ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 49

ரஜினிக்கு ராணுவ வீரன் தந்த படிப்பினை
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 49
ராணுவ வீரனில்...

உச்ச நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை எட்டிய பிறகு, ரஜினியிடம் அவருடைய ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர். அதை மனதில் வைத்தே, ரஜினிக்கான திரைக்கதைகளை எழுதி வந்தார் எஸ்பி.முத்துராமன். எம்ஜிஆருக்காக ‘ராணுவ வீரன்’ படத்தின் கதையை உருவாக்கியிருந்தார் ஆர்.எம்.வீரப்பன். ஆனால், முதலமைச்சராகிவிட்டதால் தன்னால் இனி நடிப்பது சாத்தியமில்லை என்பதை, ஆர்.எம்.வீக்கு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் எம்ஜிஆர். ‘ராணுவ வீரன்’ கதையை ஏற்கெனவே கேட்டிருந்த எம்ஜிஆர், தனக்குப் பதிலாக ரஜினிகாந்தை வைத்து படத்தை எடுக்கும்படியும் சொன்னார்.

தலைவரே சொன்னபிறகு முதல்நிலைத் தொண்டன் அதைத் தட்டுவாரா? ‘ராணுவ வீரன்’ படத்துக்கு ரஜினியை நாயகனாத் தேர்வுசெய்த ஆர்எம்வீ, அப்போது தெலுங்கில், முன்னணி நடிகராக மாறியிருந்த சிரஞ்சீவியை வில்லன் வேடத்துக்கு தேர்வு செய்தார். சிரஞ்சீவியும் ரஜினியைப் போலவே எதிர்மறை வேடங்களின் வழியாக கதாநாயகன் ஆனவர். தெலுங்கில் பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்த அவர், ராணுவ வீரனில் ஒரு கண்ணில் பூ விழுந்த ஒண்டிக் கண் வில்லனாக துணிந்து நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

ராணுவ வீரன் தந்த படிப்பினை

விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் ராணுவ வீரனுக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையே நடக்கும் நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம்தான் கதை. கொள்ளைக் கூட்டத்தின் தலைவன், ராணுவ வீரனுடைய பால்ய நண்பன் என்பது படத்தின் க்ளைமாக்ஸ். தனது கிராமத்து மக்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுத்து, கொள்ளைக் கூட்டத்துக்கு எதிராக சண்டையிட்டு அவர்களை அடித்து விரட்ட தன்னம்பிக்கை கொடுக்கும் ராணுவ வீரன் வேடத்தில் ரஜினி நடித்தார். வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு, இடுப்பில் பிச்சுவாக் கத்தியையும் சுருக்குப் பையையும் சொருகி வைத்துக்கொண்டு ரஜினியைக் காதலிக்கும் கிராமத்துப் பெண்ணாக ஸ்ரீதேவியும் நடித்தார். ஆனால், ரஜினிக்கு ராணுவ வீரன் தோற்றத்துக்காக ஒட்ட வைக்கப்பட்ட ஒட்டு மீசை மட்டுமல்ல... கதையும் சுத்தமாக அவருக்கு ஒட்டவில்லை.

1981-ம் வருடம் தீபாவளி அன்று வெளியான முக்கியமான படங்களில், கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’, சிவாஜி நடிப்பில் உருவான ‘கீழ்வானம் சிவக்கும்’, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ‘ராணுவ வீரன்’, பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல் நடித்திருந்த ‘டிக்... டிக்... டிக்…’ ஆகிய படங்களுடன் பாக்யராஜ் நடித்து, இயக்கியிருந்த ‘அந்த 7 நாட்கள்’ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

