நயன்தாராவைத் துரத்தும் சைக்கோ!

நயன்தாரா
நயன்தாரா

மலையாளத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விப் படங்களில் நடித்திருந்த நயன்தாராவை தமிழ்நாட்டின் செல்லப் பெண்ணாக மாற்றியது அவர் இங்கே அறிமுகமான ‘ஐயா’ படம். அதன்பிறகு அவரைக் கனவுக் கன்னி என்கிற உயரத்துக்குக் கொண்டுபோன படங்கள் என்றால் ‘பில்லா’வும் ‘யாரடி நீ மோகினி’யும் தான். ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என ரவுண்டு கட்டிய நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற அந்தஸ்துக்கு உயர்த்திய படங்கள் ‘நானும் ரவுடிதா’னும் ‘கோலமாவு கோகிலா’வும்.

தமிழில் நாயகிகளுக்கு முக்கியத்துவமளிக்கும் வுமன் சென்ட்ரிக் படங்கள்’ எல்லாம் அவ்வளவாய் போகாத நிலையில் நயன்தாரா நடித்த வுமன் சென்ட்ரிக் படங்கள் மட்டும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. இந்த லாபக் கணக்கின் பின்னணியில் நயன்தாராவின் வசீகரம் மட்டும் அடங்கியிருக்கவில்லை... அவர் தேர்ந்தெடுத்த அட்டகாசமான சஸ்பென்ஸ் - த்ரில்லர் திரைக்கதைகளும் முக்கிய காரணமாக அமைந்தன.

அந்த வகையில், தனது 40 வயதில் முதிர்ச்சியை மீறிய வெற்றி கிடைக்க வேண்டுமானால் தனது வுமன் சென்ட்ரிக் படங்கள், மாஸ் கதாநாயகர்களின் படங்கள் ஆகிய இரண்டிலும் முற்றிலும் புதிய கதைக்களமும் கதாபாத்திரமும் அவசியம் என்கிற சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு படங்களைத் தேர்வு செய்தார் நயன்தாரா.

அவரது தேடலில் ஒரு கட்டத்தில் சஸ்பென்ஸ் - த்ரில்லர் கதைகள் அதிகம் இடம் பிடிக்கத் தொடங்கின. குறிப்பாக, கொலைகாரர்களைக் கொல்லும் கதாபாத்திரம் அல்லது சைக்கோ கொலைகாரர்களால் துரத்தப்படும் கதாபாத்திரம் என இரண்டையும் ஆர்வத்துடன் லைக் செய்யத் தொடங்கினார்.

அந்த வரிசையில் ‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் ஐபிஎஸ் பயிற்சி எடுக்கும் போலீஸ் அதிகாரியின் மகளாக, தடய அறிவியலில் கெட்டிக்கார ஐபிஎஸ் அதிகாரி மகிமாவாக நடித்திருந்தார் நயன்தாரா. அவரைக் கொல்வதன் மூலம் தனது ராஜ்ஜியத்தைக் கப்பாற்றிக்கொள்ள முயலும் அரவிந்த் சாமியின் துரத்தல் முயற்சிகளிலிருந்து அவர் தப்பிப்பது படத்தில் விறுவிறுப்பாக இருக்கும்.

அந்தப் படத்துக்குப் பிறகு, காத்திருந்து பழிவாங்கும் ஆவி - ஹாரர் கதையில் நயன்தாரா நடித்தால் அதுவும் டெரராக இருக்கும் என்பதை ரசிகர்களுக்குச் சொன்ன படம் ‘மாயா’.

கணவரைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் அப்சராவாக ‘மாயா’ படத்தில் வருவார் நயன்தாரா. கடும் பண நெருக்கடியுடன் வாழும் அவர், ‘மாயவனம்’ என்கிற வியாபாரம் ஆகாத பேய்ப் படத்தைப் பார்க்கத் துணிந்து செல்வார். காரணம், அந்தப் படத்தை இரவுக் காட்சியில் தனியாளாகப் பார்ப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் பரிசு என அறிவித்திருப்பார் அப்படத்தின் இயக்குநர்.

