ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 50

வி.சி.குகநாதன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 50

எம்ஜிஆரால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட பலரில் வி.சி.குகநாதனும் ஒருவர். எம்ஜிஆர் முதல்வரான நேரத்தில், அவரை போற்றிப் புகழும் விதமாக வி.சி.குகநாதன் இயக்கிய படம்தான் ‘மாங்குடி மைனர்’. இந்தியில் வெளியான ‘ராம்பூர் கா லட்சுமண்’ என்ற படத்தின் தழுவல்தான் ‘மாங்குடி மைனர்’.

ஆனால், இந்தப் படத்தை சென்சார் தடை செய்தது. எம்ஜிஆருக்கு முன் முதலமைச்சராக பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியை திட்டும் விதமாக ’கோடையிடி குமரப்பா’ என்கிற கதாபாத்திரம் படத்தில் இருப்பதாக தடைக்கான காரணத்தைச் சொன்னது சென்சார். ‘மாங்குடி மைன’ருக்கு தடை என்ற செய்தி பத்திரிகைகளில் பரபரப்பானது. ரஜினிக்கு இதில் சிறிய வேடம்தான் என்றாலும் ‘இப்படியொரு சர்ச்சைக்குரிய படத்தில் தன்னை நடிக்க வைத்துவிட்டாரே என்று இயக்குநர் மீது ரஜினிக்கு மனவருத்தம். வி.சி.குகநாதன் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ படத்தின் தயாரிப்பாளர், தெலுங்குப் படவுலகின் முக்கிய தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு. இயக்குநர் யார் என்று தெரியாமலேயே அட்வான்ஸ் வாங்கியிருந்த ரஜினி, பிறகு, இயக்குநர் வி.சி.குகநாதன் என்றதும் ஷாக் ஆனார். “இயக்குநரை மாற்றுவதாக இருந்தால் நடிக்கிறேன்” என்று அந்த ஜாம்பவான் தயாரிப்பாளரிடம் கறாராகச் சொன்னார் ரஜினி. அப்படிச் சொன்னவர், பிறகு எப்படி வி.சி.குகநாதன் இயக்கத்தில் ‘தனிக்காட்டு ராஜா’வில் நடிக்க ஒப்புக்கொண்டார்?

இந்த வயசுல உழைக்கணும்!

‘ராம்பூர் கா லட்சுமண்’ இந்திப் படத்தில் சத்ருகன் சின்ஹா புதுவிதமான ஸ்டைல் காட்டி நடித்திருந்தார். அந்தக் கதையை எம்ஜிஆர் புகழ்பாடும் படமாக தமிழில் தயாரித்து, அதில் ரஜினிக்கு சத்ருகன் சின்ஹா நடித்த வேடத்தை கொடுத்தால் கச்சிதமாக இருக்கும் என்று எண்ணினார். வி.சி.குகநாதன். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்தி வந்த ‘நடிப்புப் பள்ளி’யில் சிவாஜி ராவாக ரஜினி படித்து வந்தபோதே வி.சி.குகநாதன் அவரை அறிந்திருந்தார். ‘மூன்று முடிச்சு’ படத்தைப் பார்த்தபின் ரஜினியை தனி நாயகனாகப் போட்டுப் படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வி.சி.குகநாதனுக்கு வந்துவிட்டது. அதற்கு முன்னோட்டமாக ‘ராம்பூர் கா லட்சுமண்’ படத்தின் ரீமேக்கில் அவருக்கு சின்ன ரோல் கொடுத்து ‘ட்ரையல்’ பார்க்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார் குகநாதன்.

அதுவரை ஸ்டைல் வில்லன், ஆன்டி ஹீரோ என அடையாளம் பெற்றுவந்த ரஜினிக்கு, ‘மாங்குடி மைனர்’ படத்தில் அம்மா சென்டிமென்ட்டுடன் முதன் முதலாக ஆக்‌ஷன் ரோல் கொடுத்தார். கிட்டத்தட்ட ‘தளபதி’ படத்தின் சூர்யா வேடத்தை ஒத்திருந்தது அந்த வேடம். ‘மாங்குடி மைனர்’ படத்தில் நடிக்க 17 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ரஜினி. அந்த சமயத்தில் 12 படங்களை ஒப்புக்கொண்டு இரவு பகலாக நடித்தார் ரஜினி.

