ரஜினி சொன்ன ‘பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே... என்னை மன்னித்துவிடு!’

- 45-ம் ஆண்டில் ‘சங்கர் சலீம் சைமன்!’
சங்கர் சலீம் சைமன்
சங்கர் சலீம் சைமன்

மூன்று நான்கு நண்பர்களை நாயகர்களாக வைத்துக் கொண்டு படமெடுக்கிற கான்செப்ட், ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பிறகு அதிகரித்தது. அதற்கு முன்னதாக ‘புது வசந்தம்’ படத்துக்குப் பிறகு அதிகமானது. அதற்கும் முன்னதாக, ‘இன்று போய் நாளை வா’ படத்தின் தாக்கம் தமிழ் சினிமாவை வெகுவாக பாதித்தது. இப்படியான பல படங்கள் வந்துகொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் வந்தவர்கள்தான் ‘சங்கர் சலீம் சைமன்’.

பணக்கார சதாசிவத்தின் மகன் சங்கர். அவனுடைய தங்கை வசந்தி. கடற்கரையையொட்டி இருக்கிற அயோத்தியா குப்பத்தில் வாழ்கிறார்கள் சைமனும் சலீமும். சலீம் நல்ல வேலைக்காகக் காத்திருக்கிறான். அதே ஏரியாவில் டீக்கடை நடத்துகிற இஸ்லாமியப் பெரியவரின் மகள் மும்தாஜைக் காதலிக்கிறான். அவளும் விரும்புகிறாள்.

கார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கிறான் சைமன். இந்த சைமனுக்கு பணக்கார சதாசிவத்துக்கும் ஏற்கெனவே சிறுவயதில் இருந்தே ஒரு பகை உண்டு. அதனால் சதாசிவத்தையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பணக்காரர்கள் மீதும் வெறுப்பாக இருக்கிறான்.

அந்தக் குப்பத்தில், மீன் வியாபாரம் செய்து வருகிறாள் மாரியம்மா. இவளின் தங்கை அலமேலு. பேருந்து நிறுத்தத்தில் அலமேலுவின் அழகைக் கண்டு, ஆசைப்படுகிறான் சங்கர். அவள் ஸ்டைலாக இருப்பதைப் பார்த்து, அருகில் வந்து பேச்சுக் கொடுக்க, அவள் மெட்ராஸ் பாஷையில் பொளந்து கட்டி துரத்துகிறாள். அப்போது சைமன் வந்து, சங்கரைக் கண்டிக்கிறான்.

பிறகு, சங்கருக்கும் அலமேலுவுக்கும் மலருகிறது காதல். இருவரும் பைக்கில் சுற்றுகிறார்கள். சைமன் வேலை செய்கிற மெக்கானிக் ஷாப் பக்கம் வேண்டுமென்றே ஜோடியாக வந்து, சைமனை வெறுப்பேற்றுகிறான் சங்கர். இதில் ஆத்திரமாகிறான் சைமன். சதாசிவம் வீட்டில் கார் டிரைவராக வேலை செய்யும் கபாலியின் மூலமாக சைமன், ஒரு திட்டம் போடுகிறான். அதன்படி சங்கரின் தங்கை காரில் வரும் போது ‘ரிப்பேர்’ என வழியில் நிறுத்துகிறான் கபாலி. அந்த சமயத்தில், அலமேலுவை பைக்கில் சைமன் அழைத்துச் சென்று வீட்டில் விடுகிறான்.

இதைப் பார்க்கிற சங்கர், சைமன் மீது கோபப்படுகிறான். இருவருக்கும் கைகலப்பு. அலமேலு, தன் காதல் விஷயத்தைச் சொல்கிறாள். பிறகு வசந்தியும் தன் காதலை சைமனிடம் தெரிவிக்கிறாள். பிறகு சங்கரும் சைமனும் நண்பராகிறார்கள். இந்த நிலையில், சலீமும் மும்தாஜும் காதலிக்க, அந்த ஜோடியும் இவர்களுடன் ஸ்நேகமாகிறது.

அந்த ஊரில் வட்டித் தொழில் செய்யும் பணக்காரரான ரசாக் பாய், மும்தாஜைப் பார்க்கிறார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்ந அவர், மும்தாஜைத் திருமணம் செய்துகொள்ளக் கேட்கிறார். முடியாது என மறுத்துவிடுகிறார். சதாசிவத்திடம் வேலை செய்யும் ஜெயபால் மூலமாக, ரசாக் பாய், மும்தாஜின் அப்பாவுக்கு கொடுத்த பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்து வீட்டை ஜப்தி செய்கிறார். அப்போது யதார்த்தமாக வருவது போல் வந்து, ரசாக் பாய் பணத்தைக் கொடுத்து வீட்டுப் பத்திரத்தை மீட்டுக் கொடுக்கிறார். அதன் பிறகு பெண் கேட்க, மும்தாஜின் அப்பாவும் சம்மதிக்கிறார்.

