ரஜினி சரிதம் 01: ஆறிலிருந்து எழுபது வரை: ஆச்சரியமூட்டிய ஆட்டோ கபாலி

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்

அளவான சொற்களில், ஆழமான அர்த்தங்களைப் பொதிந்து வைத்து, பழமொழியாகவும் சொலவடைகளாகவும் தந்தவர்கள் நம் முன்னோர்கள். இன்றைக்குக் கணினியிலும் கையடக்க ஸ்மார்ட்போனிலும் நம் விரல்கள் படர்ந்தாலும், அனுபவங்களின் நல்விளைச்சலாக முன்னோர் நமக்குக் கொடுத்த பழமொழிகளை இன்றும் எடுத்தாள்கிறோம். பழமொழிகள், சொலவடைகளுக்கு இணையாக, நமக்குப் பிடித்த நடிகர்கள் ‘பன்ச்’ வசனம் பேசும்போது நமக்கு இன்னும் பிடித்துப்போகிறது.

இன்றைய மாஸ் ஹீரோக்களில் கிட்டத்தட்ட எல்லோருமே ‘பன்ச்’ அடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், ரஜினி ‘பன்ச்’களை பேசும்போதுதான் நமக்குள் மின்சாரம் பாய்கிறது! ஏனென்றால் ரஜினியின் ஆளுமை என்பது ‘ஆரா’ சக்தியைப்போல அவரைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அனைவரையும் ஊடுருவித் தாக்குகிறது. இப்படிச் சொல்வதை சிலர் மிகை என்றுகூட நினைக்கக் கூடும். ஆனால், அது நிஜம்தான் என்பதை அறிந்துகொள்ள, 60 வயது ரசிகர் ஒருவரையும் 6 வயது ரசிகர் ஒருவரையும் முதலில் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அப்போது ரஜினிகாந்த் எனும் காந்தத்தின் ஈர்ப்பு விசை உங்களுக்கு ஓரளவு புலப்படக் கூடும். அதன் பின்னர், ஒரு சாமானியன் சரித்திரன் ஆன அவரது விறுவிறுப்பான வாழ்க்கை வரலாற்றுக்குள் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வாருங்கள் முதலில் கபாலியைச் சந்திப்போம்.

போதுமென்ற மனம்

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. அலுவலகத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். நடுவழியில் வண்டி பங்சர் ஆகிவிட்டது. அருகிலிருந்த பங்சர் கடையில் வண்டியை விட்டுவிட்டு சாலையில் வந்த ஆட்டோவை நிறுத்தினேன். “வாலாஜா சாலை போகணும்... எவ்வளவு?” என்றேன். “70 ரூபா போதும் சார்” என்றார் ஓட்டுநர். டக்கென்று ஏறி அமர்ந்தேன். என் சிந்தனை ஓடியது... பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் ‘இவ்வளவு கொடுங்க’ என்று கேட்டுப் பார்த்திருக்கிறேன். இவர், கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையிலிருந்து வாலாஜா சாலைக்கு 70 ரூபாய் கேட்கிறார்! உண்மையில் 120 ரூபாய்க்குக் குறைந்து யாரும் வர மாட்டார்கள். அதைவிட ஆச்சரியமாக... ‘போதும்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவரது முகத்தை சைட் மிரரில் பார்த்தேன். தாடிக்குள் புதைந்திருந்தது. ஆனால் அழகாக இருந்தது. அதற்குக் காரணம் நெற்றியில் அவர் வைத்திருந்த குங்குமத் திலகமாகக்கூட இருக்கலாம். வயது அறுபதைக் கடந்திருக்கலாம்.

அப்போதுதான் ஆட்டோவின் டேஷ் போர்டைக் கவனித்தேன். 80-களின்

ரஜினி முகம் வரையப்பட்டிருந்தது. கூடவே, ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது’ என்ற ‘படையப்பா’ படத்தின் பன்ச் டயலாக் எழுதப்பட்டிருந்தது. அவர் மீட்டர் கட்டணம் மட்டும் கேட்டதற்கான பொருள் எனக்குப் புரிந்துவிட்டது. ரஜினியின் ‘பன்ச்’ வசனங்களை வேதவாக்காகக் கடைப்பிடிக்கும் தீவிர ரசிகர் என்பதை அனுமானித்துக்கொண்டேன். என்றாலும் 1999-ல் வந்த ‘படையப்பா’ படத்தின் பன்ச் வசனத்துக்கு, 80-களின் தோற்றம் கொண்ட ரஜினியை ஏன் வரைந்து வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது.

