தீபம் பட போஸ்டர்
தீபம் பட போஸ்டர்இளையராஜாவும் சிவாஜியும் இணைந்த முதல் படம்

’பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே!’ : சிவாஜியும் இளையராஜாவும் இணைந்த முதல் படம்!

சிவாஜி, விஜயகுமாருக்கு அம்மாவாக நாட்டியப் பேரொளி பத்மினி!

அண்ணன் - தம்பி கதைகள் நிறையவே வந்திருக்கின்றன. அதேபோல், சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் எங்கோ வளருபவரைப் பற்றிய கதைகளும் வந்திருக்கின்றன. சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்து, வாழ வைத்தவரின் மகளை தன் சகோதரியாகவே பாவித்து வாழ்கிற இளைஞனின் கதைகளும் வந்திருக்கின்றன. இந்த மூன்றையும் சேர்த்தால், தகதகவென ஜொலிப்பதுதான் சிவாஜியின் ‘தீபம்’ திரைப்படம்!

சோமுவும் கண்ணனும் சகோதரர்கள். அப்பா இல்லாத அவர்களுக்கு அம்மாதான் எல்லாமே! ஒருமுறை புகைப்படக் கலைஞர் ஒருவர், மூவரையும் போட்டோ பிடித்துக் கொடுக்க, ‘நான் முந்தி பாப்பேன், நீ பின்னாடி பாக்கணும்’ என்று அண்ணன் - தம்பிக்குள் சண்டை. இதில், அந்த சட்டமிடப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு தம்பியை அண்ணன் அடித்துவிட, அம்மா கோபமாகி மூத்தவனுக்கு சூடு போட, ஊரை விட்டு ஓடுகிறான் சோமு. ரயிலில் ஒருவர் அவனுக்கு அடைக்கலம் தந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவரின் மகள் சிறுமியாக இருக்கிறாள். சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் அந்த மனிதர், சோமுவை இறந்துவிட்ட தனது மகன் ராஜாவாகவே வளர்க்கிறார். சோமு ராஜாவாகிறான். அவரின் வழியில், கடத்தல் தொழில்களில் ஈடுபடுகிறான்.

அவர் இறந்துவிடுகிறார். அவரின் மகளை தன் தங்கையாக பிரியத்துடன் வளர்க்கிறான் ராஜா என்ற சோமு. தொழில் நிறுவனங்களெல்லாம் நடத்தி மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் அவனுக்கு குடியும் பெண்களும்தான் பொழுதுபோக்கு. தினம் தினம் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் ராஜா, தன் தங்கையின் தோழியான ராதாவைச் சந்திக்கிறான். காதல் வசப்படுகிறான். அப்படிக் காதலித்தது முதலே தன் பழைய கெட்ட சகவாசங்களையெல்லாம் புறந்தள்ளுகிறான். பெண்களுடனான தொடர்பைத் துண்டிக்கிறான். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுகிறான்.

தன்னிடம் வேலை செய்யும் ராமையாவின் மகள்தான் ராதா என்பதை அறிந்து, அவரிடம் பெண் கேட்கிறான். அவர் மகிழ்ந்து போகிறார். ஆனால் ராதாவோ, ”உங்க முதலாளியோட குணங்களெல்லாம் எனக்குத் தெரியும். நான் மட்டுமில்ல, எந்தப் பெண்ணும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டா’’ என்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறாள். இதைக் கேட்டு நொந்துபோகிறான் ராஜா.

இந்தநிலையில், நன்றாகப் படித்தும் வேலையின்றி வறுமையில் உழன்று தவிக்கும் கண்ணன், ராஜாவிடம் வந்து வேலை கேட்கிறான். அவனுக்கு வேலை கொடுக்கிறான். ராமையாதான் அவனுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். அப்போது கண்ணனுக்கும் ராதாவுக்கும் பழக்கம், காதலாக மாறுகிறது. வேலையில் ஒவ்வொரு பதவியாகக் கொடுத்து உயர்த்தும் ராஜா, கண்ணனுக்கு தன் கெஸ்ட் ஹவுஸில் இடம் கொடுக்கிறான். ஒருகட்டத்தில், தான் காதலித்து வரும் ராதாவைக் கண்ணன் காதலிக்கிறான் என அறிந்து, ஆவேசமாகி, துப்பாக்கியுடன் கண்ணனை சந்திக்கச் செல்கிறான். அப்போதுதான் கண்ணன், தன் தம்பி என அறிந்துகொள்கிறான். கோபத்தை மறந்து பாசம் காட்டுகிறான். கண்ணனுக்கும் ராதாவுக்கும் கல்யாணம் செய்துவைக்கிறான்.

ஆனால், இருவருக்கும் கல்யாணம் செய்துவைப்பது போல் செய்துவைத்துவிட்டு ராதாவை அனுபவிக்க ராஜா இப்படித் திட்டமிட்டிருக்கிறான் என கண்ணனை நம்பவைக்கிறார்கள். கண்ணன், இதில் மனமுடைந்து, குடிப்பழக்கத்துக்கும் பெண்களுடனான சல்லாபத்துக்கும் பலியாகிறான். முதலாளி ராஜாவை வெறுக்கிறான். ஆசை ஆசையாகக் காதலித்த மனைவி ராதாவையும் சந்தேகிக்கிறான்.

