுக்கும் சாமான்யர்களுக்கும் பணம் கொடுப்பார்.

இமயத்திலும் ஒலிக்கும் 'தலைவா'

ரஜினி என்ன தான் எளிமையாக இருந்தாலும் அவரது ஸ்டைலான உடல்மொழியே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும். இமயமலையின் பெயர் தெரியாத கிராமங்களில் கூட, மக்கள் அவரை அறிந்திருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, அமிதாப் பச்சனைவிட ரஜினி அங்கு பிரபலம். எதிர்பாராத திசையில் இருந்து யாரோ 'தலைவா' என ஓடிவந்து ஆட்டோகிராஃப் வாங்குவார்கள். ஒருமுறை தெருவோர தேநீர்க் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, கடை சிறுவன் அவரை கண்டுபிடித்து, ‘ஹே..ரஜினிகாந்த்..!’ என்று பரவசமானான். அடுத்த நிமிடமே நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி, 'அந்தா கானூன்’ படத்தைச் சொல்லி ரஜினியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்காக சென்று வந்த பின் ரஜினி தனியாக இமயமலைக்கு வருவதில்லை. ஒருமுறை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்து வந்திருந்தார். அவருக்கு ரஜினியே சுற்றுலா வழிகாட்டியாக மாறி இமயமலையின் இடுக்குகளைப் பற்றியெல்லாம் வகுப்பெடுத்து கொண்டிருந்தார். ஆன்மிகத் தலங்களில் சுவாமி தரிசனம் செய்து, ஆசிரமங்களில் தியானம் செய்ய வைத்தார். 'இமயமலைக்கு வந்துவிட்டு கங்கையில் குளிக்காமல் போகக்கூடாது' என இருவரும் குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்தார்கள். பாபாஜி குகைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக துவாராஹாட்டில் ரஜினி கட்டிய ‘குரு சரண்’ ஆசிரமத்தையும் சுற்றிக்காட்டினார். மகளுக்கு, தியான, யோக முறைகளை குருவைப் போலச் சொல்லிக் கொடுத்ததை பார்த்து எனக்கே ஆச்சரியம்!

சித்தர்களின் ஆசிர்வாதம்

ஒருமுறை பாபாஜி குகையில் தியானம் செய்துவிட்டு வரும் போது, ஒரு சித்தர் ரஜினியை அழைத்து, ‘‘இனி உன்னுடைய பெயர் ராஜரிஷி ரஜினிகாந்த்'' எனக் கூறி ருத்ராட்சம் அணிவித்தார். தலை மீது கைவைத்து ஆசி வழங்கினார். இதை ஆசிர்வதிக்கப்பட்ட தருணமாக உணர்ந்த ரஜினி, இதுபற்றி இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. இன்னொரு முறை இரண்டு சித்தர்கள், ‘நீ 95 வயது வரை நலமுடம் வாழ்வாய்... கடவுளின் அருள் பெற்ற உனக்கு எப்போதும் நல்லதே நடக்கும்’ என ஆசி வழங்கினார்கள். அந்தக் கணத்தில் ரஜினி எதுவும் பேச முடியாத அளவுக்கு வாயடைத்துப் போனார்.

மீண்டும் அந்த இடத்துக்குப் பலமுறை போய் அந்த சித்தர்களைத் தேடியபோது அவர்களைக் காணமுடியவில்லை. இதனால், மகா அவதார் பாபாஜியே சித்தர்களின் ரூபத்தில் வந்து தன்னை ஆசிர்வதித்ததாக ரஜினி நம்புகிறார். இதுபற்றி ரஜினி என்னிடம் கூறும்போது: ‘ஹரி... பாபாவின் ஆசியாலே க்ரியா யோகா பாக்கியம் எனக்குக் கிடைத்தது. முதுகுத் தண்டின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்து, நெற்றிக் கண்ணில் நிறுத்த முடிகிறது. எரிமலை போல பிரவாகமாகப் பெருக்கெடுக்கும் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முடிகிறது. பல ஆண்டுகளாக எவ்வளவு நெருக்கடியிலும் காலையும், மாலையும் இதை க்ரியா யோகா மூலம் செய்ய முடிகிறது. நான் என் வாழ்க்கையில் எதைத் தேடிக்கொண்டிருந்தேனோ அது க்ரியா யோகா மூலம் கிடைத்தது. அதனால் எனக்குள் நிகழும் அற்புதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பாபாஜியின் விருப்பப்படி ப்ராணாயாமம், க்ரியா யோகாவை பாமரருக்கும் பரப்ப வேண்டும்’ என்றார்.

