ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 55

எம்ஜிஆர் போஸ்டரை எடுக்கச் சொன்னது ஏன்?
ஏவி.எம்.சரவணனுடன்...
ஏவி.எம்.சரவணனுடன்...

ஏவி.எம் - ரஜினி கூட்டணியில் அமைந்த வெற்றிப் படங்களில் ‘பாயும் புலி’யும் ஒன்று. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் தொடங்கி தன்னுடைய ஆத்ம நண்பர் ரஜினி பற்றிய நினைவுகளை நமக்காக தொடர்ந்து நினைவுகூர்ந்தார் ஏவி.எம். சரவணன்:

“எந்தவொரு செயல் என்றாலும் அதில், அனைவருக்கும் நியாயமான ஒன்றைப் பற்றியே ரஜினி யோசிப்பார். எங்கள் தயாரிப்பான ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமலுடைய சண்டைக் காட்சி ஒன்றில் ஓர் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்ட எம்ஜிஆர் பட போஸ்டர் வரும். அந்தக் குறிப்பிட்ட காட்சியின்போது, திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டலும், விசிலும் அதிகமாக இருக்கும்.

அந்தக் காட்சிக்குக் கிடைத்த அதிகப்படியான வரவேற்பைப் பார்த்துவிட்டு, ‘பாயும் புலி’ படத்தின் சண்டைக் காட்சி ஒன்றை எடுத்தபோது, சுவரில் எம்ஜிஆர் பட போஸ்டர் வரும்படி செய்திருந்தோம். அந்தக் காட்சியைப் படம் பிடித்தபோது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த எம்ஜிஆர் பட போஸ்டரைப் பார்த்த ரஜினி, அதை எடுத்துவிடும்படி சொன்னார். நாங்கள் அந்த போஸ்டர் எதற்காக என விளக்கியபோதும் கண்டிப்பாக அதனை எடுக்கச் சொல்லிவிட்டார்.

அதற்கு அவர் சொன்ன காரணம், ‘என்னைப் பார்க்க விரும்புகிறவர்கள் என் படத்துக்கு வர வேண்டும். எம்ஜிஆர் என்கிற ஜாம்பவானின் புகழைப் பயன்படுத்தி எனக்குப் பாராட்டுக் கிடைக்கும்படி செய்வது நியாயமில்லை’. அவர் சொன்னது நியாயமாகப் பட்டதால், எம்ஜிஆர் பட போஸ்டரை உடனே அகற்றிவிட்டு அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம்.

இன்னொரு சம்பவம். 1996-ல் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு ரஜினி எந்த அளவுக்குக் காரணம் என்பதை நாடே அறியும். அப்போது கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் அவரைச் சந்தித்த ரஜினி, ‘என் பெயரைச் சொல்லிக் கொண்டு, அதைச் செய்துகொடுங்கள், இதைச் செய்துகொடுங்கள்’ என்று யாரும் உங்களிடம் வரக்கூடாது என்று விரும்புகிறேன். எனவே, சம்பந்தப்பட்ட அனைவரிடமும் சொல்லியிருக்கிறேன். அப்படியே யாராது வந்தாலும் நீங்கள் அவர்களை நம்பவேண்டாம்’ என்று தெளிவுபடுத்தியதை நான் அறிவேன். அந்த அளவுக்கு யாருடைய பெயரையும் மற்றொருவர் ‘மிஸ் யூஸ்’ செய்யக்கூடாது என்பது மட்டுமல்ல; யாரையும் டேமேஜ் செய்யக்கூடாது என்றும் நினைப்பவர்தான் ரஜினி. அதற்கு ஓர் பதம் இந்தச் சம்பவம்.

கருணாநிதி, ஸ்டாலின் உடன்...
கருணாநிதி, ஸ்டாலின் உடன்...

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

‘பில்லா’ காலத்தில் தொடங்கி ரஜினியுடன் பல படங்களில் நடித்தவர் ஆச்சி மனோரமா. மிகவும் மரியாதைக்குரியக் கலைஞராக ரசிகர்களாலும் திரையுலகைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களாகவும் கருதப்பட்டவர். அவர், ஜெயலலிதாவிடம் ஆசிபெற்று 1996 தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார். ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக அல்லாமல், தனிப்பட்ட முறையில் ரஜினியைப் பற்றி கடுமையாக அவர் விமர்சித்தபோது நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். சாகும்வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆச்சியின் திரையுலக வாழ்க்கைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துகொள்ளும்படி ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வருந்தினேன். ஆச்சிக்கு புதிய படங்கள் புக் ஆகவில்லை. ஒப்பந்தம் செய்த படங்களிலிருந்தும் அவரை நீக்கிவிட்டார்கள். அது மட்டுமா? அவர் இடம்பெற்று வந்த டிவி விளம்பரங்களையும் கூட நிறுத்திவிட்டார்கள்.