இதன் உச்சக்கட்டமாக, சில முடிவுகளை மனம் நொந்த நிலையில் எடுக்கிறான் ராஜா. அப்போது, கண்ணனுக்கு ராஜாதான் தன் உண்மையான அண்ணன் என்பது தெரியவருகிறது. இதற்கு முன்னதாகவே, ராஜாவை சந்தேகிக்கும் ராதா கூட, அவனின் நல்ல மனதைப் புரிந்துகொள்கிறாள். இருவரும் ஓடிவந்து ராஜாவைப் பார்க்கும் போது, ராஜா இறந்துகிடக்கிறான்.

சிவாஜியின் யதார்த்தமான நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் ‘தீபம்’. சிவாஜி, சுஜாதா, விஜயகுமார், சங்கீதா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சுருளிராஜன், மனோரமா, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ராமதாஸ், சத்யப்ரியா முதலானோர் நடித்தார்கள்.

சுஜாதா சினி ஆர்ட்ஸ் பேனரில், கே.பாலாஜி தயாரித்தார். வசனங்களை ஏ.எல்.நாராயணன் எழுதினார். ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, புலமைப்பித்தன் பாடல்களை எழுத, கே.விஜயன் இயக்கினார்.

சிவாஜி விரும்பும் காதலியாக சுஜாதா. சிவாஜியின் தம்பியாக விஜயகுமார். சிவாஜியின் டிரைவராக ரஹீம் பாய் எனும் கேரக்டரில் நாகேஷ். சுஜாதாவின் அப்பா ராமையாவாக எஸ்.வி.சுப்பையா. சிவாஜியின் வளர்ப்புத் தங்கையாக சங்கீதா. சிவாஜி அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக மனோரமா, எஸ்.வி.ராமதாஸ், ஒய்.ஜி.மகேந்திரன். அவரவருக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை எல்லோருமே சிறப்பாகச் செய்தார்கள்.

இந்தப் படத்தில் ஒரு ஆச்சரிய சுவாரஸ்யம்... சிவாஜியும் விஜயகுமாரும் சிறுவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு அம்மாவாக நடித்த நடிகை யார் தெரியுமா? நாட்டியப் பேரொளி பத்மினி. கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

கே.பாலாஜியின் படங்களென்றாலே பகட்டான பங்களாக்களும் விலையுயர்ந்த நவீன கார்களும் காட்டப்படும். இந்தப் படத்திலும் அப்படித்தான். ரகம்ரகமான கார்களைக் காட்டியிருப்பார்கள். அதேபோல், பங்களா செட்டுகளும் பிரமிப்பாக இருக்கும். படத்தின் டைட்டிலில் ’நடிப்புச் செல்வி’ சுஜாதா என்று அடைமொழியிட்டு குறிப்பிட்டிருப்பார்கள்.

சிவாஜிக்கோ சுஜாதாவுக்கோ நடிப்பதற்கு மிகப்பெரிய வேலையோ கதையில் திடுக் திருப்பங்களோ இருக்காதுதான் என்றபோதும், நடிகர் திலகம் தன் வழக்கமான ஸ்டைல் நடையையும் பார்வையையும் அளவான வசனங்களையும் பேசி அசத்தியிருப்பார்.

‘ராஜா யுவராஜா நாள் தோறும் புது ரோஜா’ என்றொரு பாடல். ‘பேசாதே வாயுள்ள ஊமை’ என்றொரு பாடல். இந்த இரண்டு பாடல்களையும் டி.எம்.எஸ். பாடியிருப்பார். முக்கியமாக, கே.ஜே.ஜேசுதாஸும் ஜானகியும் இணைந்து, ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே’ என்ற பாடல் அட்டகாசமான டூயட் பாடலாக அமைந்தது. விஜயகுமாருக்கும் சுஜாதாவுக்குமான பாடல் இது. மிகப்பெரிய ஹிட்டடித்தது.

அதேபோல், டி.எம்.எஸ். - ஜானகி பாடிய ‘அந்தப்புரத்தில் ஒரு மகாராணி. அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்’ என்ற பாடல், இன்று வரை இரவை இதமாக்கும் பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது வந்த சிவாஜி படங்களை விட, அதிக வசூல் குவித்து, நல்லதொரு ஹிட் படமாகவும் அமைந்தது ‘தீபம்’.

இந்தப் படத்துக்கு இசை யாரென்று சொல்லவே இல்லையே! 1976-ம் ஆண்டு ‘அன்னக்கிளி’ மூலம் நமக்கெல்லாம் அறிமுகமான இசைஞானி இளையராஜா, வரிசையாகப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியான ‘தீபம்’ படத்துக்கும் இளையராஜாதான் இசையமைத்தார்.

ஆக, 76-ம் ஆண்டின் மத்தியிலே அறிமுகமான கையுடன், கே.பாலாஜி, இளையராஜாவை புக் செய்து இந்தப் படத்தின் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தது அதுவே முதல்முறை. ஆமாம்... ‘தீபம்’ படம்தான் சிவாஜியும் இளையராஜாவும் இணைந்த முதல் படம். முதல் படத்திலேயே, அனைத்துப் பாடல்களையும் வெற்றிப் பாடலாக, அழகிய மெலடி கீதங்களாக இசைத்துக் கொடுத்தார் இளையராஜா.

படம் வெளியாகி, 46 ஆண்டுகளாகின்றன. இன்னும் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’யும் ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே’வும் நம்மை மயக்கிக்கொண்டே இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in