ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 60

அலைபாய்ந்த விமானத்தில் அமைதி காத்த ஹீரோ!
துவாரகேஷ், ஸ்ரீதேவி, ரஜினி
துவாரகேஷ், ஸ்ரீதேவி, ரஜினி

பொழுதுபோக்குப் படங்களுக்கு இணையாக சமூகக் கதைகளிலும் நடித்துகொண்டிருந்த ரஜினியை வைத்து எஸ்பி.முத்துராமன் இயக்கிய கிராமியம் கலந்த நகரத்துக் கதை ‘அடுத்த வாரிசு’. எஸ்பி.எம் - பஞ்சு அருணாசலம் கூட்டணி உருவாக்கிய திரைப்படங்கள் மீது சோவுக்கு நல்ல எண்ணம் உண்டு. அவர்களுடைய படங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தன்னுடைய ‘துக்ளக்’ பத்திரிகையில் விமர்சனம் வெளிவரச் செய்த சோ, பத்திரிகைத் தொழிலையும் தனது நடிப்புத் தொழிலையும் போட்டு அவர் குழப்பிக்கொண்டதேயில்லை.

சோவின் இந்த ’கெத்’தைப் பார்த்து அவருக்கு தனது படங்கள் அடிக்கடி வாய்ப்புக் கொடுத்தார் எஸ்பி.எம். அவரது இயக்கத்தில் வெளியான பல படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று அட்டகாசமாக நடித்திருப்பார் சோ. சில காட்சிகளே வருகிற சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ரஜினி படங்களில் தனது தனித்த நையாண்டி விமர்சன முத்திரையைப் பதித்துச் சென்றுவிடுவார்.

சோ
சோV_Ganesan

திரையுலகில் மற்றவர்களுடன் பழகியதுபோலத்தான் ரஜினியிடமும் தொடக்கத்தில் பழகினார் சோ. ஆனால், காலப் போக்கில் அந்தப் பழக்கம் நெருக்கமானது. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் சந்தானத்தின் நண்பர் அழகப்பனாக சோ நடித்தபோது அந்த நண்பர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அவ்வளவு சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. பிறகு, ‘அடுத்த வாரிசு’ படத்தில், ரஜினியை கவனித்துக் கொள்ளும் வீட்டுப் பணியாளர் ‘ராமண்ணா’ கதாபாத்திரத்துக்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்று எஸ்பி.எம். யோசித்தபோது, “சோ சார் கரெக்டா இருப்பாரா?” என்று கேட்டார் ரஜினி. அவரது யோசனையும் தேர்வும் மிகச் சரியாகப் பொருந்தியதைப் பார்த்து வியந்தார் எஸ்பி.எம். ‘அடுத்த வாரிசு’ படத்தில், ரஜினியை ‘கண்ணன் தம்பி’ என்று அழைத்து, ஸ்ரீதேவியை அவர் ஆற்றுப்படுத்தி, க்ளைமாக்ஸில் போலீஸைக் கூட்டிக்கொண்டு வருவதுவரை நறுக்கென்று கச்சிதமாக நடித்திருப்பார் சோ.

ரஜினியின் மனந்திறந்த ஒப்புதல்

சோவுக்கும் தனக்குமான நட்பு குறித்து, துக்ளக் பத்திரிகையிலேயே ஒருமுறை மனந்திறந்து எழுதினார் ரஜினி: “அரசியல் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வெளியில் இருந்து நாட்டு நடப்புகளைக் கவனித்து வருகிறேனே தவிர, அரசியல்வாதிகளுடன் பழகி, அவர்கள் மனங்களைப் புரிந்துகொள்ள நான் முற்பட்டதில்லை. அரசியல் கட்சிகளும் ஆட்சிகளும் செய்யும் காரியங்களில் இது சரி, இது தவறு என்ற கருத்துகள் எல்லோரையும் போல் எனக்கும் ஏற்படுவதுண்டு. அவற்றை நான் கவனித்துத்தான் வருகிறேன். ஆனால், இதற்கெல்லாம் என்ன பின்னணி... இது எப்படி நடந்தது? என்பது பற்றிய விவரங்களை அறியும் வாய்ப்பு, சந்தர்ப்பம் எனக்கு உண்டானதில்லை.