பாயும் புலியில்...
பாயும் புலியில்...

இந்தச் சூழ்நிலையில் ஆச்சியின் விமர்சனத்தை மனதில் வைத்துகொள்ளாமல், தன்னுடைய ‘அருணாசலம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றைக் அவருக்குக் கொடுத்து, திரையுலகில் மறுவாழ்வை அளித்தார் ரஜினி. இது ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்கிற அவருடைய தலை சிறந்த பண்பைக் காட்டுகிறது.

நேரடி அரசியலை விரும்பாதவர்!

அரசியல் அரங்கிலும் தேர்தல் நேரத்திலும் ரஜினியின் வார்த்தைகளுக்கு மரியாதை இருந்தாலும் அவருக்கு நேரடி அரசியலில் என்றைக்குமே விருப்பம் இருந்ததில்லை. ஒருமுறை, மறைந்த தொழிலதிபர் அருணாசலத்துடன் மும்பையிலிருந்து ஒன்றாக விமானத்தில் சென்னை வந்தபோது திரையுலகம் பற்றி அவர் கேட்டவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன். பேச்சின் முக்கியமான கட்டத்தில், அவர் ‘நீங்கள் ரஜினிகாந்துக்கு ரொம்ப நெருக்கமானவர்தானே? நீங்கள் சொன்னால் அவர் நிச்சயம் கேட்பார். அவரை அரசியலுக்கு வரச் சொல்லுங்கள்’ என்றார். அப்போது நான் அவரிடம் பொறுமையாக.. ‘அவர் ரொம்ப நல்ல மனிதர். அவருடைய ரியல் லைஃப் கேரக்டருக்கு அரசியல் ஒத்து வராது’ என்றேன்.

ஆனால், அவர் என்னை விடுகிற மாதிரியில்லை. ‘இன்றைக்கு நம்ம நாட்டு அரசியலுக்கு நல்லவர்கள் வரணும். அவர்கள் வல்லவர்களாக இருக்கணும் என்று அவசியமில்லை. வல்லவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு நல்லவர்களால் சிறப்பான ஆட்சியைத் தரமுடியும்’ என்றார். அவரது ஐடியா நன்றாக இருப்பதாக பாராட்டிவிட்டு மறுபடியும் நிதானமாகச் சொன்னேன். ‘எனக்குத் தெரிந்தவரை ரஜினிக்கு நேரடியாக அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியும் இல்லை. அவரை அரசியலுக்கு எப்படியாவது இழுத்துக் கொண்டுவந்து அவரது புகழை வைத்து தங்களுக்கு ஓட்டு வாங்கிடவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அவரை அரசியலுக்குள் இழுக்கப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் குறைவாக இருக்கிறார்கள்’ என்றேன்.

மறக்கமுடியாத விமானப் பயணம்

இந்த சமயத்தில் ரஜினி தன்னுடைய விமானப் பயணம் ஒன்றில் ஏற்பட்ட அனுபவம் பற்றி என்னுடன் பகிர்ந்துகொண்டதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. ஏனென்றால் அவர், என்னிடம் அந்த பயண அனுபவத்தைச் சொன்னபோது நானும் மகிழ்ச்சியடைந்தேன். சிலநாள் வரை மனதுக்குள் சிரித்துக்கொண்டும் இருந்தேன். பின்னர் அவரிடம், ‘நீங்கள் இந்த சம்பவத்தை ஒரு விழாவில் சொல்ல வேண்டும்’ என்று சொன்னேன். அவரும் அதை ஒரு விழாவில் சொன்னார்.

பாயும்புலி ரஜினி...
பாயும்புலி ரஜினி...

