ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 61

ஒளி வடிவில் குருவைக் கண்ட ரஜினி!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 61

ரஜினியின் ஆன்மிக ஈடுபாடு என்பது அவருடைய அம்மாவிடமிருந்து அவருக்குள் கிளைத்தது. அவருடைய தயார் காலையும், மாலையும் தவறாமல் கோயிலுக்குப் போய் பூஜை செய்பவராக இருந்தார். வாரந்தோறும் பஜனை மடங்களுக்குச் செல்லும் வழக்கமும் அவருக்கு உண்டு. 5 வயதில் அம்மாவை இழந்த பிறகு தாயில்லா ஏக்கம் ரஜினியை முரட்டுக் குழந்தையாக மாற்றியது. ரஜினியின் பால்ய முரட்டுத்தனத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய அண்ணியார் கலாவதி, ரஜினி 12 வயதுச் சிறுவனாக இருந்தபோது கோசாயி மடத்தில் சேர்த்து லங்கபாரதி ஸ்வாமிகள் என்பவரிடம் யோகாவையும், தியானத்தையும் கற்க வைத்தார். பின்னர், ராமகிருஷ்ண மடத்துக்குப் போய் ராமசந்திர ஸ்வாமி, புருஷோத்தம ஸ்வாமி ஆகியோரிடம் வேத மந்திரங்களையும் கற்றார் ரஜினி.

ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்

ஒருசமயம், ராமகிருஷ்ண மடத்தில் நடந்த நாடக விழாவில் 15 வயது சிறுவனாக விவசாயி வேடத்தில் தத்ரூபமாக நடித்தார் ரஜினி. அதைப் பார்த்து அசந்து போன கன்னட அரசவை கவிஞர் தாரா பேந்த்ரே, “எதிர்காலத்தில் நீ மிகப் பெரிய நடிகனாக வருவாய் என வாழ்த்துகிறேன்” என்றார். புனிதமான அந்த இடத்தில் பெற்ற வாழ்த்தானது பின்னாளில் ரஜினிக்கு வாழ்க்கையாகவே மாறிப்போனது. எத்தனை உயரத்தைத் தொட்டாலும் உடன் பிறந்தோரையும், உறவுகளையும் இன்றுவரை ரஜினி மறக்காமல் இருப்பதற்கு சிறு வயதில் அவருடைய மனதில் நுழைந்த ஆன்மிக வகுப்புகள்தான் காரணம்.

கடல் கடந்தும் பல தேசங்களில் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டிருக்கும் ஒருவர், அந்த பிம்பத்தையும் புகழையும் சட்டை செய்யாமல், ஆன்மிகத் தேடலில் பற்றுறுதி கொண்டு, காவிதரித்து இமயமலைச் சாரலில் நெடுந்தூரம் நடந்து தனக்கான ஞானகுருவைத் தேடிக் கண்டடைந்தவர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்.

தன் மனம் கூறும்போதெல்லாம், இமயம் நோக்கி ஓர் எளிய பறவையைப் போல் பறந்துவிடும் ரஜினிகாந்தின் இந்தத் தேடல் குறித்து எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரஜினி, தனது ஞானகுருவைத் தேடும் பயணத்தில் ‘குருவைத் தேடி சீடன் போகிறானா.., சீடனைத் தேடி குரு போகிறாரா..?’ என்ற முக்கிய கேள்வி பிறக்க பல அரிய புத்தகங்களைப் படித்துத் தெளிந்தவர். குருவைத் தேடித்தான் சீடன் செல்லவேண்டும் என்கிற தெளிவு பெற்று இயமத்தின் சாரலுக்குப் புறப்பட்டுப்போய் பாபாஜியை தனது குருவாகக் கண்டுகொண்டார்.

நண்பரின் நேரடி சாட்சியம்

“பாபாஜி குகையில் தான், நான் புதிதாகப் பிறந்தேன். இதுவரைக் காணாத சந்தோஷத்தை அங்கே அடைந்தேன்” என இமயமலைப் பயணம் பற்றி, கண்கள் பனிக்கச் சாட்சியம் சொல்கிறார் ரஜினிகாந்த். சிறுவயதிலிருந்தே அவருக்கு ஆன்மிக ஈடுபாடு இருந்தாலும் அதை விருட்சமாக மாற்றியது இமயமலைச் சாரல் தான். ரஜினிக்கு மறுபிறப்பை உணர்த்திய அந்தப் பயணத்துக்கு வழித்துணையாக இருந்தவர் அவருடைய நண்பரான ஹரி. இனி அவர் நேரடி சாட்சியமாக நம்மிடம் பகிர்வதைக் கேட்போம் வாருங்கள்:

''ரஜினிகாந்த் இந்தியாவே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டார். உடல் தளர்ந்து, முடி கொட்டி, கிழப்பருவம் எய்தினாலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அவரின் கண் அசைவுக்காக இன்னும் காத்திருக்கிறது பெருங்கூட்டம். ஆனால் ரஜினி, எந்த ஒளிவட்டத்தையும் சூடிக்கொள்ளவில்லை. படாடோபமான பகட்டோ, படை பரிவாரங்களோ இல்லவே இல்லை. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் ரஜினி இன்னும் மாசற்ற எளிய மனிதனாகவே இருக்கிறார். அது தான் என்னை அவருடன் பிணைத்தது. இந்தப் பிணைப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.