நண்பர் சோ-வோ பல ஆண்டுகளாக அரசியல் விமர்சகராக இருந்து வருபவர். நாட்டிலுள்ள பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளவர். அவர் அரசியலை ஆழ்ந்து கவனித்து வருகிறார். அவருடைய இந்த அனுபவம் எனக்கும் உதவியாக இருந்தது. சமீபகால நிகழ்வுகள் சம்பந்தமாக, அவர் என்னிடம் தெரிவித்த கருத்துகளும் அபிப்பிராயங் களும் எனக்கு உதவியாக இருந்தன. மாரல் சப்போர்ட் என்று சொல்வார்களே... அது சோவிடம் எனக்குக் கிடைத்தது. நான் அவருடன் கலந்தாலோசிக்க நினைத்த போதெல்லாம், தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எனக்காக அவர் நேரம் ஒதுக்கினார். இதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. அவர் வந்து என்னைச் சந்திப்பதும், நான் சென்று அவரைச் சந்திப்பதும் பல முறைகள் நடந்தன. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கும் நிறையவே கிட்டின” என்று எழுதியிருக்கிறார் ரஜினி.

ரஜினி பற்றிய சோவின் அவதானிப்பு

அதேபோல், ரஜினியுடன் தனது நட்பு குறித்த சோ சொல்லியிருப்பதையும் பார்த்துவிடலாம்: “நானும் ரஜினி காந்த்துடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். பல விஷயங்களைப் பற்றி பேசும் பொழுது நாங்கள் அரசியல் பற்றியும் பேசி இருக்கிறோம். மக்கள் மீதும் நாட்டின் மீதும் அவருக்கு இருக்கும் பற்று மிகவும் ஆழமானது. மனிதர்களை எடை போடுவதிலும் சரி, பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதிலும் சரி, நாட்டு நடப்புகளை அலசிப் பார்ப்பதிலும் சரி, சரியான அணுகுமுறைகளை வகுப்பதிலும் சரி... ரஜினி யாருக்கும் சளைத்தவர் அல்ல!

‘அடுத்த வாரிசு’.  ரஜினி, ஸ்ரீதேவி
‘அடுத்த வாரிசு’. ரஜினி, ஸ்ரீதேவி

பொதுவாக நல்லவர்களுக்கும் நேர்மையானவர் களுக்கும் திறமையானவர்களுக்கும் மக்களின் ஆதரவு அவ்வளவு எளிதாக கிட்டுவதில்லை; மக்களிடையே ஆதரவு பெற்றவர்களுக்கு நல்ல எண்ணம், நேர்மை, திறமை ஆகியவை இருப்பதில்லை என்கிற நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மக்கள் ஆதரவை மிகப் பெரிய அளவில் பெற்றிருக்கும் ஒருவரிடம் நல்லெண்ணம், நேர்மை, திறமை ஆகியவை ஒன்று சேரக்காணப்படும் போது, அந்த மனிதர் தமிழகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ஏற்படுகிறது. ரஜினிகாந்த் தமிழகத்திற்கு வருங்காலத்தில் பெரிய அளவில் பயன்படுவார் என்று தான் நம்புகிறேன்” என்று ரஜினியின் மனதைப் படித்துச் சொன்னவர் சோ,

ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தபோது உயிரோடு இருந்திருந்தால் அதற்காக ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார் சோ. காரணம், ரஜினி ஒரு முடிவு எடுக்கும் முன்பு பலமுறை அலசி, ஆராய்ந்து எடுப்பவர் என்பதை நன்கு அறிந்தவர் சோ. தனது புகழ் திரையுலகில் பலருக்கு உதவுவது போலவே மக்களுக்கும் உதவ வேண்டும் என்று ரஜினி நினைத்தாலும் அதற்கான அரசியல் சூழ்நிலையும், அவரது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் ஓய்வும் அமையவில்லை. அந்த சூழலே அவரை திரையுலகிலேயே இருந்து மக்களை மகிழ்ச்சிப் படுத்துவோம் என்ற இடத்துக்குக் கொண்டுவந்து விட்டது. அதை, ஒளிவு மறைவில்லாமல் அறிவிக்கவும் செய்தார் ரஜினி. அரசியலில் தனது இறுதியான உறுதியான முடிவு பற்றி மக்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்தியதுடன், “நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் என்னுடைய தலையீடு எதுவும் இருக்காது” என்றும் தெளிவுபடுத்தினார்.