அந்த சமயத்தில் வி.சி.குகநாதனுக்கு போன் செய்த இயக்குநர் ஸ்ரீதர், “என்னோட ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்கு ரஜினியின் கால்ஷீட் எல்லாம் முடிஞ்சுப்போச்சு. உங்கிட்ட இருக்கிற 17 நாள் கால்ஷீட்ல 8 நாளை எனக்குக் கொடுத்தா நான் பேட்ச் வொர்க் பண்ணிக்கிறேன். எம்ஜிஆர் சார்கிட்டயும் பேசினேன். ‘நான் சொன்னேன்னு குகன்கிட்ட சொல்லு; ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் பண்ணி படத்தை முடிச்சுக்கோங்க’ன்னு சொன்னாருப்பா. நீ என்ன சொல்றே?” என்று அதிகாரத் தோரணையுடன் கேட்டார்.

தனது வழிகாட்டியும் தலைவருமான எம்ஜிஆரே சொன்னபிறகு என்ன சொல்லமுடியும்? (பின்னாளில் கலைஞரின் உற்ற தொண்டராக குகநாதன் உணர்ச்சிகரமானது தனிக்கதை). 9 நாள் கால்ஷீட்டை விட்டுக்கொடுக்கும் முன், ரஜினியிடம் குகநாதன் கேட்டார். “இன்ஸ்டிடியூட் தம்பி… ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஷூட்டிங் நடப்பது சென்னையில... ‘மாங்குடி மைனர்’ ஷூட்டிங் ஹைதராபாத்துல. இதுல தலைவர் கால்ஷீட்டை ஷேர் பண்ணிக்கன்னு வேற சொல்லிட்டார். நீங்க எப்படி இங்கேயும் அங்கேயும் வந்துபோவீங்க; எப்ப தூங்குவீங்க?”.

கொஞ்சமும் பதற்றப்படாத ரஜினி, “17 நாள் தூக்கத்தை மறந்துடுறேன் சார்... இருக்கவே இருக்கு ஃப்ளைட். பகல் முழுக்க உங்களுக்கு நடிக்கிறேன். இரவு முழுக்க ஸ்ரீதர் சாருக்கு நடிக்கிறேன். இந்த வயசுல உழைக்காம அப்புறம் எப்போ?” என்றார். இதைக் கேட்டு வி.சி.குகநாதன் வியந்துதான் போனார்.

ரஜினியின் வருத்தம்

சொன்னதுபோலவே ரஜினி, சிரமம் பாராமல் இரவு பகலாக நடித்தார். காலை, விமானம் மூலமாக ஹைதராபாத்துக்கு வருவார். பகல் முழுவதும் ‘மாங்குடி மைனர்’ படத்தில் நடிப்பார்.. மாலை 7 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பி, அங்கு இரவில் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப்பிடிப்பில் விடிய விடிய நடிப்பார்.

இதுபற்றி வி.சி.குகநாதன் கூறும்போது, “எங்களுக்கு 17 நாட்களில் நடித்துக்கொடுக்க வேண்டிய காட்சிகளை 9 நாள் கால்ஷீட்டில், அதிரடியாக நடித்துக் கொடுத்தார் ரஜினி. பட அதிபர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தன்னை வருத்திக்கொள்ளத் தயங்காதவர் ரஜினி” என்று சொல்லி இருக்கிறார்.

‘மாங்குடி மைனர்’ படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி, சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சங்கிலி முருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன் என ஏகப்பட்ட நடிகர்கள். விஜயகுமாரின் நண்பனாக நடித்திருந்தாலும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் நண்பனுக்காக சண்டையிட்டு உயிரைவிடும் அதிரடி சண்டைக்காட்சியில் ரஜினியின் நடிப்பு, இவர் ஒரு ‘மாஸ் ஹீரோ மெட்டீரியல்’ என்பதைச் சொல்லாமல் சொன்னது.

1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தி, தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியானதும் திமுக அபிமானிகள் ரஜினியிடம், “கலைஞரை கேலி செய்யும் படம்னு தெரிஞ்சும் நடிச்சீங்களா... அப்டின்னா நீங்க எம்ஜிஆர் ஆளா... நாளைக்கு எங்க ஆட்சியும் வரும்... தெரியும்ல?” என்று மிரட்டல் தொனியில் விசாரணைகளைப் போட்டார்கள். அந்த மிரட்டல்களுக்கு எல்லாம் ரஜினி பயப்படவில்லை என்றாலும், “யாரையும் அரசியல் ரீதியாக தாக்கும் படங்களில் நான் தலையைக் கொடுக்கக்கூடாது. தமிழ்நாடு எனக்கு வாழ்வளிக்கும் மாநிலம். இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கலாமே தவிர எதிரிகள் இருக்கக்கூடாது. எம்ஜிஆர் சார் கலைஞர் சார் இருவரும் எப்படி தமிழ் மக்களுக்கு முக்கியமோ அப்படித்தான் எனக்கும். நான் என்னுடைய ரசிகர்களின் பிரதிபலிப்பாகவே இருக்க விரும்புகிறேன்” என்று வி.சி.குகநாதனிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார் ரஜினி.