பண நெருக்கடியால் வாடும் அப்சரா, அந்தப் படத்தைப் பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்யமான அனுபவங்களும் அதன்பின்னர் அவர் என்னவாக மாறுகிறார் என்பதும் தான் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்த ‘மாயா’. அந்தப் படம் வெளியான பின் ரசிகர்கள் ஒருவித நடுக்கத்துடன் தான் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்களை எதிர்நோக்கினார்கள்.

ரசிகர்களின் அந்தப் பயத்தைப் போக்கும் விதமாக அமைந்தது ‘நானும் ரவுடிதான்’ படம். அதில் வில்லன் கிள்ளிவளவனாக வரும் பார்த்திபனைக் கொல்லவரும் காதம்பரி என்கிற காது கேட்காத பெண்ணாக வருவார் நயன்தாரா. அந்தப் படத்தில் பட்டையைக் கிளப்பிய நயன்தாராவின் பழிவாங்கும் நடிப்பைக் கொண்டாடி ரசித்தார்கள் ரசிகர்கள்.

அதன்பிறகு ஆவி, பேய், கொலை என நயன்தாரா தேர்ந்தெடுத்த படங்களின் வரிசையில், ‘டோரா’ முக்கியமான பழிவாங்கும் பேய்ப் படம். ‘டோரா’வில் பவளக்கொடியாக வரும் நயன்தாராவும் அவரது அப்பாவாக வரும் தம்பி ராமைய்யாவும் வாடகைக் கார் தொழில் செய்வதற்காகப் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்குவார்கள். அதனுடன் வில்லங்கத்தையும் அவர்கள் விலை கொடுத்து வாங்கியிருப்பது அதில் ஒளிந்திருக்கும் ஆவி கொலை செய்யத் தொடங்கும்போதுதான் வெளியே தெரியவரும்.

நயன்தாரா
நயன்தாரா

அந்தக் காரில் மறைந்திருக்கும் ஆவிக்கும் சிறு வயது நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு என்பது தான் ‘டோரா’வில் நயன்தாராவின் கதாபாத்திரம். அந்தப் படம் தோல்வி என்ற போதும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமில்லை என்கிற அளவுக்குத் தப்பித்தது. விளைவாக, நயன்தாரா ஆவி மற்றும் சைக்கோ கொலைகாரன் கதைளை ஏற்கத் தொடங்கினார். அந்த லிஸ்ட்டில், முதலுக்கு மோசமில்லாத படமாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது ‘இமைக்கா நொடிகள்’.

அந்தப் படத்தில் நயன்தாரா ஒரு சிபிஐ அதிகாரி. பெங்களூருவில் அடுத்தடுத்து சில இளைஞர்கள் கடத்திக் கொலைசெய்யப்பட, அதை, நயன்தாரா தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரிக்கத் தொடங்குகிறது. ஏற்கெனவே, நயன்தாராவால் கொல்லப்பட்ட ஒரு குற்றவாளியான ராம் கஷ்யப் தான் இந்தக் கொலைகளைச் செய்வதாகத் தகவல் வர அதிர்ந்து போவார் நயன்தாரா. அதன் பிறகு விரியும் ஃப்ளாஷ் பேக்கில், நயன்தாரா அதற்கு முன்பு எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தார் என்பது விளங்கும்.

‘ஐரா’ படத்தில், வலியப்போய் பேய்களை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவரும் யூடியூபர் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு! ஊடகத் துறையில் பணிபுரியும் நயனுக்கு யூடியூப் சேனல் தொடங்கி புகழ்பெறவேண்டும் என்பது லட்சியம். இந்நிலையில். வீட்டுக்கு அடங்காத நயன்தாராவுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்கிறார். பாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து ‘செட்-அப்’ திகில் காட்சிகளை உருவாக்கி, அந்தக் காணொலிகளைத் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு, தான் விரும்பியபடியே யூடியூப் பிரபலமாகவும் ஆகிவிடுவார்.