தான் பெற்ற ஆன்மிகப் பேரின்பத்தை பிறரும் பெற வேண்டும் என நினைக்கிறாரே அது தான் அவருடைய மனம். மகா அவதார் பாபாஜி, கிருஷ்ண பகவான், இயேசு கிறிஸ்து ஆகியோரை குருவாக ஏற்றதால் அவருக்கு இந்த மனது வாய்த்திருக்கிறது. தெய்வங்களைத் தொழுவதும் மக்களுக்குச் சேவை செய்வதும் அவரது பிறவிக்குணம். ரஜினிக்கு ராஜயோகமும் இருக்கிறது, ரிஷியோகமும் இருக்கிறது. அவரின் இந்த யோகமும் பற்றற்ற மனதும் ரஜினியை திடமான சஞ்சலமில்லாத முடிவுகளை எடுக்க உதவியிருக்கிறது. அவருடைய வாழ்க்கையை ஒவ்வொரு கட்டமாக கவனித்து வரும் நண்பன் என்கிற முறையில் இதைச் சொல்கிறேன்” என்று சொல்லி முடித்தார் ஹரி.

இவர் சொல்வது முற்றிலும் உண்மைதான்! பரமஹம்ச யோகானந்தர் அருளிய ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்கிற ஆன்மிக வழிகாட்டி நூலின் தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்பை சென்னையில் நூல் வெளியீட்டு விழா செய்தபோது, அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரஜினி, தன் வாழ்கையை மாற்றிய ஆன்மிகப் புத்தகம் பற்றி குறிப்பிட்டுப் பேசியதுடன் தன்னுடைய குருமார்களின் பட்டியலையும் பகிரங்கமாக அறிவித்தார்.

ஸ்வாமி ராமாவை சந்திக்க விரும்பிய ரஜினி

இப்போது, ரஜினியின் ஆன்மிக வாழ்க்கையில் பல முக்கியமான புத்தகங்களுக்கு இடம் இருந்தாலும் பகவத் கீதையில் கிருஷ்ணா உபதேசமும் புனித விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் மலைப்பொழிவு போதனைகளும் அவரது மனதில் கல்வெட்டுகள்போல் பதிந்துவிட்டதாகக் கூறுகிறார் ஹரி. பிரபல புனைக்கதை எழுத்தாளர்களும் திரைக்கதை ஆசிரியர்களுமான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) ரஜினியுடனான தங்களுடைய ஆன்மிக அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்வதைப் பாருங்கள்:

“நாவல்களைத் தவிர திரைப்படங்களுக்குத் திரைக்கதையும் வசனமும் எழுதத் தொடங்கியபின் எங்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ஒரு சமயம், இயக்குநர் நண்பர் ஒருவர் எங்களை போனில் அழைத்தார். ‘சூப்பர் ஸ்டார் என்னிடம் கதை கேட்டிருக்கிறார். 10 நாட்களுக்குள் சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். நாம் உடனே கதை விவாதத்துக்குப் புறப்படவேண்டும்; தயாராகுங்கள்’ என்றார். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு! ஆனால், அதை ஏற்கும் பேறு எங்களுக்கு இல்லை. நாங்கள் இயக்குநர் ஷங்கருடன் அவருடைய திரைப்படக் கதை விவாதத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அதை எங்கள் நண்பரிடம் விளக்கினோம். ஏற்றுக் கொண்டார். சூப்பர் ஸ்டாருக்கான ஒரு கதையைத் தயார் செய்ய வாய்ப்பு வந்தும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை மனதில் ஒரு வடுவாகவே தங்கிவிட்டது.

ஆனால் விரைவிலேயே அவருக்காக எழுதும் வாய்ப்பு ஒன்று எங்களைத் தேடி வந்தது. அது பற்றி சற்று விளக்கமாகச் சொல்வதென்றால்.. மலேசியாவில் பெரும் வணிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் மோகன் சுவாமி. ஆனால், அதில் உள்நிறைவு கிட்டாமல், ஆன்மிகம் பக்கம் அவர் தேடல் திரும்பியபோது, ஸ்வாமி ராமா என்ற மாபெரும் குரு எழுதிய ‘Living with the Himalayan Masters’ என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த அற்புதப் புத்தகம் பலரது வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்தியதுபோல், ரஜினியையும் ஈர்த்தது. அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு ஸ்வாமி ராமாவின் மீது பெரும் நம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்த ரஜினிகாந்த், அவரைச் சந்திக்க விருப்பினார். ஆனால் இயலாமல் போய்விட்டது. இந்நிலையில்தான் ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார். அப்போது ஸ்வாமி ராமாவைச் சந்திக்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்.”

அவர் ஸ்வாமி ராமாவைச் சந்தித்தாரா?

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in