மாங்குடி மைனர் படத்தில்...
மாங்குடி மைனர் படத்தில்...Scanned in Chennai R.K.Sridharan

விலகிய கமல்... உருகிய ரஜினி!

ரஜினிக்கும் வி.சி.குகநாதனுக்கும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டாலும் குகநாதன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தெலுங்குப் படவுலகில் முன்னணிப் பட அதிபரான ராமா நாயுடு தயாரித்த 5 தெலுங்குப் படங்களை குகநாதன் அடுத்தடுத்து இயக்கி, அவை மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தன. ‘மாங்குடி மைனர்’ வெளியாகி வெற்றிபெற்றிருந்த சமயத்தில் குகநாதனை அழைத்த ராமா நாயுடு, “உங்கள் திறமையாலும் உழைப்பாலும் பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். உங்களுக்கு ஒரு பங்களாவும் காரும் வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன். வீடு எங்கே வேண்டும். ஹைதராபாத்திலா... சென்னையிலா?” என்று கேட்டார். ஆனால் குகநாதன், “எனக்கு பங்களா காரெல்லாம் வேண்டாம். ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு பிரம்மாண்டப் படத்தை 70 எம்.எம்மில் இயக்க விரும்புகிறேன். அதை நீங்கள் தயாரித்தால் அதுவே எனக்குப் போதும். அதற்குரிய ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.

“இதென்ன பெரிய விஷயம்?” என்றார் ராமா நாயுடு. “கமல் - ரஜினி இரண்டுபேரிடமுமே தற்போது கால்ஷீட் இல்லை. ஆனால், நீங்கள் கேட்டால் அவர்கள் மறுக்கமாட்டார்கள்” என்றார் குகநாதன்.

உண்மைதான்! ராமநாயுடு கேட்டதுமே கமல் - ரஜினி இருவருமே கால்ஷீட் கொடுத்துவிட்டார்கள். ரஜினியும் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டார். வாங்கிய கையோடு, “டைரக்டர் யார் சார்?” என்று ரஜினி கேட்டபோது “வி.சி.குகநாதன்... ஹாட்ரிக் ஹிட் டைரக்டர்” என்றார் ராமா நாயுடு.

“சாரி சார்… அவர் அரசியல் காட்சிகளை வச்சுடுவார். வில்லங்கம் தானா வந்துசேரும். அவர் டைரக்‌ஷன்ல நான் நடிக்க விரும்பல” என்றார் ரஜினி. இதை குகநாதனிடம் தயாரிப்பாளர் சொன்னதும் ரஜினியைத் தேடி வந்தார் குகநாதன். ரஜினி பதறிப்போய்விட்டார். “சார்... சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே” என்றார். “இல்ல இன்ஸ்டிடியூட் தம்பி… நம்ம நட்பு ஆரம்பிச்சது இன்ஸ்டிடியூட்ல. நினைவு இருக்குல்ல... ‘மாங்குடி மைனர்’ என் தலைவருக்காக பண்ணின படம்தான். ஆனா, அந்தப் படத்துல இருந்த அரசியல்ல உங்க கேரக்டர் சம்பந்தப்படல. அதையும் மீறி நீங்க வருத்தம் அடைஞ்சுட்டீங்க. என்னால உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கு நான் மனசார வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றார் குகநாதன். ரஜினி அப்படியே உருகிப்போய்விட்டார். குகநாதன் ராமா நாயுடு படம் பற்றி பேச்செடுக்கும் முன்பே, “நான் உங்கப் படத்துல நடிக்கிறேன்... ஆர் யூ ஷ்யூர் கமல் அக்செப்ட் திஸ் ஆஃபர்?” என்று கேட்டார் ரஜினி.

ரஜினி சந்தேகமாகக் கேட்டதுபோலவேதான் நடந்தது. கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் வந்து, ராமா நாயுடுவைச் சந்தித்தார். “கமல் உங்கப் படத்துல நடிக்க முடியாது. தயவு செஞ்சு இந்த அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கோங்க” என்றார். குகநாதன் விக்கித்து நின்றார்..

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in