ஒரு கட்டத்தில் திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய்கள் வந்து தங்கிக்கொண்டு நயன்தாராவைக் குறிவைக்கின்றன. தங்களைப் பற்றி காமெடி வீடியோ செய்த நயனைப் பழிவாங்க அவரது பாட்டியைக் கொன்றுவிட்டு நயன்தாராவுக்காக காத்திருக்கின்றன. பேய்களின் கோபத்தை சம்பாதித்துக்கொண்ட நயன்தாரா, அதிலிருந்து மீள அடுத்து என்ன செய்கிறார் என்று படம் போகும்.

உலகமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நேரம். அப்போது, ஊரடங்கை மையமாகக் கொண்ட ஒரு கதைக் களத்தில் ஒரு நவீன காலப் பேயுடன் சூசன் என்ற கதாபாத்திரத்தில் வந்து நயன்தாரா போராடும் கதையாக ‘கனெக்ட்’ வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாராவின் கணவரான வினய் ஒரு மருத்துவர். அவர் கோவிட் தொற்றால் இறந்ததும் நயனுக்கும் அவரது மகளுக்கும் நயனின் அப்பா சத்யராஜ்தான் ஆறுதல். கொரோனா ஊரடங்கு காரணமாக மகளிடமும் பேத்தியிடமும் வீடியோ காலில் அவ்வப்போது வந்து ஆறுதலாகப் பேசுவார் சத்யராஜ். ஆனால் எதிர்பாராதவிதமாக நாயனுக்கும் அவரது மகளுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுவிட, வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அப்போது நயனின் மகள் செய்யும் ஒரு காரியத்தால் தேடி வந்து அந்தச் சிறுமியின் உடலுக்குள் புகுந்துகொள்கிறது ஒரு பொல்லாத பேய். யாரும் நேரில் வந்து உதவி செய்யமுடியாத பொதுமுடக்க காலத்தில் அந்த அடங்காப் பேயைத் தனியொரு ஆளாக எப்படி அடக்குகிறார் என்பதில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன் ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார் ஆனார்.

‘ஐரா’வைத் தொடர்ந்து நயன்தாரா தேர்வு செய்த சைக்கோ கொலைகாரன் கதைதான் ‘கொலையுதிர்காலம்’. பிரிட்டனின் சஸ்ஸக்ஸ் பகுதியைச் சேர்ந்த பணக்காரர் ஒருவரின் மனைவி அபா லாஸன். அவர் இந்தியாவில் ஆதரவற்றோர் அமைப்பு ஒன்றிலிருந்து ஸ்ருதி என்கிற குழந்தையைத் தத்தெடுக்கிறார். அவர்தான் வளர்ந்து பெரிதாகும் நயன்தரா.

சாகும் தருவாயில் தனது எஸ்டேட், பங்களா உள்ளிட்ட தன் சொத்துகள் அனைத்தையும் ஸ்ருதிக்கே எழுதிவைக்கிறார் லாஸன். அந்தச் சொத்துகளைக் காப்பாற்றிப் பராமரிக்க இங்கிலாந்திற்கு வருகிறார் நயன்தாரா. வந்த பிறகுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. அபா லாஸனின் அண்ணன் மகன் ஒருவன் நயன்தாரா முன்னால் வந்து நின்று, “நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இங்கிருந்து ஓடிவிடு” என மிரட்டுகிறான். லேடி சூப்பர் ஸ்டார் அந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சுவாரா என்ன?

