வெறித்தன சிரிப்பால் தெறிக்கவிட்ட பி.எஸ்.வீரப்பா!

நினைவு நாளில் சிறப்புப் பகிர்வு
வெறித்தன சிரிப்பால் தெறிக்கவிட்ட பி.எஸ்.வீரப்பா!

‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சிரிப்பின் மூலமாகவே, தனியிடம் பிடித்த காமெடி ப்ளஸ் குணச்சித்திர நடிகர் குமரிமுத்து. தனக்கென தனிச்சிரிப்புடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் மதன்பாப். இவர்களெல்லாரும் காமெடியால் கலகலக்கவைத்தவர்கள்.

தமிழ் சினிமாவில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் வேறு விதமானவர்கள். முறைப்பார்கள். விறைப்பாகப் பேசுவார்கள். கொடூரமான வசனங்களால் பயமுறுத்துவார்கள். ஆனால், அந்த வில்லன் நடிகரோ தன் சிரிப்பாலேயே நம்மையெல்லாம் அலறிப் பதறவைத்தார். கிடுகிடுக்கச் செய்தார். சிரிப்பைக் கொண்டே வில்லத்தனத்தின் உச்சம் காட்டிய பி.எஸ்.வீரப்பா, வில்லன் நடிகர்களில் தனித்துவமானவர்!

நடிகராக நமக்கு அறிமுகமாகி, பிற்காலத்தில் தயாரிப்பாளராகப் பல படங்களை வழங்கிய பி.எஸ்.வீரப்பாவின் வாழ்க்கை, மிகச்சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. கோயம்புத்தூர் பொள்ளாச்சிப் பக்கம் காங்கேயம்தான் சொந்த ஊர். வீரப்பாவுக்கு தாத்தாதான் எல்லாமே. பொள்ளாச்சியில் உள்ள தாத்தாவின் வீட்டில்தான் வளர்ந்தார். படித்தார். ‘’உங்க பேரன் நல்லாப் படிக்கிறான். பெரியாளா வருவான்’’ என்று ஆசிரியர்கள் சொல்ல மகிழ்ந்து போனார் தாத்தா. ஆனால் தாத்தாவால் சந்தோஷப்படத்தான் முடிந்தது. படிக்கவைக்க வசதி இடம்தரவில்லை.

சின்னச்சின்னதாக தொழில்கள் செய்தார் வீரப்பா. ஆனால் எதுவும் பெரிய லாபத்தையெல்லாம் தந்துவிடவில்லை. ஒருபக்கம் படிப்பும் நிறுத்தப்பட்டது. இன்னொரு பக்கம் தொழிலும் லாபம் தரவில்லை. விரக்தியும் சோகமுமாக இருந்தவருக்கு ஆறுதலாக அமைந்தது உள்ளூர் நாடகக் குழு. விளையாட்டாக நாடகக் குழு நண்பர்களுடன் கலந்து ஜாலியாகப் பேசினார். ஒருகட்டத்தில் நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். கோயில் திருவிழாவில் வீரப்பா நடித்த நாடகத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ... வீரப்பாவின் நடிப்புக்குக் கைதட்டல், வாணவேடிக்கைகளையும் தாண்டிப் பறந்தது.

அப்படியொரு கோயில் விழாவில் நாடகம். அதைப் பார்க்க கே.பி.சுந்தராம்பாள் வந்தார். வீரப்பாவின் நடிப்பைப் பார்த்தார். வியந்துபோனார். ‘’நல்லா நடிக்கிறியேப்பா. மெட்ராஸ் வா. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’’ என்று சொன்னதுடன் வீட்டு முகவரியும் கொடுத்தார். ஒருகட்டத்தில், கே.பி.சுந்தராம்பாள் சொன்ன ஆலோசனையின்படி, சென்னைக்கு வந்தார் வீரப்பா. அவரைப் பார்த்தார். அந்தக் காலத்தில் மிகப்பெரிய இயக்குநராகத் திகழ்ந்தவர் எல்லீஸ் ஆர்.டங்கன். அவருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதி, அதை வீரப்பாவிடம் கொடுத்துப் போய்ப் பார்க்கச் சொன்னார் கே.பி.சுந்தராம்பாள்.

கடிதத்தை வீரப்பா கொடுத்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் வாய்ப்பைக் கொடுத்தார். 1939-ம் ஆண்டு, ‘மணிமேகலை’ எனும் படத்தில், முக்கிய வேடமொன்றை வீரப்பாவுக்குக் கொடுத்து அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கே.பி.சுந்தராம்பாளும் நடித்திருந்தார். பிறகு அடுத்தடுத்த படங்களில் வீரப்பாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியபடி இருந்தார் டங்கன். எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பி.எஸ்.வீரப்பாவுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல நல்ல நல்ல கதாபாத்திரங்கள், அதாவது கெட்ட கெட்ட கேரக்டர்கள் கிடைத்தன. அந்தக் கதாபாத்திரங்களை வித்தியாசமான குரல் உச்சரிப்பாலும் உருட்டுகிற அக்னிக் கண்களாலும் அசத்திக்கொண்டே வந்தார் வீரப்பா.

அந்தக் காலத்தில், பி.எஸ்.வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் படத்துக்கு வந்ததெல்லாம்கூட நடந்திருக்கிறது. அத்தனைத் தெளிவுறப் பேசும் ஆற்றலும் தமிழில் அதீத ஈடுபாடும் வீரப்பாவுக்கு உண்டு.

எம்ஜிஆர், கலைவாணர் முதலானோர் நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் வில்லனாக நடித்தார் பி.எஸ்.வீரப்பா. படத்தில் அந்தக் காட்சிக்கான வசனம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. வசனத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த வீரப்பா, ஒளிப்பதிவு செய்யப்பட்ட போது, அந்த வசனத்துக்கு நடுவே, ‘ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...’ என்று சிரித்துவிட்டு, வசனத்தை அடுத்துத் தொடர்ந்தார்.