கதைதான் கதாநாயகன்

ஆனால், படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கும் எதிர்பார்ப்புக்கும் சம்பந்தமில்லை என்று ஆகிவிட்டது பாக்ஸ் ஆபீஸ் நிலவரம். ‘தண்ணீர் தண்ணீர்’ வறண்ட பூமியில் ஒரு சொட்டு தண்ணீருக்கு ஏங்கும் வறிய மக்களின் பிரச்சினையைப் பேசியதால், விமர்சகர்களின் பாராட்டுகளையும் மிகச் சுமாரான வரவேற்பையும் பெற்றது. ‘கீழ்வானம் சிவக்கும்’ படத்தில் நல்ல கதையுடன் சிவாஜி - சரிதாவின் நடிப்பு அனல் பறந்ததால், அதுவும் சுமார் வெற்றியைப் பெற்றது. ஆனால், கமல் - ரஜினி இருவரது முயற்சிகளுமே எடுபடவில்லை. மசாலா அம்சங்களாக, செட்டில் எடுக்கப்பட்ட ஜிகினா பாடல்களும் குங்பூ சண்டைக்காட்சிகளும் ‘டெம்பிளேட்’ வில்லன்களும் இருந்தால் மட்டும் படம் ஓடாது என்பதை, இவ்விரு உச்ச நட்சத்திரங்களுக்கும் அவர்களுடைய தீபாவளிப் படங்கள் சொல்லிக்கொடுத்தன.

சிவாஜி, கமல், ரஜினி படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, அழுத்தமான கதையம்சம் இருந்தால் நட்சத்திரங்கள் யார் என்பதைக் கூட மக்கள் பார்க்கமாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது, ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் வெற்றி. தொடர்ந்து 50 நாட்கள் ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளால் நிறைந்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தை ரஜினி குடும்பத்துடன் தியேட்டருக்கே போய் பார்த்தார்.

மருத்துவரான ராஜேஷ், முதலிரவு அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடும் தன்னுடைய புது மனைவியான அம்பிகாவைக் காப்பாற்றி, அவருடைய மனக்குறையைக் கேட்கிறார். அவரும் சொல்கிறார். மனைவியின் காதல் கதை தெரிந்ததும், ஒரு வாரத்தில் காதலனிடமே அவரைச் சேர்த்துவைப்பதாக அவருக்கு உறுதிமொழி அளிக்கிறார். அம்பிகாவின் காதலரான பாக்யராஜ் ஒரு இசைக்கலைஞர் என்பதை அறிந்து, அவருக்கு சினிமாவில் இசையமைக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி ராஜேஷ் அழைத்து வருகிறார். அவரிடம் அவருடைய காதல் கதையையே விவரித்து பாடலுக்கு மெட்டுப்போடச் சொல்கிறார்.

பின்னர், அட்வான்ஸ் தருவதாகக் கூறி அழைத்துப்போய் அம்பிகாவின் முன்னால் நிறுத்துகிறார். சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் பாக்யராஜ், ‘என்னோட காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால், உங்க மனைவி எனக்குக் காதலியாக முடியாது சாரே” என்று சொல்லி, ராஜேஷுக்கும் அம்பிகாவுக்கும் குட்பை சொல்லிவிட்டு விடைபெற்றுச் செல்வார்.

கலாச்சாரத்தை காப்பாற்றும் அதே சமயம் கத்திமேல் நடக்கிற மாதிரியான சர்ச்சைக்குரிய கதையை இயக்குநர் கையாண்டிருந்ததைக் கண்டு வியந்த ரஜினி, ‘நட்சத்திர அந்தஸ்து ஓரளவுக்குத்தான் கைகொடுக்கும்’ கதைதான் உண்மையான கதாநாயகன் என்பதில் உறுதி கொண்டார். இதன்பின்னர், தான் நடிக்கும் படங்களில் கதைகளை, அவை ரீமேக் படங்களாக இருந்தாலும் அவற்றை எவ்வாறு இன்னும் மெருகேற்றுவது என யோசிக்கத் தொடங்கியதுடன், அந்தக் கதைகளை தன்னுடைய நட்பு வட்டத்தில் டிஸ்கஸ் செய்வதையும் ஒரு பழக்கமாகப் பின்பற்றத் தொடங்கினார் ரஜினி. கதை விவாதத்தில் பங்குபெறும் நண்பர்களுக்கு நாகரிகமான அளவுக்கு ஊதியமும் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டார் ரஜினி.