அவனுக்கு கெட் அவுட் சொல்லி அனுப்பிய இரவில் அந்த மாளிகைக்கு முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் வருகிறான். அவன் நயன்தாராவுக்கு உதவியாக வசிக்கும் ஒவ்வொருவராகக் கொடூரமாகக் கொன்று போடுகிறான். கடைசிக் குறி நயன். தப்பிக்க நினைத்தது கொலைகாரனா... அல்லது கொலைகாரனிடமிருந்து தப்பிக்கப் போராடியது நயன்தாராவா என்பதை அடிவயிறு கலங்க விரித்துக்காட்டியது அந்தப் படம்.

‘கொலையுதிர் கால’த்தைத் தொடர்ந்து நயனின் பாய்ச்சல் ஓர் பார்வை இல்லாத பழிவாங்கும் பெண் புலி கதாபாத்திரமாக அமைந்தது ‘நெற்றிக்கண்’. படத்தின் தலைப்பின்படி உலகைப் பார்க்க இரண்டு கண்கள் இல்லாவிட்டால் என்ன? மூன்றாம் கண்ணாகச் செயல்படும் மனக்கண்ணும் காதும் போதும் என்று இந்தப் படத்தில் சாதித்தார் நயன்தாரா.

இதில் நயன்தாராவுக்கு, முன்னாள் சிபிஐ அதிகாரி வேடம். கார் விபத்தில் சிக்கி பார்வையை இழக்கும் நயன்தாரா, அதனால், தான் மிகவும் நேசித்த புலன் விசாரணை அதிகாரி வேலையை இழக்க நேரிடுகிறது. பார்வை திரும்புவதற்கான மருத்துவச் சிகிச்சையில் தாமதம் ஏற்பட, தன் வளர்ப்பு நாயின் உதவியுடன் அன்றாட வாழ்வைச் சிக்கலின்றி வாழத் தன்னைப் பழக்கிக் கொள்கிறார்.

ஒரு மழை இரவில், பேருந்து நிறுத்தத்தில் கால் டாக்ஸிக்காக தனியே காத்திருக்கிறார். அப்போது, இளம்பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லும் சைக்கோவான அஜ்மல் அவரைப் பார்த்து, ‘தனக்கு சரியான இரை’ என முடிவுசெய்து கால் டாக்ஸி டிரைவர் என்று பொய்கூறி பார்வையற்ற நயனைத் தனது காரில் அழைத்துப்போகிறான்.

ஒரு கட்டத்தில் ஆபத்தை உணர்கிறார் நயன். தன் உயிருக்கு உயிரான நாயையும் அஜ்மல் கொன்றுவிட்டதை அறிந்ததும் அதற்காக எப்படி விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பதை தனது முத்திரை நடிப்பின் மூலம் காட்டியிருந்தார் நயன்தாரா.

சைக்கோ கதாபாத்திரங்களால் நயன்தாரா திரை வெளியில் துரத்தப்படுவது, விரைவில் வெளியாகவிருக்கும் ‘இறைவன்’ படத்திலும் தொடர்கிறது. ஜெயம் ரவி - நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படத்தில், தொடர்ச்சியாக 12 கொலைகளைச் செய்யும் சைக்கோ கொலைகாரனாகப் பாலிவுட்டின் பேரலல் சினிமா திரைக் கலைஞர் ராகுல் போஸ் நடித்துள்ளார்.

இப்படத்தில் நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். தன்னை நெருங்கி வந்து ‘என்கவுண்டர்’ என்கிற பெயரில் சுட்டுகொல்லக் காத்திருக்கும் ஜெயம் ரவியை மிரட்டுவதற்காக அவரது காதலியைக் கொல்ல முடிவெடுக்கிறான் சைக்கோ கொலைகாரன். அவனிடம் நயன் சிக்கினாரா இல்லையா என்பதுதான் கதை.

ஆவி, பேய், சைக்கோ, கொலைகாரன் கதைகளின் மீதான நயன்தாராவின் ஆர்வம் எப்போது குறையும் என்று சொல்லமுடியாது. அதுவரை தனது ரசிகர்களுக்கு தீனி போட்டுக்கொண்டே இருப்பார் நயன்தாரா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in