சாந்தம் தந்த முகம்

ஆவல் எழ இன்னொரு காரணமும் இருந்தது. அந்த ரஜினி ஓவியத்தின் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருப்பதுபோல வரையப்பட்டிருந்தது. ‘ரஜினி குங்குமப் பொட்டுடன் எந்தப் படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லையே... ஒருகால் இதை வரைந்த ஓவியரின் தூரிகை உபரியோ?’ என எண்ணிக்கொண்டே... “ரஜினியோட இந்த கெட் - அப் எந்தப் படத்தில..?” என்றேன். “உங்கள மாதிரி நிறைய பேர் கேட்டிருக்காங்க சார்! ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில தலைவர் கெட்-அப் இது” என்றார். “நெற்றியில் குங்குமம் வைத்திருப்பாரா?” என்றேன். ‘என்ன சார்... குங்குமமும் திருநீறும் வெச்சா.. முகத்துல தெய்வ கடாட்சம் வழியிற முகம் சார் தலைவருக்கு. நீங்க மொதல்ல ‘எங்கேயே கேட்ட குரல்’ பாருங்க சார்... என்னைச் செருப்பால அடிச்ச படம் சார் அது” என்று கூறிவிட்டு நான் கேட்காமலேயே தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

“பெத்த தாய் தகப்பனையே விரோதின்னு நினைச்சுக்கிட்டு திரிஞ்சேன்… எல்லார்கூடயும் சண்டை... சச்சரவு. அப்போதான் இந்தப் படம் வந்தது. தலைவரோட எல்லாப் படத்துக்கும் போற மாதிரிதான் பட்டறை வேலைக்கு லீவு போட்டுட்டு தோஸ்துகளோட முருகன் டாக்கீஸ்ல படம் பார்த்தேன். என்னோட ஆணவத்தை நொறுக்கிப் போட்டுருச்சு சார் அந்தப் படம். அதுக்கப்புறம் நாய் மாதிரி வள்...வள்னு விழுதுறதை விட்டுட்டேன். எல்லா மனுசங்களுக்கும் எக்கச்சக்கப் பிரச்சினை இருக்கும்கிறதே அப்பறம்தான் உறைச்சுது. அடுத்த முறை என் ஆட்டோல நீங்க ஏறும்போது ‘எங்கேயோ கேட்ட குரல்’ பார்த்திருந்தாதான் ஏத்துவேன். யூடியூப்ல இருக்கு சார்... பாருங்க” என்றார்.

அடுத்த பத்து வினாடி மவுனமாகிவிட்டேன். தனது முன்கோபத்தை, முரட்டுத்தனத்தை ஒரு திரைப்படம் துடைத்துப் போட்டுவிட்டதாகக் கண் முன்னால் ரத்தமும் சதையுமான ஒரு மனிதர் சொல்லும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. ‘‘என்ன சார் அமைதியாகிட்டீங்க?” என்று என் மவுனத்தைக் கலைத்தார். உரையாடலை சகஜமாகத் தொடர, “உங்க பேர் என்ன அண்ணே?” என்றேன். “என் பேரு கபாலி. பட்டினப்பாக்கம் பஸ் டெப்போ ஸ்டாண்டுல வந்து கேட்டா... உன்னைய வூட்டாண்டையே கூடியாந்துருவாங்க” என்றார்.

அவரது தாடியைப் பற்றியும் கேட்கத் தோன்றவே, “தாடியை மெயின்டெயின் பண்றது சிரமமா இல்லியா?” என்றேன். “மொதலாளிங்க தாடி வெச்சா பிஸின்னு அர்த்தம். தொழிலாளிங்க தாடி வெச்சா... பசின்னு அர்த்தம்! ‘படிக்காதவன்’ படத்துல தலைவரோட பன்ச் இது. நீ என்ன கேள்வி கேட்டாலும் தலைவர் பன்ச் வழியாவே பதில் சொல்லுவேன் சார்… கேட்கிறீங்களா?” என்றார்.

