
அமெரிக்காவில் பஞ்சாப்பைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அமன் தலிவால் மர்மநபரால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மான்சா நகரைச் சேர்ந்த நடிகர் அமன் தலிவால். இவர் 'அஜ் தே ராஞ்சே', 'சகா - தி தியாகிகள் ஆஃப் நங்கனா சாஹிப்', 'டிஎஸ்பி தேவ்' மற்றும் 'கிஸ்ஸா பஞ்சாப்' போன்ற படங்களில் நடித்துள்ளார். பஞ்சாபி படங்கள் மட்டுமின்றி ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த' ஜோதா அக்பர்' உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தனது மேற்படிப்புக்காக டெல்லிக்குச் சென்று பின்னர் மாடலிங்கில் அமன் அடியெடுத்து வைத்தார். ' ஏக் குடி பஞ்சாப் டி' மற்றும்' விர்சா' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அமன்,அமெரிக்கா சென்றிருந்தார்.
அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அமன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஜிம்மிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டினார். இதன் பின் நடிகர் அமன் தலிவாலை அந்த மர்ம நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அவர் படுகாயமடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படுகாயமடைந்த அமனின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமனை கத்தியால் குத்தியவர் யார், எதற்காக குத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய நடிகர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.