நடிக்க மறுத்த கதை

எத்தனை சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்தாலும் கதையும் திரைக்கதையும்தான் எல்லாமும் என்பதை உறுதியாகப் பற்றிக்கொண்ட ரஜினி, ‘ராணுவ வீரன்’ படத்தைத் தொடர்ந்து நடித்த படம் ‘போக்கிரி ராஜா’. தெலுங்கில் ‘சுட்டாலு உன்னாரு ஜாக்கிரதா’ (சுற்றத்தினர் இருக்கிறார்கள் ஜாக்கிரதை) என்ற படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அந்தப் படத்தைப் பார்த்த ஏவி.எம். சரவணன், அதனுடைய தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார். அந்தப் படத்தில் ரஜினி நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த சரவணன், அந்தப் படத்தைப் பார்க்க வரும்படி அழைத்தார். ஆனால், ரஜினி எடுத்ததுமே மறுத்தார். “நான் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். பாலையா என்பவர் எனக்குப் போட்டுக்காட்டினார். சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை. இதில் நடித்தால் ‘காளி’, ‘ஜானி’ ஆகிய படங்கள் வழியாக எனக்குக் கிடைத்திருக்கும் இமேஜ் அப்படியே கீழே இறங்கிவிடும். அதனால் நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை” என்றார் ரஜினி.

ஆனால். ஏவி.எம். சரவணன் ரஜினியை விடுவதாய் இல்லை. “நீங்க இப்ப ஸ்டார்தான் நான் மறுக்கல. ஆனா, ஸ்டார்களுக்குக்கூட வரிசையா நாலு படம் ஓடணும். அப்பதான் அவங்க ஸ்டார்டம் ஸ்ட்ராங் ஆகும். எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் தொடர் வெற்றிகள்தான் ஸ்டார்டம் கொண்டுவந்தது” என்று கிடுக்கிப்போட்டார்.

“சார்... அவங்கெல்லாம் கிரேட் லெஜெண்ட்ஸ்! அவங்ககூட என்னைக் கம்பேர் பண்ணாதீங்க... நான் தனி மனிதன், என்னுடைய வழியும் தனி” என்ற ரஜினி, “நீங்க ஏன் இந்தப் படத்தை கமலை வெச்சு எடுக்கக்கூடாது?” என்று கேட்டார். அதற்கு சரவணன், “கமல் இந்தக் கதையில் நடிச்சா ‘சட்டம் என் கையில்’ படத்தோட சாயல் வந்துடும். எனக்காக நீங்கள் இன்னொரு முறை படத்தைப் பாருங்க” என்று ரஜினியைக் கட்டாயப்படுத்தி, படம் பார்க்க வைத்தார். அப்போது ரஜினி சொன்னார் . “என்கூட ஒரு ரைட்டரையும் படம் பார்க்க வைங்க. அவர் ஃபீல் என்னன்னு பார்த்து முடிவு செய்யலாம்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட சரவணன், அப்போது மிகவும் பாப்புலராக இருந்தவரும் ‘தில்லு முல்லு’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவருமான விசுவை அழைத்து ரஜினியுடன் படம் பார்க்க வைத்தார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ரஜினி, சரவணன் இருவரும் விசுவின் கருத்துக்காகக் காத்திருந்தனர். விசுவோ படத்தின் ப்ளஸ், மைனஸ்களை ஒரு பேப்பரில் தெளிவாக எழுதிக் கொடுத்துவிட்டார். விசு சொன்னபடி புதிய கதாபாத்திரம் ஒன்றை இணைத்து, ராதிகா கதாபாத்திரத்தை நீட்டிப்பு செய்து தேவையான திருத்தங்களைச் செய்த பிறகே, ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஏவி.எம். சரவணனுக்கு ஆச்சரியம் அள்ளிக்கொண்டு வந்தது. ஒரு தோல்விப்படம், தான் அடுத்து நடிக்கும் படத்தின் கதை எத்தனை செம்மையாக இருக்கவேண்டும் என்கிற இடத்துக்கு ரஜினியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இனி ரஜினியின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது’ என்று முடிவுக்கு வந்தார். விசு சொன்ன திருத்தங்களை செய்யாமல் விட்டிருந்தால், ‘போக்கிரி ராஜா’ 148 நாட்கள் ஓடி, ஏவி.எம் நிறுவனத்துக்கும் ரஜினிக்கும் பெருமை சேர்த்திருக்குமா என்பது சந்தேகம்தான்! ‘போக்கிரி ராஜா’வின் வெற்றிப் பயணம் இப்படி இருக்க... அதற்கு அடுத்து தயாரான ‘தனிக்காட்டு ராஜா’ படத்திலோ, படத்தின் இயக்குநர் குகநாதனை மாற்றச் சொல்லி அதிரடி காட்டினார் ரஜினி.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in