வாழ்க்கையையே மாற்றிய புத்தகம்

போதும் போதும் என்கிற அளவுக்கு பெயர், புகழ், செல்வம், மகிழ்ச்சி என எல்லாவற்றையும் பார்த்த ரஜினிக்கு, ஒரு கட்டத்தில் எதுவுமே பிடிக்கவில்லை. 'படையப்பா' படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு எங்கேயாவது போய் விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தார். இவ்வுலக வாழ்க்கையே வெறுத்துவிட்ட ரஜினி, பெங்களூரு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அலமாரியில் இருந்த ஒரு புத்தகம் அவர் கண்ணில் பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கி, ஒரு பக்கத்தைக் கூடப் புரட்டிப் பார்க்காத புத்தகம் அது. எங்கோ ஒரு விமான நிலையத்தில் வாங்கிய அந்த புத்தகமும் அதில் இருந்த யோகியின் படமும் அவரை அழைத்திருக்கிறது. அதை எடுத்து சில பக்கங்களை புரட்டியபோது திடீரென மனதில் ஆர்ப்பரிப்பும், ஆழமான அமைதியும் படர, தனக்கு மயக்கம் வருவதைப் போல உணர்ந்தார். உடனே, வாசிப்பதை நிறுத்திவிட்டு, மனதை திசை திருப்பினார்.

மறுநாள் அதே நேரத்தில் அந்த புத்தகத்தை எடுத்து வாசித்தபோது மீண்டும் அதே ஆர்ப்பரிப்பும் அமைதியும் மனதைக் கவ்வ, அவரை மயக்கம் தழுவியது. அப்போது தரையில் படுத்து கண்களை மூடி கிடந்தபோது, மகா அவதார் பாபாஜியின் கருணை நிறைந்த முகமும், இமயமலை பனிக்குகை ஒன்றின் தியான நிலையும் அவரது மனக்கண்ணில் பளீரென தோன்றியிருக்கிறது.

விவரிக்க முடியாத அந்த ரகசியத் தருணத்தில் தான் 'பாபா' படத்தின் கதையும், திரைக்கதையும் காட்சிகளாக விரிந்தன. அறிவியல் ரீதியாக விளக்க முடியாத அந்தச் சம்பவத்தை ரஜினி விவரித்த போது உணர்வுகள் பாய்ந்து என் உடல் சிலிர்த்தது. ரஜினியின் வாழ்க்கைப் புதிரை ஊடுருவி, அதன் மர்மக் கதவுகளைத் திறந்த அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஒரு யோகியின் சுயசரிதம்'. எழுதியவர் துறவி பரமஹம்ச யோகானந்தர்.

நெருக்கடியில் ஒரு பயணம்

‘பாபா’ எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் ரஜினியைச் சுற்றி ஒரே சிக்கல். அதோடு காவிரி பிரச்சினையும் சேர்ந்துகொண்டதால் கூடுதல் நெருக்கடி. திரைத்துறையிலும், அரசியலிலும் அவருக்கு நெருக்கமானவர்களே எதிராக மாறினார்கள். அந்த நேரத்தில் பாபாஜியைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தார் ரஜினி. எனக்கு பாபாஜியின் இமயமலை ஆசிரமத்துடன் தொடர்பு இருந்ததால் மேலாளர் சத்தியநாராயணா மூலம், என்னைத் தொடர்பு கொண்டார். இருவரும் டெல்லி விமான நிலையத்தில் சந்திக்க முடிவெடுத்தோம். இமயமலை செல்லத் தேதி குறித்து, டெல்லிக்கு விமானம் ஏறிய பின்னும், ‘சினிமா நடிகரான ரஜினி, அங்கெல்லாம் வருவாரா?’ என எனக்கு பலத்த சந்தேகம்.

ஆனால் ரஜினி, பகலில் காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்துவிட்டு, அன்றிரவே மனைவியோடு டெல்லிக்கு விமானம் ஏறினார். நேரில் சந்தித்த போது திரையில் சீறும் சூப்பர் ஸ்டாருக்கும் இந்த மனிதருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது புரிந்தது. எவ்வித போலித்தனமும் இல்லாத அசலான மனிதராக இருந்தார். அங்கிருந்து கரடு முரடான மலைப்பாதையில் 14 மணி நேர பயணத்துக்கு பின்னர், ரிஷிகேஷைக் கடந்து நந்தாதேவி சிகரத்தின் மேல் இருக்கும் ராணிகேத்தை அடைந்தோம்.

