‘புதுப்புது அர்த்தங்கள்' சொன்ன ’இன்னிக்கி செத்தா நாளைக்கி பால்!’

கே.பாலசந்தரும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசிப்படம்!

‘புதுப்புது அர்த்தங்கள்' சொன்ன ’இன்னிக்கி செத்தா நாளைக்கி பால்!’

ஆங்கிலத்தில் ‘பொஸஸிவ்னெஸ்’ என்றொரு வார்த்தை உண்டு. ங்கடம் என்ற வார்த்தைக்கும் தர்மசங்கடம் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. அதேபோல், அன்புக்கும் அன்புத்தொல்லைக்கும் வித்தியாசத்தை உணரமுடிகிறதுதானே. ஒரு கணவனுக்கு மனைவியானவள் ‘பொஸஸிவ்னெஸ்’ குணத்துடன் இருந்து ‘அன்புத்தொல்லை’ கொடுத்தால்... ‘எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்று இறுக்கிக்கொண்டால்... எப்படியிருக்கும்? இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்று விளக்கியிருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

மணிபாரதி எனும் திரைப்பாடகர். அவர் குரலுக்கும் பாட்டுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். சொல்லப்போனால், மிகப்பெரிய ரசிகையர் கூட்டமே உண்டு. மணிபாரதியைப் பார்த்துவிட்டு, அவர் அழகில் மனம் பறிகொடுக்கிறார் கெளரி. ‘சாக்லெட் வேண்டும்’, ‘புடவை வேண்டும்’, ‘கார் வேண்டும்’ என்று கேட்பது போல், ‘மணிபாரதியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என்று அம்மா ‘காக்கிநாடா’ காஞ்சனம்மாவிடம் அடம்பிடிக்கிறார் கெளரி. அம்மாவும் பேசி சம்மதம் பேசி மணிபாரதிக்குத் திருமணம் செய்துவைக்கிறார்.

மணிபாரதி கேரக்டரில் ரகுமான். கெளரி கதாபாத்திரத்தில் கீதா. அவருடைய அம்மா காக்கிநாடா காஞ்சனம்மாவாக ஜெயசித்ரா. ரகுமான் உதவியாளராக விவேக். நண்பராக ஜனகராஜ். நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும் திருமண வாழ்க்கை. ஆனால், ரசிகைகளோ வேறு பெண்களோ விழாக்களில் ரகுமானிடம் நெருங்கிப் பேசிவிட்டால், வீட்டுக்கு வந்ததும் வீட்டையே ரெண்டுபடுத்தி விடுவார் கீதா.

‘நடந்தால் குற்றம், பேசினால் குற்றம், சிரித்தால் குற்றம், தொட்டால் குற்றம்’ என்று எதற்கு எடுத்தாலும் ரகுமானை வறுத்தெடுத்துக் கொண்டே இருப்பார் கீதா. ஒருகட்டத்தில், ‘போதும்டா சாமீ’ எனும் முடிவுக்கு வந்து நிம்மதியைத் தேடி, டெல்லி போவதாகச் சொல்லிவிட்டு, எங்கோ போய்விடுவார் ரகுமான்.

அவ்வளவுதான். வீடு பரபரப்பாகும். பிரபலம் என்பதால் போலீஸுக்கும் சொல்லாமல் இருப்பார்கள். இந்தநிலையில், ரகுமான் கோவா செல்வார். வழியில்... இருளில் ஓடிவந்துகொண்டிருப்பார் ஜோதி. தன் கணவரே தன்னை நடனமாட கட்டாயப்படுத்துவதுடன் ஒருகட்டத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்த முனைவதாலும் அங்கிருந்து கிளம்பி, கணவனிடம் இருந்து தப்பித்தால் தேவலை என்று வருவார் ஜோதியாக வரும் சித்தாரா.

ரகுமான் பயணிக்கும் அதே பேருந்தில் ஏறுவார் சித்தாரா. தமிழில் சித்தாரா அறிமுகமான படம் இது. டைட்டிலில் அறிமுகம் என்று சித்தாரா பெயர் வரும். அதேபோல், நடிகர் நடிகைகள் பெயரையெல்லாம் போட்டுவிட்டு, மற்றும் ‘சாலிடர்’ என்று டிவியின் பெயரும் இடம்பெறும். பாலசந்தர் டச் இது.