அவர் சொன்னது இதுதான்…

‘ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். விமானத்தின் ஜன்னல் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்தேன். என் அருகில் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். வேட்டி அணிந்து, நெற்றியில் திருநீறு அணிந்திருந்தார். அவரது முகம் மட்டும் ஏதோ கடுகடுப்பான ஆள்போல் இருந்தது. என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர், விமானத்தில் என்னிடம் வந்து ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அதைப் பார்த்ததும் அவரது முகம் மேலும் கடுகடுப்பாகிப்போனது. சற்று தொண்டையைச் செருமிக்கொண்டு ‘உங்கள் பெயர் என்ன?’ என்றார்.

‘ரஜினிகாந்த்’ என்றேன்.

‘ஓகோ… நீங்கள்தானா அது? என்ன ஷூட்டிங்கா?’ என்றார்.

அவரது பேச்சில் நக்கல் தொனித்தது. ‘இல்ல சார்... ஹாலிடே’ என்றேன். ‘உங்க பணமா? புரொடியூசர் பணமா?’ என்றார். ‘என் பணம்தான்.’

‘உங்க பணமா இருந்தாலும் அது புரொடியூசர் கொடுத்ததாத் தானே இருக்கும்?’

- எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. என்னடா இதுன்னு தோணுச்சு. அந்த சமயத்துல நான் கொஞ்சம் தாடி வளர்த்திருந்தேன். அது வெள்ளையாக இருந்தது. அதைப் பார்த்துவிட்டு, ‘என்ன தாடி... உடம்பு சரியில்லையா? என்றவர், நான் பதில் சொல்வதற்குள்ளாகவே ‘ஓ... மார்க்கெட் போச்சா?’ என்றார். அத்தோடு நிறுத்தவில்லை.

‘மார்க்கெட் இருக்கும்போது என்ன ஆட்டம் போடுறீங்க!’ என்றார். நான் பேசவேயில்லை. சிவனே என்று தலையைப் பிடித்துகொண்டு அமர்ந்திருந்தேன்.

என்னை நன்றாக உற்றுப் பார்த்தவர், ‘என்ன தலைமுடி கறுப்பா இருக்கு... தாடி வெள்ளையா இருக்கு... ஸ்டைலா?’ என்றார்.

‘சார் தாடி முடி வெள்ளையா இருக்க இரண்டு காரணம் இருக்கு. ஒண்ணு வயசு காரணம்.. இன்னொன்னு அறிவு கம்மியா இருக்குன்னு அர்த்தம். எனக்கு வயசாயுடுச்சு… வெள்ளையா இருக்கு’ என்றேன்.

உடனே அந்தப் பெரியவர் அவருடைய வெள்ளை தாடியைப் பார்த்துவிட்டு, ‘எனக்கு அறிவு கம்மிங்கிறீங்களா? வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்?’ என்று கேட்டு கன்னாபின்னாவெனக் கத்தத் தொடங்கிவிட்டார்.

அதற்குமேல் என்னால் அங்கு உட்கார முடியவில்லை. ஆசையாய்க் கேட்டு வாங்கிய ஜன்னல் இருக்கையைவிட்டு எழுந்து, வேறொரு இடத்தில்போய் அமர்ந்தேன். அங்கு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் என்னிடம்,

‘எப்படி அந்த ஆள்கூட இவ்வளவு நேரம் இருந்தீங்க?’ என்றார். நான் எதற்காக இப்படிக் கேட்கிறார் என்று புரியாமல் அவரைப் பார்க்க...

‘நான் அவரோட வைய்ஃப். எப்ப ட்ராவல் பண்ணாலும் நான் அவர் பக்கத்துல உட்காரவே மாட்டேன்’ என்றார்.

அதைக்கேட்டு அதுவரை எனக்கிருந்த டென்ஷனை மறந்து சிரித்துவிட்டேன். பாவம் அந்தப் பெண்மணி’ என்று ரஜினி சொல்லி முடித்தார். இப்போது சொல்லுங்கள் ரஜினி எத்தனை பொறுமையான மனிதர்” என்று முடித்தார் ஏவி.எம்.சரவணன்.

எதுவொன்றையும் பொறுமையாக டீல் செய்யவேண்டும், அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும் என்கிற பக்குவத்தைக் கொண்ட ரஜினி, இந்திப் பட சாம்ராஜ்ஜியம் தன்னை அழைத்தபோது நல்ல கதை கிடைக்கும்வரை நேரடி இந்திப் படத்தில் நடிப்பதில்லை என்கிற முடிவில் பல முக்கியமான பட அதிபர்களின் வாய்ப்புகளை மறுத்தார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் கதையும், திரைக்கதையும் அவரது முடிவை மாற்றியமைத்தது.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in