ஹரி
ஹரி

வழிநெடுக கீதாவுபதேசம், ராமாயணக் கதைகள், பாபாஜியின் வாழ்க்கை, தியான முறை, யோகா வகைகள் என விலாவரியாக பேசிக்கொண்டே வந்தார் ரஜினி. அவ்வப்போது தொண்டையை நனைக்கச் சூடாக, இதமான சாலையோர தேநீர். பசிக்கு ரொட்டியும் பருப்புக் குழம்பையும் உண்டார்.

தேடல் தந்த பரிசு

மகா அவதார் பாபாஜியின் குகைக்கு 15 கிலோ மீட்டர் கீழே இருக்கும் துவாராஹாட் ஆசிரமத்தில் நள்ளிரவில் நுழைந்தோம். பனிச் சிகரத்தில் உற்பத்தியாகி இமயம் எங்கும் பாயும் கங்கையின் பேரோசை, நுரையீரலை தீண்டும் குளிர் காற்று, எல்லா திசையிலும் வியாபித்திருந்த அமைதியை ரஜினி மிகவும் ரசித்தார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, தியானத்தை முடித்து, 7 மணிக்கு பாபாஜியின் குகை நோக்கி கிளம்பினோம். 10 கிலோ மீட்டரை அடையவே கார் படாதபாடு பட்டது. காரை நிறுத்திவிட்டு அடுத்த 5 கிலோ மீட்டரைக் கடக்க, நடக்க தொடங்கினோம். சவரம் செய்யப்படாத முகம், கதர் குர்தா காவி வேட்டி, காலில் ரப்பர் செருப்பு, மலைவாசியின் ஊன்று கோலுடன் அதே சுறுசுறுப்புடன் சிகரம் ஏறினார்.

புலிகள் உலவும் துனாகிரியைக் கடக்கையில் லதாவுக்கும், எனக்கும் கால்கள் தளர்ந்தன. ஆனால் பாபாஜியைப் பார்க்கும் முனைப்பில் இருந்த ரஜினி, எங்களை உற்சாகப்படுத்தி நடக்க வைத்தார். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பனிசூழ்ந்த பாபாஜியின் கற்குகையை அடைந்தோம். எத்தனையோ பனிச்சரிவுகளை எதிர்கொண்டும் இன்னும் கம்பீரமாக நிற்கும் குகையைப் பார்த்ததும் ரஜினி பரவசமானார். கூரிய கற்கள் நிறைந்த ஆபத்தான குகைக்குள் உயிரைப் பணயம் வைத்து இறங்கினார்.

மகா அவதார் பாபாஜி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒளி வடிவத்தில் வாழ்வதாக நம்பப்படும் குகை அது. அதற்குள் கஷ்டப்பட்டு நுழைந்ததும் கருவறையின் அமைதி. அடர்த்தியான குளிர்க்காற்று களைத்திருந்த நுரையீரலுக்கு புத்துயிர் ஊட்டியது. ஆறேழு பேர் அமரும் குகையை மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் தெய்வீகமாக்கியது. கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார் ரஜினி. குருவைக் கண்டடைந்த மகிழ்ச்சியில் குகையின் மடியில் தலைசாய்ந்தார்.

பாபாவின் சீடர் நித்தியானந்தர் மந்திர உபதேசம் செய்தார். ரஜினியின் பக்தியின் ஆழத்தை உணர்ந்து, அக்னி தீட்சை அளித்து, எவருக்கும் எளிதில் வழங்காத க்ரியா யோகாவையும் போதித்தார். அந்த நிமிடம் தன்னை நெருக்கியிருந்த எல்லாப் பிரச்சினைகளும் நொறுக்கியதைப் போல ரஜினி உடல் சிலுப்பினார். குகையில் இருந்து வெளியே வந்ததும், “இதுவரை என் வாழ்வில் அனுபவிக்காத சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறேன். மறுபிறவி எடுத்தது போல இருக்கிறது. எனக்குள் புதுசக்தி பாய்ந்திருக்கிறது. நான் தேடிக்கொண்டிருந்த நல்ல குருவைக் கண்டடைந்து விட்டேன்” என உடல் சிலித்துச் சொன்னார் ரஜினி. அன்றிரவை நைனிடாலில் கழித்துவிட்டு, மறுநாள் டெல்லிக்குச் சென்று அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினோம்.” என்கிறார் ஹரி. அவரது சாட்சியம் இன்னும் இருக்கிறது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in