நான் அசந்துபோய் அவரது முகத்தை சைட் மிரரரில் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.

“வெள்ளிக்கிழமையானா கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்துக்கு முன்னாடி வந்து வண்டியைப் போட்டுருவேன் சார்... தலைவர் இங்கே வரும்போது பல முறை அவரைப் பாத்துருக்கேன். அப்போவெல்லாம் ‘தலைவா... ஒரு தபாவாச்சும் நீ என்னோட வண்டியில ஏறி சவாரி வரணும்’னு சொல்லியிருக்கேன். திங்கக் கிழமையானா போயஸ் கார்டன்ல தலைவர் வீட்டாண்ட வண்டியைப் போடுவேன். பல தபா தலைவர் தன்னோட பேரனைக் கூட்டிகிட்டு ரோட்டுக்கு வந்து கிடைக்கிற ஆட்டோல ஏறி ஸ்கூல்லபோய் விட்டுட்டு வந்திருக்கார். நம்ம வண்டியிலயும் ஒருநாள் ஏறுவாருன்னு நம்பிக்கை இருக்கு சார்” என்றார். ‘இது என்ன வகையான வேண்டுதல்’ என்று நினைத்துகொண்டிருக்கும்போதே எனக்கு அலுவலகம் வந்துவிட்டது.

பாலகுமாரன் பார்த்த ‘குமரன்’

60 வயது ரசிகனைப் பார்த்துவிட்டீர்கள். 6 வயதே ஆன ரசிகனைச் சந்திக்க வேண்டாமா? அவனை நேருக்கு நேராக ரஜினியுடன் சந்தித்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். ரஜினியின் நெருங்கிய எழுத்தாள நண்பர்களில் ஒருவர், ரஜினியின் சில படங்களுக்கான திரைக்கதைச் சீரமைப்பு, வசனகர்த்தாவாகப் பணியாற்றிய பாலகுமாரன், சினிமா எனும் தொடர்பைத் தாண்டி திருவண்ணாமலையின் ஆன்மிக வாசலை ரஜினிக்கு அறிமுகப்படுத்திய இருவரில் ஒருவர். ரஜினியின் வீட்டுக்கு ஆன்மிகத் துறவிகள் விஜயம் செய்யும்போதெல்லாம் பாலகுமாரனுக்கும் தகவல் பறக்கும். அப்போது மட்டுமல்ல, ரஜினிக்கே தகவல் கொடுக்காமல் போயஸ் தோட்டத்துக்குள் வருகிற உரிமையையும் பாலகுமாரனுக்குக் கொடுத்திருந்தார் ரஜினி.

அது ‘எந்திரன்’ வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நேரம். ரஜினியின் அழைப்பில் அவரைச் சந்தித்துவர போயஸ் கார்டன் வீட்டுக்கு ஒரு பொன்மாலைப் பொழுதில் சென்றிருந்தார் பாலகுமாரன். படப்பிடிப்பு இல்லாவிட்டால், எப்போதும் நரைத்த தாடியுடன் வீட்டில் இருக்கும் ரஜினி, அன்றைக்கு தலைக்கு டை அடித்துக்கொண்டு, க்ளீன் ஷேவ் செய்து இளமைத் தோற்றத்தில் இருந்தார். அதைப் பார்த்த பாலகுமாரனுக்கு ஆச்சரியமும் கேள்வியும் மனசுக்குள் அலையடித்தன. வீட்டில் இருக்கும் ரஜினியை அவர் இப்படிப் பார்த்ததே கிடையாது.

வியப்பு விலகாமல் ரஜினியைப் பார்த்த பாலகுமாரனுக்கு சில நிமிடங்களில் அங்கே நடந்த சம்பவமே பதிலாக அமைந்துவிட்டது. அப்படி என்னதான் நடந்தது?

படங்கள் உதவி: ஞானம்

(சரிதம் தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in