
யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ (கர்ட்டைன் ரைஸர்) வெளியாகியிருக்கிறது.
மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில், பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். சூத்திரதாரியாக அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள் என ஏராளமான விஷயங்கள் ரசிகர்களை ஈர்க்கும் என படக்குழு பெருமிதத்துடன் கூறியிருக்கிறது.
பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘ராதே ஷ்யாம்’, 1970-களில் ஐரோப்பாவின் பின்னணியில் அமைந்துள்ளது. படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
விதிக்கும் காதலுக்கும் இடையே நடக்கும் மர்மப் போராட்டத்தை டீஸர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோவும் முத்திரை பதித்திருக்கிறது.
மார்ச் 11-ல் இப்படம் திரைக்கு வரவுள்ளது.