இதேநிலையில், குப்பத்தில் உள்ள அலமேலுவை தன் மகன் சங்கர் காதலிப்பது தெரிந்து கண்டிக்கிறார் சதாசிவம். அந்த சமயம் பார்த்து, கோவையில் போலீஸ் வேலை கிடைக்க உடனடியாக அங்கு செல்லவேண்டிய நிலை சங்கருக்கு. ‘’உனக்கும் அலமேலுவுக்கும் திருமணம் நடத்திவைக்கிறேன். முதலில் வேலையில் சேரு’’ என்று பொய்யான வாக்குறுதி கொடுக்கிறார் சதாசிவம்.

ரசாக் பாய்க்கும், மும்தாஜுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. சலீம்தான் ஷெனாய் வாசிக்கிறான். ஆத்திரமாகும் சைமனும் அலமேலுவும் விவாதிக்க, ஒருவழியாக மும்தாஜ் , “எனக்கு திருமணத்தில் சம்மதமில்லை” எனத் தெரிவிக்கிறார். பிறகு மும்தாஜுக்கும் சலீமிற்கும் திருமணம் நடக்கிறது. இதனால் சைமன் மீது ஆத்திரமாகிற ரசாக் பாய், சைமனும் வசந்தியும் காதலிப்பதை, சதாசிவத்திடம் சொல்கிறார்.

இந்தசமயத்தில் அலமேலு கர்ப்பமாக இருக்கிறாள். இதற்கு நியாயம் கேட்டு குப்பத்து ஜனங்களுடன் சைமன் சதாசிவம் வீட்டுக்குச் செல்கிறான். ‘’என் மகளை மறப்பதாக இருந்தால், அலமேலுவை என் மருமகளாக ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று இப்போதும் பொய் வாக்குறுதி கொடுக்கிறார் சதாசிவம். அலமேலுவின் திருமணத்துக்காக, தன் காதலைத் தூக்கியெறிகிறார் சைமன்.

ஆனால், தன் நண்பர் வருடாவருடம் நூறு பேருக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறார். அவரிடமே ‘’என் மகளுக்கு ஒரு திருமணம் செய்து வையுங்கள்’’ என்று கேட்கிறார். அந்த நண்பரும், தன்னிடம் வேலை பார்க்கும் பையனிடம் சொல்ல, திருமணமும் நடக்கிறது. ஆனால், பேருக்கு அவன் திருமணம் செய்துகொள்வதும் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக அந்த பணக்காரக் கிழவர் இருப்பதும் வசந்திக்குத் தெரியவருகிறது. அவளை சைமன் காப்பாற்றி, தன் குப்பத்துக்கு அழைத்து வருகிறான்.

குப்பத்தில் பஞ்சாயத்து. ‘இன்னொருத்தன் மனைவியை எப்படி இப்படி அழைத்து வரலாம்’ என்று! ‘’நீ அவளை அனுப்பிவிட்டு இருப்பதாக இருந்தால் இங்கே இரு. அவளும் இங்கு இருப்பதாக இருந்தால், உனக்கும் குப்பத்தில் இடமில்லை’’ என்று பஞ்சாயத்து தீர்ப்பு சொல்கிறது. ஊரிலிருந்து திரும்பி வந்த சங்கர், அலமேலுவைக் கல்யாணம் செய்துகொண்ட நிலையில், அவனும் சைமனை எதிர்க்கிறான். சலீமும் எதிர்க்கிறான்.

வசந்தியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் செல்லும்போது, சதாசிவம், பணக்காரக் கிழவர், மாப்பிள்ளைப் பையன் மூவரும் வந்து மடக்குகிறார்கள். அப்போது, நடந்த உண்மைகளையெல்லாம் எல்லோரிடமும் சொல்லி அழுகிறாள் வசந்தி. போலீஸான சங்கர், மோசடிகள் செய்து பல பெண்களை திருமணம் செய்த மாப்பிள்ளைப் பையனையும் பணக்காரக் கிழவரையும் கைது செய்ய, சைமனும் வசந்தியும் சேருகிறார்கள்.

சங்கர் - அலமேலுவாக விஜயகுமார், மஞ்சுளா. சலீம் - மும்தாஜாக ஜெய்கணேஷ், எம்.எஸ்.வசந்தி (இதில்தான் இவர் அறிமுகம்). சைமன் - வசந்தியாக ரஜினி, லதா. சங்கர் - வசந்தியின் அப்பாவாக வி.எஸ்.ராகவன். அவரின் கார் டிரைவர் கபாலியாக சுருளிராஜன். மீன் விற்கும் மாரியம்மாவாகவும் அலமேலுவின் அக்காவாகவும் மனோரமா. வி.எஸ்.ராகவனிடம் வேலை பார்ப்பவராக எஸ்.வி.ராமதாஸ். பணக்காரக் கிழவராக ஒய்.ஜி.பார்த்தசாரதி. விஜயகுமாரின் நண்பராக ஒய்.ஜி.மகேந்திரன். ரசாக் பாயாக பீலிசிவம். மும்தாஜின் அப்பாவாக கோகுல்நாத் நடித்திருந்தார்கள்.

