’ஜெயிலர்’ ரஜினிகாந்த்: ‘குடிப்பழக்கத்தால் என் வாழ்க்கை சூன்யமானது!’
’ஜெயிலர்’ ரஜினிகாந்த்: ‘குடிப்பழக்கத்தால் என் வாழ்க்கை சூன்யமானது!’

‘குடிப்பழக்கத்தால் வாழ்க்கை சூன்யமானது... இல்லைன்னா இன்னும் பெரிய இடத்துல இருந்திருப்பேன்’ ரஜினிகாந்த் பேச்சு!

குடிப்பழக்கத்தால் தன் வாழ்க்கையே சூன்யமானது என நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, “என் சினிமா பயணத்தில் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், மகேந்திரன், ராஜசேகரன், கே.எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குநர்களால்தான் நான் வளர்ந்தேன். 1977வது ஆண்டு தயாரிப்பாளர் தாணு எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தபோது வேண்டாம் என்று மறுத்தேன். அப்போது நான் பயப்படுவதாக நிறைய பேர் சொன்னார்கள். என் சினிமா பயணத்தில் நிறைய வெறுப்பு, எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளேன். அது இன்றைய தலைமுறைக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பெங்களூருவில் நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அதிக குடிப்பழக்கம் இருந்தது. இது வேண்டாம் என்று அண்ணன் சொன்னார். இந்தப் பழக்கத்தால் நான் இழந்தது நிறைய. என் வாழ்க்கையே ஒரு கட்டத்தில் சூன்யமானது. ஒருவேளை, இந்தப் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இதை விட பெரிய இடத்தில் இருந்திருப்பேன். இந்தப் பழக்கத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை. அதனால், யாரும் தயவு செய்து குடிக்காதீர்கள்’ என தான் அரசியலுக்கு வராமல் போனது குறித்து மறைமுகமாக பேசினார் ரஜினி.

அவர் மேலும் பேசுகையில், ‘குடிப்பதினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு குடும்பமும் வீணாகும். குடிப்பவர்களுடன் சேராதீர்கள். அதையும் மீறி குடிக்கத் தோன்றும் நேரத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தூங்கி விடுங்கள். நிச்சயம் 10 நாட்களில் மாற்றம் வரும்’ என ரசிகர்களுக்கு ரஜினி விடுத்த வேண்டுகோள் இப்போது கவனம் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in