
சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இவரது வீட்டில் நேற்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தாணுவின் வீட்டில் 2-வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.
இதேபோல், தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது, திரையரங்கம், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார் அன்புச்செல்வம். இவர் `கோபுரம் பிலிம்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமம். வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அவரது வீடு, தியாகராய நகர் ராகவய்யா தெருவில் உள்ள அவரது அலுவலகம், மதுரை காமராஜர்புரத்தில் உள்ள வீடு, மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ‘கோபுரம்’ ஓட்டல், செல்லூர் பகுதியில் உள்ள ‘கோபுரம்’ திரையரங்கிலும் சோதனை நடந்து வருகிறது.
இதேபோல, தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அழகர்சாமி வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் வீடு மற்றும் தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ அலுவலகம், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்ய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜனின் அலுவலகத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் முடிவடைந்த நிலையில், வரி கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறது வருமான வரித்துறை.