ராஜமெளலியின் சிஷ்யர் அஸ்வின் இயக்கும் '1770’

பிரம்மாண்டமாக உருவாகும் சுதந்திரப் போராட்டக் கதை
ராஜமெளலியின் சிஷ்யர் அஸ்வின் இயக்கும் '1770’

‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ என பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படங்களைத் தந்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் பட்டறையிலிருந்து உருவான இயக்குநர் அஸ்வின் கங்கராஜு, ‘1770’ எனும் புதிய படத்தை இயக்குகிறார். பக்கிம் சந்திர சாட்டர்ஜி வங்காள மொழியில் எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தை, சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி.கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்வதேசப் புகழ்பெற்ற திரைக்கலைஞரும் எழுத்தாளருமான ராம் கமல் முகர்ஜியின் படைப்பாக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு ராஜமௌலியின் தந்தையும் திரைக்கதையாசிரியருமான வி.விஜயேந்திர பிரசாத், திரைக்கதை எழுதுகிறார்.

‘1770’ எனும் தலைப்பு, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தப் பாடல், பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் முதன்முதலாக இடம் பெற்றது. வீரியமிக்க தேச உணர்வைத்தூண்டும் இந்தப் பாடல் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது. இந்நிலையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே ‘ஆகாஷ்வாணி’ எனும் படத்தை இயக்கிய அஸ்வின் கங்கராஜு, இந்தப் படத்தின் மூலம் தனது குருநாதரின் பெயரை அழுத்தமாகப் பதிப்பார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசுகையில், “இந்தத் தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன். தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியைச் சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது” என்றார்.

அஸ்வின் கங்கராஜு
அஸ்வின் கங்கராஜு

கதாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் பேசுகையில், “வந்தே மாதரம் என்பது மந்திர வார்த்தை என உணர்கிறேன். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக தேசம் ஒன்றுபட மகரிஷி பக்கிம் சந்திர சட்டர்ஜி வழங்கிய மந்திரச் சொல் அது. அதனை நாங்கள் ‘1770’ படைப்பில் கையாண்டிருக்கிறோம். அத்துடன் சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட முகம் அறியாத வீரர்களின் கதையுடன் இதனை இணைந்திருக்கிறோம்” என்றார்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகவிருக்கிறது. நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. தீபாவளி பண்டிகையின்போது, படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளைப் பற்றிய விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in