டைட்டிலில் விஜயகுமார் - மஞ்சுளா, அடுத்து ரஜினிகாந்த் - லதா, அதையடுத்து ஜெய்கணேஷ்ஜ் - எம்.எஸ்.வசந்தி என்று அடுத்தடுத்து டைட்டில்கள் வருகின்றன. விஜயகுமார், அந்தத் தேதிக்கு பெரிய ஹீரோ. இந்தப் படத்தில் ரஜினி செகண்ட் ஹீரோதான் என்றாலும் தன் ஸ்டைலாலும் தன் கேரக்டராலும் அசத்தியிருப்பார். மஞ்சுளா, லதா, மனோரமா என அனைவருமே சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பார்கள். சுருளிராஜன், மனோரமா காமெடியும் உண்டு. பீலிசிவத்துக்கு வில்லத்தனமான கேரக்டர் என்றாலும் மனதில் பதியும்படி நடித்திருந்தார். ஒய்.ஜி.பார்த்தசாரதியும் ஒய்.ஜி.மகேந்திரனும் வி.எஸ்.ராகவனும் தங்களின் சிறந்த நடிப்பை வழங்கினார்கள். ஆனால் படம் மொத்தத்தையும் கணக்கிட்டால், காட்சிக்குக் காட்சி சிக்ஸர் அடித்து தூள் கிளப்பியிருப்பார் ரஜினி.

வேகமாக நடப்பது, தைமுடியை தலை உதறி சிலுப்பிக் கொள்வது, தன் இரண்டு விரல்கள் மூலம் மீசையின் இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் மேலிருந்து கீழாக வருடிவிடுவது என அதகளம் பண்ணியிருப்பார். முக்கியமாக, ரஜினி படம் முழுக்க அணிந்து வருகிற ஒவ்வொரு டிஷர்ட்டுகளும் கலக்கலாக இருக்கும்.

குறிப்பாக, சண்டைக்காட்சியில் ரஜினி பேசுகிற வசனம் க்ளாப்ஸ் அள்ளியது. சண்டை தொடங்கும்போது, ‘பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே என்னை மன்னித்துவிடு’ என்று சொல்லிவிட்டுத்தான் ஒவ்வொருவரையும் வெளுத்தெடுப்பார் ரஜினி. கழுத்திலிருக்கும் சிலுவையை ஒருகையில் பிடித்துக்கொண்டு, வாய்க்கு அருகில் முத்தமிட்டபடி, இன்னொரு கையை வானத்தை நோக்கித் தூக்கியபடி, அவர் பேசுகிற இந்த வசனத்தை அப்போது சொல்லாதவர்களே இல்லை.

’அமர் அக்பர் அந்தோணி’ என்றொரு படம் இந்தியில் வெளியாகி ஹிட்டாகியிருந்தது. அமிதாப் நடித்திருந்தார். அப்போது இந்திப் படம் குறித்து ஏகத்துக்கும் இங்கே சிலாகித்துப் பேசுவார்கள். அந்தப் படத்தின் ரீமேக் இது என்று பேசிக்கொண்டார்கள். ஆனால், அந்தப் படம் வேறுமாதிரியாகத்தான் இருந்தது. ‘சங்கர் சலீம் சைமன்’ படம் வேறொரு மாதிரிதான் இருந்தது. படத்தின் ஒற்றுமையாகப் பார்த்தால், ‘இந்து முஸ்லிம் கிறிஸ்தவ’ பெயர்கள் டைட்டிலில் உள்ளது என்பதுதான்! இதன் பிறகு கூட ‘ராம் ராபர்ட் ரஹீம்’ என்றொரு படம் வந்தது. இதிலும் ரஜினி நடித்திருந்தார்.

‘சங்கர் சலீம் சைமன்’ படத்தின் கதை வசனம் பாலமுருகன். சிவாஜியின் எண்ணற்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதி மிகப்பெரிய பேரும்புகழும் பெற்ற அதே பாலமுருகன் தான் இந்தப் படத்தின் எழுத்தாளர். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இயக்குநர் பி.மாதவன் படத்தை இயக்கினார்.

1978-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி கறுப்புவெள்ளைப் படமாக வந்த ‘சங்கர் சலீம் சைமன்’, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிக்கொடி நாட்டாதது வருத்தம்தான். 45 வருடங்களாகிவிட்டன. பி அண்ட் சி சென்டர் என்பதெல்லாம் இப்போது இல்லை. ஆனால், அப்போது அந்த ஏரியாக்களில், படம் குறித்த பேச்சு நிறையவே இருந்தது. பாடல்களை எல்லா ஏரியாக்காரர்களும் முணுமுணுத்தார்கள்.

அப்போது கில்லி விளையாடும்போதே, கபடி விளையாடும்போதோ, பம்பரம் விளையாடும்போதோ சண்டை வந்துவிட்டால், கழுத்தில் இல்லாத சிலுவையை வாய்க்குக் கொண்டு வந்து, வானம் பார்த்து கைநீட்டி, ‘பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே... என்னை மன்னித்துவிடு!’ என்று சொல்லிவிட்டு, ரஜினி ஸ்டைலில் முடியை சிலுப்பிக் கொண்டு சண்டைக்குத் தயாராவார்கள். அதுவும் தான் இன்றைய ரஜினி சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in