ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 46

ரஜினிக்கு வயது என்பது நம்பர் மட்டுமே!
தர்மத்தின் தலைவன் படத்தில்...
தர்மத்தின் தலைவன் படத்தில்...

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதைப் பெற்றவர் சுஹாசினி. அவர், ரஜினியுடன் இணைந்து பணிபுரியக் காரணமாக இருந்தவர் இயக்குநர் மகேந்திரன். சென்னை, தரமணியில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுப் பிரிவில் முதலாமாண்டு படித்துகொண்டிருந்த சுஹாசினியை அழைத்துக்கொண்டு, சாலிகிராமத்தில் இருந்த அருணாசலம் ஸ்டுடியோவுக்கு வந்தார் அவருடைய அப்பா சாருஹாசன். அங்கே ‘உதிரிப் பூக்கள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

சாருஹாசனைக் கண்டதும், “அண்ணா வாங்க...” என்று வரவேற்றபடி அருகில் வந்தார் மகேந்திரன். “சுஹாசினி சினிமட்டோகிராபி முதல் வருஷம் கம்ப்ளீட் பண்ணப்போறா... இவளுக்கு நம்ம ஃபீல்டுல பிராக்டிக்கல் ட்ரெய்னிங் வேணும்” என்றார் சாருஹாசன். அவ்வளவுதான்... மகேந்திரன் மறுபேச்சு பேசவில்லை.

“ஹாசினி... இங்க வா…” என்று அழைத்துச் சென்ற மகேந்திரன், அசோக்குமாருக்கு எதிரே சுஹாசினியை நிறுத்தி, “அசோக்... இது சாரு அண்ணாவோட மூணாவது கொழந்த. எங்க ஊருப் பொண்ணு. வீட்ல பயரங்கர செல்லம். சும்மாவே இருக்கமாட்டா. அவ்வளவு துறுதுறு. நீ படிச்ச அதே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல கேமரா படிக்கிறா” என்று சொல்லி முடிக்கும் முன்பே, “தெரியும் மகி... இரு” என்று சொன்ன அசோக்குமார், அந்த சமயத்தில் அங்கே அந்த வீடு செட்டுக்குள் எடுக்கவிருந்த காட்சிக்கு, லைட்டிங் செய்யும்படி சுஹாசினியிடம் சொன்னார்.

சுஹாசினியும் தயங்காமல் துறுதுறுவெனச் செய்து முடிக்க, “அடுத்த படத்துலேர்ந்து ஹாசினி அசோக்குமார்கிட்ட கேமரா அசிஸ்டென்டா வேலை செய்யட்டும். நான் இருந்து பார்த்துக்கிறேன்.. உங்களுக்குக் கவலை வேண்டாம்” என்று மகேந்திரன் சொன்னார். “அப்போ நான் கிளம்புறேன்... இவ உன்னோட ஷூட்டிங்கை இருந்து பார்த்துட்டு வீட்டுக்கு வரட்டும்” என்று கிளம்பிவிட்டார் சாருஹாசன்.

நம் வீட்டுப் பெண்கள் இருக்க...

இதன்பிறகு நடந்தவற்றை சுஹாசினியே சொல்கிறார். “ஜானி படத்தில் துணை ஒளிப்பதிவாளராக வேலை செய்த அனுபவம் போன்று அதன்பின்னர் திரும்பக் கிடைக்கவே இல்லை. இண்டோர்... அவுட்டோர் என படப்பிடிப்பு எங்கேயென்றாலும் ஓடிக்கொண்டேயிருப்பேன். அப்போதுதான் ‘நெஞ்சைத்தைக் கிள்ளாதே’ படத்தில் கதாநாயகியாக உன்னை நடிக்க வைக்கலாம் என்று நானும் அசோக்கும் முடிவு செய்துள்ளோம். அப்பாவிடம் நான் பேசிக்கொள்கிறேன்… நீ உனது சித்தப்பா கமலிடம் அனுமதி பெற்று வா. அது எனக்கு ரொம்ப முக்கியம்’ என்று மகேந்திரன் சார் சொன்னார். எனக்கோ இரட்டை மனது. நடிக்கவும் விருப்பம்... ஒளிப்பதிவாளராக சாதிக்க வேண்டும் என்றும் விருப்பம்.