நஷ்டப்பட்ட நாயகனுக்காக ஒரு படம்

கன்னடப் படவுலகில் துவாரகேஷ் ஒரு முன்னணி நடிகர். அவர் எடுத்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் நஷ்டத்திலிருந்து எழ முடியாமல் இருந்தார். இதை அறிந்துகொண்ட ரஜினி, துவாரகேஷை வரழைத்து அவருடன் எஸ்பி.முத்துராமனைச் சந்தித்து அவருக்காக படம் செய்து கொடுக்கவிருப்பதாகச் சொன்னார். அந்தப் படம்தான் ‘அடுத்த வாரிசு’. ரஜினியும் ஸ்ரீதேவியும் பங்குபெற்ற ‘காவிரியே கவிக்குயிலே’ என்கிற டூயட் பாடலை, பரந்து விரிந்த ஏரிக்கு நடுவே இருந்த ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட கோணங்களில் படமாக்கினார் எஸ்பி.எம்.

ஜெய்பூரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விமானத்தில் டெல்லி வந்து, அங்கிருந்து சென்னை வரவிருந்தனர் ரஜினி, ஸ்ரீதேவி, இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர். டெல்லிக்கு வரும் வழியில் இடையே கஜுராகோ ஏர்போர்டில் விமானம் தரை இறங்கும் சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்ததுபோல் தடதடவென பெரும் சத்தம் வந்ததுடன் விமானம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி வேறு எங்கும் போய் மோதிவிடுமோ என்று அனைவரும் பதற்றமானார்கள். விமானத்தில் இருந்த ரஜினியின் குடும்பம், ஸ்ரீதேவியின் குடும்பம், தயாரிப்பாளர் துவாரகேஷின் குடும்பம், படக் குழுவினர் என அனைவருமே மரண பயத்தில் கத்தி அலறத் தொடங்கிவிட்டார்கள். அந்த நேரத்தில் ரஜினி ஒருவர்தான் பதற்றமடையவில்லை.

அப்போது ரஜினி, ‘‘யாரும் பயப்படாதீங்க… எல்லோரும் தியானம் பண்ணுங்க. எதுவும் ஆகாது!’’ என்று தைரியமூட்டினார். அவர் சொன்னது போலவே, அலைபாய்ந்த விமானம், ஓடு பாதையில் கட்டுக்குள் வந்து அமைதியானது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட அனைவரும் ரஜினியை அதிசயமாகப் பார்த்தார்கள். ஜெய்பூர் ஏரியில் அழகான, வண்ண மயமான உடைகளைப் போட்டு கனவுலகுக்காக ரஜினி ஆடிப்பாடி நடித்தாலும் நிஜவுலகில் அவர் ஒரு மெய்ஞானியாக இருந்திருப்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு.

இந்த இடத்தில் ரஜினியின் ஆன்மிகப் பயணம் குறித்து வெளிவராத பல உண்மைகளைப் பேசுவது சரியாக இருக்கும். அதற்கு காரணமும் இருக்கிறது. இந்திய நிலப்பரப்புக்கு வெளியேயும் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டிருக்கும் ஒருவர், அந்தப் பிம்பத்தையும் புகழையும் சட்டை செய்யாமல், ஆன்மிகத் தேடலில் பற்றுறுதி கொண்டு, காவி அணிந்து... இமயமலைச் சாரலில் நெடுந்தூரம் நடந்து தனக்கான ஞானகுருவைத் தேடிக் கண்டடைந்த ஒருவர் உண்டு என்றால் அது ரஜினி மட்டும்தான். தன் மனம் கூறும்போதெல்லாம் இமயம் நோக்கி ஓர் எளிய பறவையைப் போல் பறந்துவிடும் அவருடைய தேடலின் முடிவு என்னவாக இருந்தது?

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in