’பழைய பஞ்சாங்கம் என்று கிண்டல் செய்ய தகுதியானவன் நான்’: நடிகர் மாதவன் ஆதங்கம்

’பழைய பஞ்சாங்கம் என்று கிண்டல் செய்ய தகுதியானவன் நான்’: நடிகர் மாதவன் ஆதங்கம்

பழைய பஞ்சாங்கம் என்று கிண்டல் செய்ய நான் தகுதியானவன் தான் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள படம், ’ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இந்தியாவின் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாகக் கூறி கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன், பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையானார். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள படம் இது.

இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி களில் ஜூலை 1ம் தேதி வெளியாகிறது. இதில், ஷாருக்கான், சூர்யா ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மாதவனிடம், ராக்கெட் விஞ்ஞானத்துக்கும் நமது வானியல் சாஸ்திரம், பஞ்சாங்கம் போன்றவற்றுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ’’கண்டிப்பாகத் தொடர்பு இருக்கிறது. செவ்வாய்க் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவதற்கு பல்வேறு நாடுகள் பல கோடி ரூபாய்களை செலவழித்து, 30, 32-வது முறைதான் வெற்றி பெற்றார்கள். ஆனால் நாம் அப்படியில்லை. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு வெற்றிகரமாக ராக்கெட்டை அனுப்பினோம். மற்ற நாடுகள் 3 இன்ஜின்களை கொண்ட ராக்கெட்டை பயன்படுத்தினார்கள். அவர்களை விட நம் என்ஜின்கள் சக்தி குறைவானதாக இருந்தாலும் அது சாத்திய மானது.

அதற்கு காரணம், பஞ்சாங்கத்தின் வானியல் வரைபடம் (celestial map). அதில், ஒவ்வொரு கிரகங்களும் எங்கு இருக்கிறது? அந்த கிரகங்களின் ஈர்ப்பு விசை எப்படி இருக்கும்? அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? சூரியனில் இருந்து வரும் வெப்பக்கதிர்கள் எவ்வளவு இருக்கிறது? எப்படி இருக்கிறது என்பதை பல வருஷத்துக்கு முன்பே கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள். அந்த வரைபடத்தை பயன்படுத்தி, பூமியை சுற்றி, நிலவைச் சுற்றி, ஒரு விளையாட்டுப் பொருளைத் தட்டி தட்டி விளையாடு வது போல, செவ்வாய்கிரகத்தில் ராக்கெட்டை விழவைத்தார்கள். மற்ற நாடுகளை விட குறைவான செலவில் இது சாத்தியமானது அப்படித்தான்’ என்று கூறியிருந்தார்.

மாதவனின் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் பலர் சாடியிருந்தனர். அவரை, தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். ’அறிவியல் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தெரியாத விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது’ என்றும் சரியான பழைய பஞ்சாங்கம் என்றும் அவரைக் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் மாதவன், பழைய பஞ்சாங்கம் என்று கிண்டல் செய்வதற்கு நான் தகுதியானவன்தான். நானும் அறியாமையில் இருந்திருக்கிறேன். ஆனால், இரண்டு இன்ஜின்களோடு ராக்கெட்டை செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பிய சாதனையை மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in