'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் பத்மினி கோலாபுரிதான் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தார். அவர் இல்லை என்றானதும், ‘நம்ம பக்கத்திலேயே நம்ம வீட்டுப் பெண்கள் இருக்கும்போது.. நாம் வெளியூரில் தேடினால் இப்படித்தான் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டியிருக்கும். நம்ம ஹாசினியையே நடிக்க வைக்கலாம்’ என்று மகேந்திரன் சார், அசோக்குமாரிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதை சித்தப்பா கமலிடம் சொன்னபோது, 'உனக்கு விருப்பம் இருந்தால் நீ நடிக்கலாம்' என்றார் அவர். அதன் பின்னர்தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்கிறார் சுஹாசினி.

பரமக்குடி என்கிற சொந்த ஊர் பந்தம் மட்டுமல்ல, அதையும் தாண்டி ஹாசன் குடும்பத்தையும் மகேந்திரன் குடும்பத்தையும் இணைத்த ஒரு இழை உண்டு. இதை மகேந்திரனே மனம்விட்டுப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“கமல் குடும்பத்துக்கும் என்னுடைய பெற்றோருக்கும் எனக்கும் மிக மிக நெருக்கம். குறைமாதக் குழந்தையாகப் பிறந்த எனக்கு, உயிர்ப்பிச்சை கொடுத்தது என்னுடைய இன்னொரு தாயாக நான் நினைக்கும் டாக்டர் சாரா அம்மையார்தான். அவர்தான் சிறுவனாக இருந்த கமலை ஏவிஎம்முக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, ‘களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடிக்க வைத்தவர். இன்று நாங்கள் இருவரும் திரைத் துறையில் இருப்பதற்கு அந்தத் தாயே காரணம்.

சாருஹாசன் அவர்களைப் பிரசவம் பார்த்தது என்னைப் பெற்ற தாயான மனோன்மணி. அந்த அலைவரிசை மனதை நிறைத்துக் கொண்டிருப்பதால், கமல் குடும்பத்தில் நானும் ஒருவனாக இருக்கிறேன். சாருஹாசன் கமலுக்கு மட்டுமல்ல... எனக்கும் மூத்த அண்ணன்தான். கமல் நடித்து நான் இயக்காவிட்டால் என்ன? சாருஹாசனையும், சுஹாசினியையும் எனது படங்களில் அறிமுகப்படுத்தி இயக்கி வெற்றி பெற்றிருக்கிறேன். அந்த மனநிறைவு போதும். என்னைப் போலவே கமலும் அவர்களைக் குறித்து, அவர்கள் இருவரும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதுகளைப் பெற்றபோது பெருமிதப்பட்டிருக்கிறார். அது எனக்குப் போதும். நான் நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த போதெல்லாம் என் கவலைகளைத் துடைத்தெறிந்தவர் கமல்” என்று மகேந்திரன் கூறியிருக்கிறார்.

கமல் குடும்பத்துக்கும் மகேந்திரன் குடும்பத்துக்குமான இந்த நெருக்கத்தை ரஜினியும் நன்கு அறிந்தேயிருந்தார். மகேந்திரனின் அழைப்பை ஏற்று ஒருமுறை பரமக்குடிக்கு அவருடன் விசிட் அடித்த ரஜினி, மகேந்திரனின் பூர்விக வீட்டை மட்டுமல்ல, கமலும் சாருஹாசனும் சுஹாசினியும் பிறந்து வளர்ந்த பூர்விக வீட்டையும் பார்த்துத் திரும்பினார். அந்த அளவுக்கு தன்னிகரற்ற கலைஞனாக கமலுக்கு தன்னுடையை மனதில் மாற்றுக் குறையாத மதிப்பையும் அன்பையும் அளித்து வருபவர் ரஜினி. இதனால், ரஜினியின் மீதும் ஹாசன் குடும்பத்தினர் காட்டிவரும் மதிப்பு உன்னதமான உறவாகத் தொடர்கிறது. இதை சுஹாசினியின் அனுபவப் பகிர்வு நமக்கு விவரிக்கிறது.

ஆதிக்கம் செலுத்தாத ஆளுமை

“ ‘ஜானி’யில் கேமரா உதவியாளராக இருந்துட்டு 'தாய் வீடு' படத்தில் ரஜினி சாருக்கு தங்கையாக நடித்தேன். பிறகு 'தர்மத்தின் தலைவன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தபோது ஒரு சின்ன தயக்கம் இருந்தது. ஆனால், ‘ஜானி’ படப்பிடிப்பில் எப்படிப் பழகினாரோ அதேபோல் அத்தனை ஆண்டுகள் கழித்தும் மிகவும் சகஜமாகப் பழகினார். சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தாமல் எனக்கும் பிரபுவுக்கும் நடிக்க அதிக வாய்ப்புக் கொடுத்தார். ஷூட்டிங் சமயத்தில் ரஜினி நிறைய இந்திக் கவிதைகளைச் சொல்வார். அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த பேராசிரியர் பாலு மாதிரியே, இந்திக் கவிதைகளை லயித்து வாசித்துப் பிறகு அழகாக விவரிப்பார்.