மனைவியின் டார்ச்சரால் ஓடிவந்த ரகுமான், கணவரின் தொல்லையைச் சகிக்கமுடியாமல் ஓடிவந்த சித்தாரா. இருவரும் பேசிக்கொள்வார்கள். பரஸ்பரம் புரிந்துகொள்வார்கள். தோழமை உணர்வுடன் பழகத் தொடங்குவார்கள்.

அங்கே கோவாவில், வயதான, மூத்த தம்பதியாகத் திகழும் பூர்ணம் விஸ்வநாதனையும் செளகார் ஜானகியையும் பார்ப்பார்கள். அவர்கள் வீட்டில் ரகுமானும் சித்தாராவும் தங்குவார்கள். பழுத்த தம்பதியிடமிருந்து உண்மையான அன்பையும் வாஞ்சையான பாசத்தையும் அறிந்து சிலிர்ப்பார்கள். ஒருகட்டத்தில் பூர்ணம் விஸ்வநாதனும் சௌகாரும் இறக்க நேரிடும். இந்த உறவு அவர்களுக்கு எதையோ உணர்த்தும்.

இந்தநிலையில், உதவியாளர் விவேக்கிற்கு மட்டும் கோவாவில் இருக்கும் உண்மையைச் சொல்லியிருப்பார் ரகுமான். ஒருகட்டத்தில், ஜெயசித்ராவும் கீதாவும் விவேக்குக்கு விஷயம் தெரியும் என்பதை அறிந்து கொள்வார்கள். ஏதேதோ சொல்லி வரச்சொல்லுவார்கள். ரகுமானும் சித்தாராவும் வருவார்கள்.

கொஞ்சம்கொஞ்சமாக, தன் நிலையை இழப்பார் கீதா. ஒருவிதமான மனநோய்க்கு ஆளாவார். ரகுமான் சித்தாராவுடன் இருந்தாரா, மனைவி கீதாவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா என்பதை முடிவு சொல்லும்.

கவிதாலயா பேனரில், தன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரகுநாதரெட்டியின் கேமரா ஜாலத்தில், இளையராஜாவின் துணையுடன் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படைத்திருப்பார் பாலசந்தர்.

ரகுமான் கச்சிதமான நடிப்பை வழங்கியிருப்பார். அவருக்கு நிழல்கள் ரவி குரல் கொடுத்திருப்பார். நண்பர் ஜனகராஜின் லூட்டி, காமெடியை அள்ளிக் கொடுத்தது. எந்த வரையறைகளுமில்லாமல் பெண்களுடன் அவர் பழகுவதும் ஒவ்வொருவரிடமும் பொய்பொய்யாகச் சொல்லுவதும் ரகளையாக இருக்கும். ஒழுக்கமாக இருக்கும் கணவனை மனைவி சந்தேகப்படுகிறாள். ஒழுக்கத்துடன் தான் இருப்பேன் என்ற மனைவியை கணவன் சீரழிக்க முற்படுகிறான்.

ஒழுக்கம் குறித்த கவலைகளே இல்லாமல் வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்கிறார் ஜனகராஜ். ‘பணமிருந்தால் எதையும் வாங்கலாம், புருஷனையும் கூட...’ என்கிற ஆதிக்க சிந்தனையுடன் ஜெயசித்ரா இருக்கிறார். ‘இனிது இனிது காதல் இனிது’ என்றும் ‘முழுமைபெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’ என்றும் வாழ்ந்து உணர்த்துகிற ஜோடியாக செளகாரும் பூர்ணமும்! இப்படியான கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு, அழகிய திரைக்கதையாக்கி, அற்புதமானதொரு படைப்பைக் கொடுத்தார் இயக்குநர் சிகரம்.

கீதாவின் நடிப்புக்குத்தான் முதல் மார்க். அந்த முரட்டுத்தனமான அன்பை, தன் கண்களாலேயே பாதி வெளிக்காட்டிவிடுவார். மிச்சமுள்ள நடிப்பை முகபாவங்களாலும் தன் நகம் கடிக்கும் மேனரிஸத்தாலும் அழுகையாலும் நிரப்பிவிடுவார். சித்தாராவும் கண்ணியமான நடிப்பை வழங்கியிருப்பார். ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அறிமுகப்படுத்திய விவேக்கிற்கு இதிலும் ஒரு கதாபாத்திரம். அவரின் மிமிக்ரித் திறனை வெளிப்படுத்த ‘ரஜினி’ மாதிரியும் ‘நம்பியார்’ மாதிரியும் பேசவைத்திருப்பார் இயக்குநர். விவேக் சொன்ன ‘இன்னிக்கி செத்தா நாளைக்கி பால்’ இன்றைக்கு வரை, டிரெண்டிங்கில் இருக்கிறது.