எடுத்து முடித்ததும் பி.எஸ்.வீரப்பா, ’‘மன்னிக்கணும் சார். நடுவுல சிரிச்சா நல்லாருக்குமேனு தோணுச்சு. வேணும்னா திரும்ப நடிக்கிறேன்’’ என்று சொல்ல, இயக்குநர், “அந்தச் சிரிப்பு இருக்கட்டும். வித்தியாசமாவும் இருக்கு. வில்லத்தனத்தின் உச்சமாவும் இருக்கு” என்று சொல்லிவிட... பிறகென்ன... படத்துக்குப் படம் வித்தியாசமான முறையில் தன் சிரிப்பால் வில்லத்தனம் பண்ணினார் வீரப்பா. பிறகு அந்த ஆணவமும் குரூரமும் இணைந்த கலவையிலான சிரிப்பு, ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

தமிழப்பட வில்லன்களில், சிரிப்பிலேயே வில்லத்தனம் காட்டியவர் வீரப்பாவாகத்தான் இருக்கும். அதேபோல வில்லன் நடிகர்களில் பஞ்ச் வசனங்கள் அதிகம் பேசியவரும் வீரப்பாவாகத்தான் இருக்கும். ‘மகாதேவி’ படத்தில், ‘அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று சொல்லும்போதே, மகாதேவியுடன் சேர்ந்து நாமும் கலவரமாகிப் போனோம்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் வில்லத்தனம் ஒருமாதிரி என்றால், ‘நாடோடி மன்னன்’ படத்தில் வேறொரு மாதிரி மிரட்டியெடுப்பார். சிவாஜிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. பி.எஸ்.வீரப்பாவின் சிரிப்புக்கு சிவாஜி ரசிகன். “வீரப்பா, உன் சிரிப்பை விட்டுடாதே. உன்னோட அடையாளமாவே அந்தச் சிரிப்பு ஆயிருச்சு. ஒவ்வொரு படத்துலயும் சிரிக்காம இருந்துடாதே” என்று சிவாஜி பாராட்டினார்.

‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்’ என்று வீரப்பா பேசும் வசனமும் பிரசித்தம். ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் கூட, மணிவண்ணன் ‘பி.எஸ்.வீரப்பா பேசுகிற வசனம்’ என்றே குறிப்பிட்டுச் சொல்லுவார்.

ஜெமினி, பத்மினி, வைஜெயந்திமாலா நடித்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி, மூன்றாவது தலைமுறையினரும் இப்போது வந்துவிட்டார்கள். அவர்களுக்கு, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தைத் தெரியாது. ஆனால் ’கண்ணும் கண்ணும் கலந்து’ என்று பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் ஆடுகிற போட்டி நடனப்பாடலுக்கு நடுவே, ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.வீரப்பா, ‘சபாஷ்... சரியான போட்டி’ என்று சொன்னதை இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, என்.டி.ஆர்., ஜெயலலிதா முதலானோருடன் சினிமாவிலும் நாடகங்களிலும் தொடர்பு கொண்டவராகத் திகழ்ந்த பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எனும் பேனரில் பல படங்களைத் தயாரித்தார். எம்ஜிஆர், மாஸ்டர் கமலஹாசன், தேவிகா நடித்த ‘ஆனந்த ஜோதி’, எஸ்.எஸ்.ஆர், சரோஜாதேவி, விஜயகுமாரி நடித்த ‘ஆலயமணி’ , சிவாஜி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ என எண்ணற்ற படங்களைத் தயாரித்தார். எண்பதுகளில், விஜயகாந்த் முதலான நாயகர்களையும் பயன்படுத்தி படங்களைத் தயாரித்தார். ‘திசை மாறிய பறவைகள்’ எனும் படத்தைத் தயாரித்ததில் தயாரிப்பாளர் எனும் முறையில் மிகப்பெரிய மரியாதையையும் பெற்றார் பி.எஸ்.வீரப்பா.

ஜெய்சங்கரை வைத்து தயாரித்த ‘யார் நீ’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் இரண்டு படங்களைத் தந்தார். இரண்டு படங்களிலும் விஜயகாந்த் நாயகனாக நடித்தார். இராம.நாராயணன் அவர் தயாரிப்பில் மூன்று படங்களை இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, இந்திப் படத்தையும் தயாரித்தார். மிகப்பெரிய நடிகராக வலம் வந்த ராமராஜனின் முதல் இயக்கமான ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தைத் தயாரித்தவரும் பி.எஸ்.வீரப்பாதான்!

வீரப்பா போன்ற கலைஞர்களை நம்முடைய அரசாங்கமும் தமிழ்த் திரையுலகமும் இன்னும் முறையாகவும் உரிய முறையில் கெளரவமாகவும் கொண்டாடவில்லையோ என்றே தோன்றுகிறது. வருத்தமாகத்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தன் குரூரமான பார்வையாலும் தமிழை ஒருவித இறுக்கத்துடன் பல் கடித்துப் பேசுகிற ஸ்டைலாலும் கொக்கரித்து ஆர்ப்பரிக்கும் சிரிப்பாலும் நம்மையெல்லாம் கொள்ளை கொண்ட பி.எஸ்.வீரப்பா, 1911 அக்டோபர் 9-ம் தேதி பிறந்தார். 1998-ம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி மறைந்தார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்... வெறித்தன சிரிப்பால், தெறிக்கவிட்ட வில்லன் பி.எஸ்.வீரப்பாவை மறக்கவே மாட்டார்கள் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in