‘கண்டேன் குருநாதரை!’ - பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த ராதிகா

பாரதிராஜாவுடன் ராதிகா
பாரதிராஜாவுடன் ராதிகாகோப்புப் படம்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குநர் பாரதிராஜாவை, நடிகை ராதிகா சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான பாரதிராஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா நலமுடன் இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவை நடிகை ராதிகா சரத்குமார் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘பிரார்த்தனைக்கு சக்தி உண்டு, வைப்ரேஷங்களும் உள்ளன. இன்று எனது இயக்குநரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார். எப்போதும் நான் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி’ என உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

பாரதிராஜா தனது இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ (1978) படத்தில் ராதிகாவை நாயகியாக அறிமுகப்படுத்தினார். பின்னாட்களில் அவர் இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படமும் ராதிகாவின் திரைவாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது. தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிவைத்த குருநாதர் பாரதிராஜா மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் ராதிகா. தன் திரைப்பயணத்தின் 42-வது ஆண்டில், ‘நான் நானாக இருப்பதற்குக் காரணம் நீங்கள் மட்டுமே. உங்களுடைய ஆசிகள்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது’ என பாரதிராஜாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in