3 டிக்கெட் வாங்கினால் 1 இலவசம்: அதிரடி சலுகை அறிவித்தும் சினிமா தியேட்டருக்கு வராத ரசிகர்கள்!

3 டிக்கெட் வாங்கினால் 1 இலவசம்: அதிரடி சலுகை அறிவித்தும்  சினிமா தியேட்டருக்கு வராத ரசிகர்கள்!

மூன்று டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என அறிவித்தும் ரசிகர்கள் தியேட்டருக்கு வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலிவுட்டுக்கு இது போதாத காலம். பான் இந்தியா படங்களால், தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் வசூல் குவிக்க, இந்தி படங்கள் அட்டர்பிளாப் ஆகி வருவது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு காலத்தில் தொடர் ஹிட் கொடுத்து உச்சத்தில் இருந்த அக்‌ஷய்குமார், இப்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மாதம் ஒரு படம் வெளியாகி வருகிறது.

அப்படி சமீபத்தில் வந்த 'பெல்பாட்டம்', தனுஷுடன் நடித்த 'அட்ரங்கி ரே', 'பச்சன் பாண்டே', 'சாம்ராட் பிருத்விராஜ்', கடந்த 11-ம் தேதி வெளியான 'ரக்‌ஷா பந்தன்' திரைப்படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இதில் சில படங்கள் மோசமான தோல்வியைத் தழுவி இருக்கின்றன.

இதே போல, அதிக எதிர்பார்ப்பில் இருந்த அமீர்கானின் ’லால் சிங் சத்தா’ படமும் கடந்த 11-ம் தேதி வெளியாகி, வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வராததால், சுமார் 30 சதவீத காட்சிகள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டன. சில காட்சிகளுக்கு வெறும் 15 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ், தங்கள் இணையதளத்தில் ஒரு சலுகையை அறிவித்தது. அதன்படி, இந்தப் படங்களுக்கு மூன்று டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்று அறிவித்திருந்தது. இந்தச் சலுகை கடந்த 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரசிகர்கள், தங்கள் திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த பிவிஆர் நிறுவனத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. சலுகை அறிவித்தும் ரசிகர்கள் வரவில்லை. இது திரையரங்க நிர்வாகத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரம் இந்தியில் வெளியாகி இருக்கிற தெலுங்கு படமான ’கார்த்திகேயா 2’ நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in