வாலியின் பாடல்கள். இளையராஜாவின் இசை. அமர்க்களம் பண்ணியிருப்பார் இசைஞானி. ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...’ பாடலை இன்றைக்கும் ஏக்கத்துடன் கேட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் பலரும். ‘கேளடி கண்மணி பாடகன் சங்கதி’யில் எஸ்பிபி கொஞ்சிக் குழைந்து ஏக்கத்தையும் விருப்பத்தையும் துக்கத்துடன் சொல்லியிருப்பார். ‘எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்’ என்ற ஜாலியான பாடலில் இசையும் ஜாலி பண்ணியிருக்கும்.

’எடுத்து நான் விடவா.. என் பாட்டை தோ... தோ... தோ... தோழா’ என்று இளையராஜாவும் எஸ்பிபி-யும் கலகலக்க வைத்திருப்பார்கள். ‘குருவாயூரப்பா குருவாயூரப்பா...’ அழகிய மெலடியாக அமைந்தது. நடுவே, ‘குருவாயூரப்போ...’ என்று பாலு ஸ்டைல் பண்ணியிருக்கும் ரசனையே அழகு! சித்ராவும் அசத்தியிருப்பார். ‘எல்லோரும் மாவாட்டக் கத்துக்கணும்’ பாடலை ஷைலஜாவும் இணைந்து பிரமாதம் பண்ணியிருப்பார்.

ஜெயசித்ராவின் தெலுங்கும் தமிழும் கலந்த பேச்சும், தெனாவட்டாக அமர்ந்து ராஜாங்கம் பண்ணும் ஸ்டைலும் அமர்க்களம். வேலைக்காரியை அழைத்துக்கொண்டே இருப்பார். அங்கே பார்த்தால் வேலைக்காரப் பெண்மணியின் மகள், தலைமுடியை ரசித்து சீவிக்கொண்டிருப்பார். ஆத்திரமான ஜெயசித்ரா, கத்திரிக்கோலால், அவளுடைய முடியை வெட்டிவிட்டு, ‘உம் பொண்ணுக்கு புத்திமதி சொல்லு’ என்று அலட்சியம் காட்டுவார். அடுத்த நொடி, பணத்தை எடுத்து, ‘உன் பொண்ணுக்கு காலேஜ் ஃபீஸ் கேட்டியே... இந்தா...’ என்பார். அவரின் கேரக்டரை இந்த ஆரம்பக்காட்சியிலேயே விளக்கியிருப்பார் இயக்குநர்.

நடுவே கிரிக்கெட் வீரர், அவருக்கு இருக்கும் யமுனாவின் மீதான காதல், ஒருகட்டத்தில் கீதாவுக்கு கிரிக்கெட் வீரருடன் மணம் முடித்துவைக்கிற திட்டம். இதைக் கேட்டு யமுனா ‘ஏமாற்றிவிட்டானே பாவி’ என்று தற்கொலை செய்வது என்பது தனியே வந்து இதுவும் ஒருவகையில் கதைக்குத் தேவை என்பதாக இணைந்துகொள்ளும்.

இன்னொன்றையும் சொல்லித்தானே ஆகவேண்டும். ‘சிந்துபைரவி’யில் கர்நாடக சங்கீத இசையுடன் இயக்குநர் சிகரமும் இசைஞானியும் இணைந்தார்கள். ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் வெஸ்டர்ன் இசையுடன் தூள்கிளப்பியவர்கள், இந்தப் படத்துடன் பிரிந்தும் போனார்கள். அதன் பின்னர் பாலசந்தரும் இளையராஜாவும் இணையவே இல்லை.

1989-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தீபாவளியன்று வெளியானது ‘புதுப்புது அர்த்தங்கள்’. படம் வெளியாகி 33 ஆண்டுகளாகின்றன. மனதை மயிலிறகால் தடவிக்கொண்டிருக்கிற ‘கல்யாண மாலை’ பாடலையும் ‘இன்னிக்கி செத்தா நாளைக்கி பால்’ எனும் காமெடியையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்; விவேக்கின் காமெடியைக் கண்டு சிரித்துக்கொண்டே இருக்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in