'பசியின் முக்கியத்துவம் அறிந்ததால் இதைச் செய்கிறேன்': பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

'பசியின் முக்கியத்துவம் அறிந்ததால் இதைச் செய்கிறேன்': பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

46-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

கடந்த 2005-ல் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’. படம் வெளியாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் வடிவேலுவும் நடிக்கிறார். ‘லாரன்ஸ் டிரஸ்ட்’ மூலம் நலிந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார் ராகவா லாரன்ஸ்.

சமீபத்தில்" சொந்த செலவிலேயே நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளேன். இனி யாரும் தன்னுடைய டிரஸ்டிற்கு பணம் அனுப்ப வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தனது 46-வது பிறந்தநாளான இன்று நடிகர் ரஜினியைச் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து பெற்றார். அத்துடன் ரஜினியோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில், “என்னுடைய பிறந்த நாளில், எனது குருவான ரஜினியிடம் வாழ்த்துப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு சேவையைச் செய்வதை என்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு அன்னதானம் செய்ய முடிவு செய்துள்ளேன். பசியின் முக்கியத்துவம் அறிந்ததால் இதைச் செய்கிறேன். நானே நேரடியாகச் சென்று இதைச் செய்ய உள்ளேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in