ரஜினியைப் பார்த்து ‘முத்தமிழ் கவியே வருக’ பாடலை பெங்களூர் கப்பன் பார்க்கில் பாடி ஆடியபோது, நான் ரொம்ப அழகாகவும் எனக்குள் இருக்கும் பெண்மையையும் உணர்ந்தேன். அதேபோல 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் 'வங்காளக் கடலே' பாடல் காட்சியில் என்னுடன் சத்யராஜ், விஜயகாந்த், ரஜினி ஆகிய மூன்று பேரும் ஆடினார்கள். ஆனால், ரஜினியுடன் ஆடும்போது தான் ரொம்பவும் குதூகலமாக ஆடுவேன். அதில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வசந்த், ‘தலைவர் கூட ஆடும் போது ரொம்ப சிரிக்கிறீங்க’ என்று என்னை கிண்டல் செய்தார்.

நான் தாத்தா இல்ல...

பிறகு 'தளபதி' படத்தில் ரஜினி ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து நடித்தார். 'சின்னத் தாயவள்' பாடல் காட்சியில் ஸ்ரீவித்யா தலையில் இருந்து விழும் ஒற்றை மல்லிகைப் பூவை எடுத்து அவர் பார்க்கும் காட்சியில், ரஜினியைத் தவிர வேறொருவர் அப்படியொரு தாய்மையின் ஏக்கத்தை முகத்தில் கொண்டுவந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதேமாதிரி.. ஷோபனா உடன் காதல் முறியும்போது அவர் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன்... சான்ஸே இல்லை!

தளபதி படத்தில்...
தளபதி படத்தில்...

தளபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெய்சங்கர், நாகேஷ் இரண்டு பேரிடமும், அவர்கள் எம்ஜிஆருடன் பழகின அனுபவங்களைக் கேட்டு வியந்து ரசிப்பார் ரஜினி. எதைக்கேட்டாலும் மனசுக்குள்ளே குறிப்பெடுத்துக் கொள்கிற பழக்கம் ரஜினியிடம் உண்டு. மணி சார் காட்சியை விளக்கிச் சொன்னதும் அதை மனதில் வாங்கிகொண்டு அதே காட்சியை ரீஷூட் செய்தால், ‘அப்போ அப்படிச் சொன்னீங்களே..?’ என்று தன்னுடைய சந்தேகத்தை கேட்டுவிடுவார். அதைப் பார்த்து பலமுறை நான் வியந்துபோய் இருக்கிறேன்.

சித்தப்பா கமலைப் போல் ரஜினியும் எங்கள் குடும்பத்தில் ஒருவர். என் வீட்டில் நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரஜினி வருவார். அவர் வீட்டில் நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் போய் வருவோம். என் மகன் சின்னப் பையனாக இருக்கும் போது, ரஜினியைக் காட்டி ‘கமல் தாத்தா மாதிரி, இவரும் உனக்குத் தாத்தா’ என்று அறிமுகப்படுத்தினேன். அதற்கு ரஜினி என் மகனிடம் ‘கமல் தாத்தா... நான் தாத்தா இல்ல. என்னை அங்கிள்ன்னு கூப்பிடு’ என்று அவனுடைய கன்னத்தைப் பிடித்துச் செல்லமாகக் கொஞ்சினார். என்ன மயாமோ... அடுத்த நொடி அவன் ‘ஓகே அங்கிள்’ என்றான். அந்த வசீகரம்தான் ரஜினி! அதை மறக்கமுடியாது.

ரஜினியைப் பொறுத்தவரை வயது என்பது நம்பர் மட்டுமே. அவருடைய மனசுக்கு இன்றைக்கும் வயதாகவில்லை” என்கிறார் சுஹாசினி. உண்மைதான்... சூப்பர் ஸ்டாராக ரஜினி உயர்ந்து நின்ற நேரத்தில், அவரை வயதான அப்பா வேடத்தில் நடிக்க வைக்க கேபி விரும்பினார். கதையைக் கேட்க வரும்படி ரஜினியை அழைத்தபோது ரஜினி சொன்னார், “நீங்க சொன்னா 100 வயது கிழவனாகவும் நான் நடிப்பேன்” அந்தப் படம் ‘நெற்றிக் கண்’.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in